சொல் பொருள்

1. (வி) 1. குறிதப்பு, பிழைத்த, தவறு, 2. பெருத்திரு, பருத்திரு

2. (பெ) 1. பெரிய தன்மை, 2. மூங்கில், 3. விளைநிலம், 4. பெருமை, 5. முரசம், 6. குதிரை இலாயம், 7. பருமை

சொல் பொருள் விளக்கம்

1. குறிதப்பு, பிழைத்த, தவறு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

miss, err, fail, be thick, be large, largeness, bigness, bamboo, cultivated fields, greatness, excellence, drum, stable, rotundness

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அமர் கண் ஆமான் அரு நிறம் முள்காது
பணைத்த பகழி போக்கு நினைந்து கானவன் – நற் 165/1-2

மருண்ட பார்வையையுடைய காட்டுப்பசுவின் அரிய மார்பினில் பாயாது
குறிதப்பிய அம்பின் போக்கை நினைத்துப்பார்த்த கானவன்,

நகுவர பணைத்த திரி மருப்பு எருமை – அகம் 206/3

விளங்குதலுறப் பெருத்த முறுக்குண்ட கொம்பினையுடைய எருமையின்

பணைத்து ஏந்து இள முலை அமுதம் ஊற – மது 601

பருத்து உயர்ந்த இளைய முலை பால் சுரக்க,

ஆடு அமை பணை தோள் அரி மயிர் முன்கை – பொரு 32

அசைகின்ற மூங்கில் (போன்ற)பெருத்த தோளினையும், ஐம்மை மயிரினையுடைய முன்கையினையும்,

அம் பணை தடைஇய மென் தோள் முகிழ் முலை – நெடு 149

அழகான மூங்கில் (போலத்)திரண்ட மெல்லிய தோளினையும், (மொட்டுப்போல்)குவிந்த முலை

தண் பணை தழீஇய தளரா இருக்கை – பொரு 169

குளிர்ந்த வயலையுடைய மருத நிலம் சூழ்ந்த சோர்வுறாத குடியிருப்பினையுடைய

பணை கெழு பெரும் திறல் பல் வேல் மன்னர் – மது 234

பெருமைகொண்ட பெரிய வலிமையுள்ள, பல வேல்களைக் கொண்ட மன்னர்கள்,

முழங்கு இசை நன் பணை அறைவனர் நுவல – மது 362

முழங்கும் ஓசையையுடைய நல்ல முரசத்தைச் சாற்றுபவர் செய்திகூற,

பணை நிலை புரவி புல் உணா தெவிட்ட – மது 660

கொட்டிலில் நிற்றலையுடைய குதிரைகள் புல்லாகிய உணவை மெதுவாக அசைபோட்டு மெல்ல,

மனை அழுது ஒழிந்த புன் தலை சிறாஅர்
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின்
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும் – நற் 392/3-5

வீட்டில் அழுது ஓய்ந்த புல்லிய தலையை உடைய சிறுவர்கள்
கூட்டாக முயன்று பெற்ற இனிய கண்ணையுடைய நுங்கைத்
தாயின் பருத்த கதகதப்பான கொங்கையை உண்ணுவதுபோலச் சுவைத்து உண்டு மகிழும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.