சொல் பொருள்
1. (வி) 1. நிரம்பு, 2. நிரப்பு, 3. மிகு, 4. முழுமையடை,
2. (பெ) 1. எடை, 2. முழுமை, 3. உறுதிப்பாடு, திண்மை, 4. மிகுதி, பெருக்க, 5. வெள்ளம், 6. மறைத்துக் காக்கவேண்டிவற்றைப் பிறர் அறியாமல் காத்தல்
சொல் பொருள் விளக்கம்
நிரம்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
become full, make full, be plenty, copious, be complete, full, weight, completeness, firmness of mind, abundance, flood, maintain secrecy
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆன் கணம் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர – குறி 217,218 பசுக்களின் கூட்டம் (தம்)கன்றுகளை அழைக்கும் குரலையுடையவாய் கொட்டில்கள் நிரம்புமாறு நுழைய கயன் அகைய வயல் நிறைக்கும் மென் தொடை வன் கிழாஅர் – மது 92,93 குளத்தின் நீர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய(நீரை முகந்து) வயலை நிரப்பும் மென்மையான கட்டுக்களையுடைய வன்மையான ஏற்றப்பொறியின் ஓசையும் நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி – பதி 30/37 இரத்தம் தூவிய மிகுந்த கள்ளுடனான பெரிய பலியானது பிறை வளர் நிறை மதி உண்டி – பரி 3/52 பிறைகளாகி வளர்கின்ற முழுமையடைந்த திங்களான உணவினையும் செம்பு நிறை கொண்மரும் வம்பு நிறை முடிநரும் – மது 514 செம்பின் எடையை நிறுத்துக் கொள்வாரும், கச்சுக்களை நிறைவாக முடிவாரும், செம்பு நிறை கொண்மரும் வம்பு நிறை முடிநரும் – மது 514 செம்பை நிறுத்துக் கொள்வாரும், கச்சுக்களை முழுமையாக முடிவாரும், அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை இன் துயில் வதியுநன் காணாள் துயர் உழந்து நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும் மையல் கொண்டும் ஒய்யென உயிர்த்தும் ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி – முல் 79-84 பகையரசு இருந்து நடுங்கும் முரசு முழங்கும் பாசறையில் இனிய துயில்கொண்டு தங்குயிருப்பவனைக் காணாளாய், வருத்தமுற்று நெஞ்சம் (ஆற்றியிரு என்று தலைவன் கூறியபடி)பொறுத்திருக்க, (தன்)உறுதியைக் கெடுத்த தனிமையோடு, நீண்ட பிரிவினை நினைந்து தேற்றியும், கழலுகின்ற வளையை(க் கழலாமற்)செறித்தும், மயக்கம் கொண்டும், நெடிய பெருமூச்சுவிட்டும், அம்பு தைத்த மயில் போல நடுங்கி, இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்கு புது நிறை வந்த புனல் அம் சாயல் —————————- ———————————– நன்னன் சேய் நன்னன் – மலை 60- 64 புகழ் பாடுதல்(என்ற) விதையினையும் (பரிசில்மீது)விருப்பம் (என்ற)ஏரினையும் (கொண்ட) உழவர்க்கு(=பரிசிலர்க்கு) புதுப் பெருக்காய் வந்த நீர் (போன்ற)அழகிய மேனியைக்கொண்ட, ——————————- —————————– நன்னன் மகனான நன்னனை நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை இறைத்து உண சென்று அற்று ஆங்கு – குறு 99/4,5 உயர்ந்த மரத்தின் உச்சிக் கிளைகளைத் தொட்டுக்கொண்டு சென்ற பெருவெள்ளம் இறைத்து உண்ணும் அளவுக்குக் குறைந்து அற்றுப்போய்விடுவது போல நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை – கலி 133/12 நிறை எனப்படுவது மறைத்துக் காக்கவேண்டிவற்றைப் பிறர் அறியாமல் காத்தல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்