சொல் பொருள்

1. (வி) ஆதரவளி, புகலிடம் அளி,

2. (பெ) 1. ஒளிமறைவு, 2. ஒளிமறைப்பினால் ஏற்படும் உருவம், பிம்பம்,  3. பிரதி பிம்பம்,  4. அருள், 5. ஒளி, 

சொல் பொருள் விளக்கம்

ஆதரவளி, புகலிடம் அளி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

shelter, protect, shade, shadow, image, reflection, grace, favour, benignity, lustre

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் – சிறு 233,234

‘உழவர்க்குப் புலகிடம் அளித்த செங்கோலையுடையோய்’ எனவும்,
‘தேரினையுடையோர்க்கு வெம்மைசெய்த வேலினையுடையோய்’ எனவும்

மனை நொச்சி நிழல் ஆங்கண்
ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் – பொரு 185,186

மனை(யைச் சூழ்ந்த) நொச்சியின் நிழலில்,
(மணலுக்குள் முட்டை)பொரித்து வந்த ஆமையின் குஞ்சைப் பாதுகாத்து வைப்பவும்

இலை இல் மராத்த எவ்வம் தாங்கி
வலை வலந்து அன்ன மென் நிழல் மருங்கில் – பொரு 50,51

இலையில்லாத மரத்தின் அடியில், (ஆறுசெல்) வருத்தம் தாங்கி,
வலையைப் போர்த்தியது போன்ற மெல்லிய நிழலில்

பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை
நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் – பெரும் 287,288

பொதிந்த இரையைக் கௌவி (அகப்படாதுபோன)பிளந்த வாயையுடைய வாளை மீன்,
நீர் அருகிலுள்ள பிரம்பின் (நீரலையால்)நடுங்கு(வது போல் தோன்று)ம் நிழலைக் கண்டு அஞ்சும்,

கண் ஆர் கண்ணி கரிகால்வளவன்
தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகி – பொரு 148,149

கண்-நிறைந்த ஆத்தி மாலையினை உடைய கரிகாற்சோழனின்,
(திருவடி நிழலின்)அருள் நிறைந்த பக்கத்தை அணுகிக் கிட்டே நெருங்கி

மன் உயிர் முதல்வனை ஆதலின்
நின்னோர் அனையை நின் புகழோடும் பொலிந்தே
நின் ஒக்கும் புகழ் நிழலவை – பரி 1/56-58

உலகத்து உயிர்களுக்கு முதல்வனாக இருப்பதனால்
உனக்கு நீயே ஒப்பாவாய்! உன் புகழோடும் பொலிவுற்று –
உன்னையே ஒக்கும் புகழாகிய ஒளியைக் கொண்டுள்ளாய்!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.