Skip to content

1. சொல் பொருள்

1. (வி) 1. குனிந்து வணங்கு, 2. கீழ்ப்படி, அடங்கு, கட்டுப்படு, 3. ஆணையிடு, கட்டளையிடு, 4. கீழ்ப்படியச்செய், அடக்கு, கட்டுப்படுத்து, 5. அழி, சிதை, 6. தாழ்த்து, 7. தாழ்

2. (பெ) 1. வினை, செயல், 2. பணிமொழி, கீழ்ப்படிதலுள்ள பேச்சு, 3. ஏவல், கட்டளை, 4. ஆபரணம், அணிகலன்

2. சொல் பொருள் விளக்கம்

1. குனிந்து வணங்கு

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

make obeisance to, be submissive, compliant, order, command, make submissive, compliant, trample on, stamp on, lower, be lowered, act, deed, work, submissive talk, order, commandornament

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம்
—————————————— ————-
மாயோன் ஒத்த இன் நிலைத்தே
சென்று தொழுகல்லீர் கண்டு பணி-மின்மே – பரி 1523-/34

சோலை என்ற சொல்லோடும் தொடர்மொழியாக வருகின்ற மாலிருங்குன்றம்
———————————————- ———-
திருமாலைப் போன்ற இனிய நிலையினைக் கொண்டிருக்கிறது;
அங்குச் சென்று தொழுதுகொள்ளுங்கள்! அதனைக் கண்டு பணிந்துகொள்ளுங்கள்!

ஒன்னார்
பணி திறை தந்த பாடு சால் நன் கலம் – அகம் 127/6,7

பகைவர்
கட்டுப்பட்டு திறையாகத் தந்த பெருமைசான்ற நல்ல அணிகலன்கள்

நாடுகோள்
அள்ளனை பணித்த அதியன் பின்றை
வள் உயிர் மா கிணை கண் அவிந்தாங்கு – அகம் 325/7-9

நாட்டினைக்கொள்ளுமாறு
அள்ளன் என்பானைப் பணித்த அதியன் என்பான் துஞ்சிய பின்னர்
சிறந்த ஒலியினையுடைய பெரிய கிணையானது ஒலி அடங்கினாற்போல

பணியார் தேஎம் பணித்து திறை கொள்-மார் – மது 230

(தமக்குப்)பணியாதோர் நாடுகளைப் பணியச்செய்து (அவரின்)திறையைக் கொள்ள,

மோகூர் மன்னன் முரசம் கொண்டு
நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து – பதி 44/14,15

பகை மன்னனாகிய மோகூர் மன்னனின் முரசத்தைக் கைப்பற்றி,
அவன் கூறிய வஞ்சினத்தைச் சிதைத்து அவனைப் பணிவித்து, அவனது காவல்மரமாகிய வேம்பினை
அடியோடு வீழ்த்தி

செல்வ கடுங்கோ வாழியாதன்
என்னா தெவ்வர் உயர் குடை பணித்து – புறம் 387/30,31

செல்வக்கடுங்கோ வாழியாதன்
என்று தன் பெயர் கூறிய அளவில் பகைவர் தம்முடைய உயர்ந்த கொற்றக்குடையைத் தாழ்த்தி

பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் – திரு 146

மேகலையை அணிந்த தாழ்ந்தும் உயர்ந்தும் உள்ள அல்குலையும்,

பணி குறை வருத்தம் வீட – குறு 333/5

வினையின் குறையால் உண்டாகிய உனது துன்பம் கெடும்பொருட்டு

பணி ஒரீஇ நின் புகழ் ஏத்தி – பரி 17/50

மனிதரைப்பாடும் பணிமொழிகளை ஒழித்து, உன் புகழைப் போற்றி,

வேற்று அரசு பணி தொடங்கு நின்
ஆற்றலொடு புகழ் ஏத்தி – புறம் 17/31,32

பகைவேந்தர் ஏவல் செய்யத் தொடங்குவதற்குக் காரணமான நினது
வலியுடனே புகழை ஏத்தி

முன்புற்று அறியா முதல் புணர்ச்சி மொய் குழலை
இன்புற்று அணிந்த இயல் அணியும் வன் பணியும்
நாண் எனும் தொல்லை அணி என்ன நன்_நுதலை – பரி 28/1-3

முன்னர் நுகர்ந்து அறியாத முதல் உறவினைக் கொண்ட திரண்ட கூந்தலினையுடையவளை,
அந்த உறவினால் இன்புற்றதால் ஏற்பட்ட இயற்கை அழகும், செயற்கை அழகூட்டும் அணிகலன்களும்,
நாணம் என்னும் பழைய அணியும் கொண்ட நல்ல நெற்றியையுடையவளை ..

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *