Skip to content

சொல் பொருள்

(வி.மு/வி.எ) ’படும்’ என்பதன் நீட்டல். 1. அகப்படும், மாட்டிக்கொள்ளும், 2. உடன்படும், 3. தோன்றுகின்றன, 4. கிடக்கும், 5. செல்லும், 6. ஒலிக்கும், 7. உண்டாகின்ற, உருவாகின்ற

சொல் பொருள் விளக்கம்

’படும்’ என்பதன் நீட்டல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be caught, entrapped, agree to, appear, be lying, go, proceed, make a sound, arising

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தினை உண் கேழல் இரிய புனவன்
சிறு பொறி மாட்டிய பெரும் கல் அடாஅர்
ஒண் கேழ் வய புலி படூஉம் நாடன் – நற் 119/1-3

தினையை உண்ணும் காட்டுப்பன்றி வெருண்டு ஓட, தினைப்புனத்தான்
சிறிய பொறியைப் பொருத்தி வைத்த பெரிய கல்லிலான சாய்வுப்பலகையில்
ஒளிரும் நிறமுடைய வலிமையான புலி மாட்டிக்கொள்ளும் நாட்டைச் சேர்ந்தவன்

சுனை பூ குற்றும் தொடலை தைஇயும்
மலை செம்_காந்தள் கண்ணி தந்தும்
தன் வழி படூஉம் நம் நயந்து அருளி – நற் 173/1-3

சுனையிலுள்ள மலர்களைக் கொய்தும், அவற்றை மாலையாகத் தொடுத்தும்,
மலையிலுள்ள செங்காந்தள் பூவைத் தலைமாலையாகச் செய்துதந்தும்,
தன் கருத்துக்கு இணங்கிநடக்கும் நம்மை விரும்பி, நம்மேல் இரக்கங்கொண்டு

இடூஉ ஊங்கண் இனிய படூஉம்
நெடும் சுவர் பல்லியும் பாங்கில் தேற்றும் – நற் 246/1,2

இது நடைபெறும் என்று சொன்ன இடங்களில் நல்ல நிமித்தங்கள் தோன்றுகின்றன;
நெடிய சுவரில் உள்ள பல்லியும் பக்கத்தில் ஒலித்து அதனை உறுதிப்படுத்தும்;

பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி
மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன் – அகம் 5/9-11

பளிங்கைப் போன்று பல காய்களைக் காய்க்கும் நெல்லிமரங்கள்
முகடுகளில் இருக்கும் பாறையில், (சிறுவரின்)பல கோலிக்குண்டுகள் போன்று
உதிர்ந்து கிடக்கும் – ஞாயிற்றின் கதிர்கள் காயும் – உச்சிமலைச் சரிவுகளில்

நீங்கா வம்பலர் கணை இட தொலைந்தோர்
வசி படு புண்ணின் குருதி மாந்தி
ஒற்று செல் மாக்களின் ஒடுங்கிய குரல
இல் வழி படூஉம் காக்கை – அகம் 313/13-16

ஒழியாத புதியோராகிய, ஆறலைப்போர் அம்பினை எய்தலால் இறந்துபட்டோரின்
பிளந்த புண்ணிலிருந்து இழியும் குருதியைக் குடித்து
ஒற்றராகச் செல்லும் மக்களைப் போல உள்ளடங்கிய குரலினவாய்
தம்கூடுகளை நோக்கிச்செல்லும் காக்கை

உள்ளு-தொறு படூஉம் பல்லி – அகம் 351/16

நினைக்குந்தோற்ம் ஒலிக்கும் பல்லியானது

அளிய தாமே சிறு வெள் ஆம்பல்
இளையம் ஆக தழை ஆயினவே இனியே
பெரு வள கொழுநன் மாய்ந்து என பொழுது மறுத்து
இன்னா வைகல் உண்ணும்
அல்லி படூஉம் புல் ஆயினவே – புறம் 248

இரங்கத்தக்கன சிறிய வெளிய ஆம்பல்
யாம் இளையவராயிருக்கும்போது எமக்குத் தழையுடை ஆயின. இப்பொழுது
பெரிய செல்வத்தையுடைய தலைவன் இறந்தானாக, உண்ணும் பொழுது மாறிப்போய்
இன்னாத விடியலில் உண்ணும்
தம் அல்லியிடத்து உண்டாகும் புல்லரிசியாய் உதவின.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *