Skip to content

சொல் பொருள்

(பெ.அ) 1. பசிய, 2. முற்றாத, 3. புத்தம்புதிய, 4. இளமையான, 5. உலர்ந்துபோகாத, 6. பசும்பொன்னாலான, 7. சுடப்படாத, வேகவைக்காத

சொல் பொருள் விளக்கம்

1. பசிய

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

greenish, not ripe, fresh, young, tender, not dried, golden, not burnt

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்
சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்
கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க
பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் – திரு 47-51

காய்ந்து போன மயிரினையும், நிரை ஒவ்வாத பல்லினைக் கொண்ட பெரிய வாயினையும்,
சுழலும் விழியையுடைய பசிய கண்ணினையும், கொடிய பார்வையினையும்,
பிதுங்கிய கண்ணையுடைய கூகையோடு, கொடிய பாம்பும் தூங்கும் அளவிற்குப் பெரிதான
பெரிய முலையை வருத்துகின்ற காதினையும், சொரசொரப்பான பெரிய வயிற்றையும்,
(கண்டோர்)அஞ்சுதல் பொருந்திய நடையினையும் உடைய அச்சம் தோன்றுகின்ற பேயாகிய மகள்

முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை
நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு
தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற – நெடு 23-26

பெரிய அடிப்பகுதியையுடைய பாக்கு மரத்தின் (நீல)மணியைப் போன்ற கழுத்தின்
கொழுத்த மடல்களில் (பாளை)விரிந்த திரட்சியைக் கொண்ட கொத்துக்களில்
நுண்ணிய நீர் திரளும்படியாக வீங்கிப் பக்கம் திரண்டு
தெளிந்த நீர் (கொண்ட)முற்றாத காய் இனிமை கொள்ளும்படி முற்ற;

பண்ணியம் அட்டியும் பசும் பதம் கொடுத்தும் – பட் 203

(பல)பண்டங்களை ஆக்கியிட்டும், புதிய நல்லுணவு கொடுத்தும்

துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல் – மலை 463

(வேகும்போது கொதிப்பதால்)குலுங்கும் பானையிலிருந்து வடித்த (நெல்லின்)இளம் முளைகளாலான தெளிந்த
கள்ளை

கரும் கொடி மிளகின் காய் துணர் பசும் கறி – மலை 521

கரிய கொடிகளையுடைய மிளகின் காய்க்குலைகளின் (காய்ந்துபோகாத)பச்சை மிளகும்

கை புனை சிறு நெறி வாங்கி பையென
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று
பசும் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கி
செலவுடன் விடுகோ தோழி – நற் 222/3-6

கையால் செய்யப்பட்ட சிறிய வளைவைக் கொண்ட ஊஞ்சலை இழுத்து, மெதுவாக
விசும்பில் பறக்கும் அழகிய மயிலைப் போன்று, நான் இன்று
பசும்பொன்னால் ஆகிய மணிகள் பதித்த வடத்தையுடைய அல்குலைப் பற்றி, தள்ளிவிட்டு
உயரே செல்ல விடுக்கிறேன் தோழி!

ஈர் மண் செய்கை நீர் படு பசும் கலம்
பெரு மழை பெயற்கு ஏற்று ஆங்கு – நற் 308/8,9

ஈர மண்ணால் செய்யப்பட்டு நீர் நிறைந்திருக்கும் பச்சையான மண்குடம்
பெரிய மழை பெய்வதனில் நனைந்து கரைந்ததைப் போல,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *