Skip to content
நீர்நாய்

நீர்நாய் என்பது ஒரு விலங்கு

1. சொல் பொருள்

(பெ) நீரில் வாழும் ஒருவகைப் பாலூட்டி விலங்கு,

2. சொல் பொருள் விளக்கம்

சங்க நூல்களில் நீர்நாய் என்றொரு விலங்குபற்றிச் சில செய்திகள் காணப்படுகின்றன . தற்காலத்தில் நீர் நிலைகளில் மிக அரிதாகக் காணப்படும் இவ் விலங்கை சங்கப் புலவர்கள் கண்டு தெளிந்து பாடியுள்ளனர் நீர்நாய் வாழும் சூழ்நிலையைச் சங்கப் புலவர்கள் தெளிவாக விலங்கு நூலார் கூறியதை ஒத்தே சொல்லியிருப்பது வியப்பைத் தருகின்றது .

The smooth Indian otter என்பதே . இதுவே சங்க நூல்கள் கூறும் நீர் நாய் என்று உறுதியாகக் கூறமுடியும் . இந்த நீர்
நாய்தான் சமவெளிப் பகுதிகளில் காணப்படுவது . சங்கநூல்களில் பேசப்படும் நீர்நாய் மருதம் , நெய்தல் சூழ்நிலையான சமவெளிப் பகுதியிலேதான் கூறப்படுகின்றது. மலையிலும் குன்றிலும் கூறப்படவில்லை . இந்த நீர்நாய் விலங்குநூலார் கண்டபடி பெரிய ஏரி , குளங்களின் கரைகளிலும் , ஆறு , கால்வாய் அருகிலேயும் வாழ்வது, மற்றும் நீர்நிறைந்த வயல்
களிலும் கடற்ககழிலும் வாழும் இயல்புடையது . இந்த நீர்நாய் வாழும் இடங்களாக விலங்கு நூலார் கூறிய இடங்களிலேயே வாழ்வதாகச் சங்கப் புலவர் கள் நீர்நாயைக் குறித்துப் பாடியிருப்பதால் சங்க நூல்கள் கூறியுள்ள நீர்நாய் ‘ The smooth Indian otter என்பதில் ஐயமில்லை .

சிலப்பதிகாரத்தில் இந்த நீர் நாயைப் பற்றிக் கூறும் செய்தி இன்னும் உறுதிப்படுத்துகிறது . பொய்கையிலே (lakes ) இது வாழ்வதை அகம் . 386 , 336 ஆம் பாடல்களும் , ஐங்குறுநூறு 63 , நற்றிணை 390 ஆகிய பாடல்களும் குறிப்பிடுகின்றன . தண்கயத்தில் ( Tank ) காணப்பட்டதைப் புறம் – 283 ஆம் பாடல் குறிப்பிடுகின்றது .

நீர்நாய்
நீர்நாய்

சிலப்பதிகாரம் – நாடுகாண்காதை – 77-81 குளத்திலே கயல்மீன்களை ஓட்டிய நீர்நாய் வாளை மீனைக் கௌவ அது தப்பித்து மலங்கு துள்ளுகின்ற வயலில் குறுக்கே பாயும் என்று சிலம்பு கூறுவது கண்டதைக் கண்டவாறே கூறும் செய்தியாகத் தெரிகின்றது . நீர்நாய் கயல்மீனையும் வாளை மீனையும் வேட்டையாடுவது கண்டு கண்ணகி கலங்குவாள்
கூறப்பட்டுள்ளது. நீர்முதிர் பழனத்துள் நீர்நாய் இருந்ததை அகம். ( 6 ) கூறுவதையும் நோக்குக . நீர் நிறைந்த வயல்களில் காணப்பட்டதாகக் கூறியிருப் பதால் இந்த நீர்நாய் The smooth Indian otter எனக் கொள்வது உறுதியாகிறது, மற்றும் நற்றிணை 193 ஆம் பாடலில் நீர்நாய் கடற்கழியில் இருப்பது கூறப்பட்டுள்ளது . தில்லை மரம் கடற்கரையிலே சூழலாக வளரும் குறுமரம் என்பர் .

இம்மரம் பிற விடங்களில் இயற்கையில் கூட்டமாகக் காணமுடியாது . நீர்நாய் தில்லையம்பொதும்பில் தூங்கினதாகக் கூறியதிலிருந்து கடற்கரையிலும் காணப்பட்டமையைச் சங்கப் புலவர்கள் தெரிந்தனர் என்பது தெளிவு . இச்செய்தி
யும் விலங்கு நூலார் இந் நீர்நாய் வாழும் இடத்தைப் பற்றிக் கூறியதோடு ஒத்துள்ளது . நீர்நாய் வாழும் சூழ்நிலை சங்க நூல்களில் மிகப் பொருத்தமாக உண்மையாக விளக்கப்பட்டுள்ளது . ” முள்ளரைப் பிரம்பின் மூதரிலும் , ” ” அரிற்பவர்ப் பிரம்பிலும் வாழ்வதாகக் கூறப்பட்டுள்ளது . பிரம்பு , நாணல் முதலியவற்றில் நீர் நாய் வாழ்வதாக விலங்கு நூலார் கூறுவர் . தாமரை , வள்ளைக் கொடிகளிலும் , சேம்பின் அகலிலை அமைத்த பாசிப்பரப்பிலும் வாழ்ந்ததாகச் சங்க நூல்கள் கூறுகின்றன. மற்றும் செங்குரலிக் கொடியின் சூழலிலும் , தில்லையம்பொதும்பிலும் வாழ்ந்ததாகக் கூறுவதும் உண்மையான செய்தியே .

நீர்நாய்
நீர்நாய்

சங்கப்புலவர்கள் எந்த அளவு நுட்பமாக இன்ன செடியில் இன்ன கொடியில் இன்ன சூழலில் வாழ்ந்தது என்று நேரில் கண்டு மறவாமல் கூறியது மிகவும் போற்றற்குரியது . விலங்கு நூலாரும் நீர்நாய் செடிகளின் வேர்த்தூறுகளிலும் பிரம்புத் தூறுகளிலும் . கொடிப்புதர்களிலும் வாழ்வதாகக் கூறுகின்றனர். நீர்நாயின் உடல் வழவழப்பாய்க் கருமையாய்
( Darkish ), கருமை கலந்த செம்பழுப்பாய் இருக்குமென்பர் . இதையே இரும்போத்து என்று அகம் கூறுகிறது . இதன் முகத்தில் மூக்கிற்கு மேலே மயிர் ஒரு வரியாக ஒழுங்காகக் காணப்படும் . இதன் காரணமாகவே வரிப்புற நீர்நாய் என்று குறுந்தொகை கூறுகின்றது . மீனக் கடித்துத் தின்னவும் , வழுக்கித் தப்பாமல் கௌவவும் நீர் நாய்க்குத் தடித்த கூரிய பல் உண்டு . “ வெள்ளெயிற்று நீர்நாய் ” என்று அகம் கூறும் . நீர்நாய் இரவுக் காலத்தில் மீன்களை வேட்டையாடும் விடிய விடிய மீன்களை வேட்டையாடும் என்று விலங்கு நூலார் கூறுவர் . இரவுக் காலத்தில் நீர்நாய் மீன் வேட்டை யாடுவதைக் காண்பது எளிதல்லவானதால் சங்கப் புலவர்கள் விடியற்காலையில் இவை வேட்டை யாடுவதையே பெரும்பாலும் கண்டிருக்கின்றனர் .
அதன் காரணமாகவே வாளை நாளிரை நீர்நாய் பெறுவதாக எல்லாப் பாடல்களிலும் கூறியுள்ளனர்

காலை உணவை நாளிரை என்றனர் . வாளை மீனையே பெரிதும் உணவாக உண்டதாகச் சங்கப் புலவர்கள் கூறியது உண்மைச் செய்தி , நீர்நாய் வேட்டையாடும் போது தன் உணவுத் தேவைக்கு மீறி மீன்களைக் கொன்று விடும் கொடிய தன்மையுடையது . இவை கூட்டமாகவும் மீன்களை வேட்டையாடுவதுண்டு . மீன்களை வேட்டையாடும்போது நீரைக் கலக்குவ துண்டு. மீன்களை அலைக்கழிப்பது முண்டு. இதையே வாளையோடு உழப்பத் துறை கலுழ்ந்தமையின் “
என்று அகப்பாடல் கூறுவதை நோக்குக .

நீர்நாய்
நீர்நாய்

ஒண்செங்குரலித் தண்கயங் கலங்கி என்று புறநானூறு கூறு வதைக் கவனிக்கவேண்டும் . சிலப்பதிகாரத்தில் நீர்நாய் கயலை ஓட்டியதாகக் கூறுவதைக் கவனிக்க வேண்டும் . நீர்நாய் வேட்டையாடும்போது உழப்பு வதும், கலக்குவதும் , ஒட்டுவதும் உண்டு என்பதைச் சங்கப் புலவர்கள் நன்கு தெரிந்திருந்தனர் . வாளை மீன் பிறழவும் அதை நீர்நாய் உண்ணாது பொய்கையில் பகலில் துயில்வதாக நற்றிணை 390 ஆம் பாடல் கூறுகின்றது . பகற்காலத்தில் நீர்நாய் வெளியே வராது
இருப்பதைத் தெரிந்தே பாடியுள்ளனர் . நற்றிணை 195 ஆம் பாட்டிலும் நீர்நாய் மீனைத் தின்று தின்று பகலில் தூங்குவது கூறப்பட்டுள்ளது .

நீர்நாய்கள் நீர்ப்பரப்பில் வழுக்கி விளையாடுதலை ( Water sliding ) விலங்கு நூலறிஞர்கள் சண்டு எழுதியுள்ளனர். நீர்நாய்கள் குடும்பமாக இத்தகைய சறுக்கு விளையாட்டில் ஈடுபடுமாம் . இக்காட்சி மிக அழகானதென்பர் . இதே முறையான ஒருகாட்சியைக் கம்ப ராமாயணம் கூறுவது வியப்பைத் தருகின்றறது . -கம்ப கிட் . பம்பா . 22 . திரைதொறும் உருள்வன நீர்நாய் என்றும் அக்காட்சி கழைக்கூத்தர் சறுக்குவது போலத் தேரைகள் கருதின

கம்பர் கூறியுள்ள திலிருந்து நீர் நாய்களின் வழுக்கும் விளையாட்டை நன்கு தெரிந்தே கம்பர் பாடினரென்று கருதலாம் . சங்க நூல்களில் நீர்நாயின் ஆணை இரும்போத்து என்றும் பெண்ணைப் பிணவு என்றும் , குட்டிகளைப் பறழ் என்றும் கூறியுள்ளனர். அகம் . 336 ஆம் பாடல் குட்டியொடு தங்கியிருந்த தன் துணைக்கு இரை தேடியதாகக் கூறுவதைக் காணலாம் . குட்டிகள் நன்ரக வளரும் வரை நீர்நாய்கள் அவைகளைக் காத்து வளர்க்கும் என்று விலங்கு நூலார் கூறுகின் றனர் . நீர் நாய்கள் ஆணும் பெண்ணுமாக வாழ்வது இயல்பு. சங்க நூல்களிலும் ஆணும் பெண்ணுமாகவே கூறியுள்ளனர் .

நீர் நாய் என்று அழைக்கப்பட்டாலும் நாய்க்கும் நீர்நாய்க்கும் யாதொரு தொடர்பும் இல்லை . இந்திய மொழிகளில் பலவற்றிலும் நீர்நாய் என்ற பொருளிலேயே பெயர் வழங்குவது தமிழ்ப் பெயரின் அடிப்படையிலோ திராவிடமொழிப் பெயரின் அடிப்படையிலோ இருப்பதாகத் தெரிகின்றது . மீன்களை வேட்டையாடுவதன் நீர்நாய் எனப் பட்டதோ என ஐயம் எழுகிறது . நீர்நாய்க் குட்டிகளை இளம்பருவத்தில் தனிப்படுத்தி வளர்த்தால் நாயைப் போலவே மனிதனின் பின்னர் வருமாம் .

நீர் நாயைக் கன்னடத்தில் நீருநாய் என்றும் , தெலுங்கில் மீரு குக்கா என்றும் , இந்தியில் ‘பானிகுத்தா என்றும் ஒரே பொருளில் வழங்குவர் . தமிழ் நாட்டில் சிலவிடங் களில் மீனாய் என்று இதை அழைக்கின்றனர் .

நீர்நாய்
நீர்நாய்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

otter, The common otter ,The smooth Indian otter , The clawless otter

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்
முள் அரை பிரம்பின் மூதரில் செறியும் – அகம் 6/18,19

வாளைமீனைத் தின்ற கூரிய பற்களை உடைய நீர்நாய்
முட்கள் கொண்ட தண்டினை உடைய பிரம்பின் பழைய புதரில் தங்கும்,

குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி – நற் 195/2

பொய்கை நீர்நாய் வைகு துயில் ஏற்கும் – நற் 390/2

அரில் பவர் பிரம்பின் வரி புற நீர்நாய்/வாளை நாள் இரை பெறூஉம் ஊரன் – குறு 364/1,2

பொய்கை பள்ளி புலவு நாறு நீர்நாய்/வாளை நாள் இரை பெறூஉம் ஊர – ஐங் 63/1,2

நாள்இரை தரீஇய எழுந்த நீர்நாய்/வாளையொடு உழப்ப துறை கலுழ்ந்தமையின் – அகம் 336/4,5

பொய்கை நீர்நாய் புலவு நாறு இரும் போத்து – அகம் 386/1

வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉ – புறம் 283/2

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *