சொல் பொருள்

(வி) 1. வருந்து, 2. பரவு, 3. சூழ், 4. ஓடு, 5. செலுத்து, 6. பொறு, சும 7. ஒடி,முறி, 8. அறு, 9. பறி

2. (பெ.அ) பரிய, பருத்த

3. (பெ) 1. குதிரை, 2. ஓட்டம், குதிரைக்கதி, 3. நடை, செலவு, 4. பருமை

4. (இ.சொ) மிகுதிப்பொருளை உணர்த்தும் ஓர் இடைச்சொல்,

5. பரி என்பது இறைவைக்கூனை எனப்படும் வட்டவடிவினது

சொல் பொருள் விளக்கம்

இறைவைச் சால் சதுரமானது. பரி என்பது இறைவைக்கூனை எனப்படும் வட்டவடிவினது. பரி என்பது வட்டம் என்னும் பொருளில் வரும் முதனிலை. பரிவட்டம், பரிவேடம் என்பவை அறிக. பரி என்பது இறைவைக் கூனைப் பொருளில் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be troubled, distressed;, spread over, surround, run, drive, bear, sustain, break off, snap, severe, tear off, large, rotund, horse, pace of a horse, motion, gait, largeness, Particle denoting intenseness;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஈன் பிணவு ஒடுக்கிய இரும் கேழ் வய புலி
இரை நசைஇ பரிக்கும் மலை முதல் சிறு நெறி – நற் 332/6,7

குட்டியீன்ற பெண்புலியை இருக்கவைத்த பெரிய, நிறத்தையுடைய வலிய புலி இரையை விரும்பித்தேடி வருந்தியலையும் மலையடிவாரத்துச் சிறிய வழியில்

பெரும் கடல் பரதவர் கோள்_மீன் உணங்கலின்
இரும் கழி கொண்ட இறவின் வாடலொடு
நிலவு நிற வெண் மணல் புலவ பலவுடன்
எக்கர்-தொறும் பரிக்கும் – குறு 320/1-4

பெரிய கடலில் பரதவர் கொண்ட மீன்களின் உலர்ந்த வற்றல், இருண்ட கழியில் கொண்ட இறாவின் வற்றலோடு
நிலவொளி போன்ற வெள்ளை மணற்பரப்பு புலால்நாறும்படி பலவும் சேர்ந்து மணல்மேடுகள்தோறும் பரவிக்கிடக்கும்

கூனல் எண்கின் குறு நடை தொழுதி
சிதலை செய்த செம் நிலை புற்றின்
மண் புனை நெடும் கோடு உடைய வாங்கி
இரை நசைஇ பரிக்கும் அரைநாள் கங்குல் – அகம் 112/1-4

கூனிய முதுகினையும் குறுகக்குறுக அடியிட்டு நடக்கும் நடையினையும் உடைய கரடிக்கூட்டம் கறையான் எடுத்த சிவந்த நிலையினையுடைய புற்றினது மண்ணால் புனைந்த நீண்ட உச்சி உடையுமாறு பெயர்த்து புற்றாஞ்சோறான இரையினை விரும்பிச் சூழ்ந்துகொண்டிருக்கும் நடுநாள் இரவில்

ஓரை_மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு
கடலில் பரிக்கும் – குறு 401/3,4

விளையாட்டு மகளிரைக் கண்டு அஞ்சி, நீரமுள்ள நண்டு கடலைநோக்கி ஓடும்

விலங்கு இரும் சிமைய குன்றத்து உம்பர்
வேறு பன் மொழிய தேஎம் முன்னி
வினை நசைஇ பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு – அகம் 215/1-3

குறுக்காகவுள்ள பெரிய உச்சியினையுடைய மலைக்கு அப்பாலுள்ள வேறுபட்ட பல மொழிகள் வழங்கும் தேயத்தைக் கொள்ளக் கருதி போர்த்தொழிலை விரும்பிச் செலுத்தும் துணிவுமிக்க உள்ளத்துடன்

மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள் – புறம் 75/6

அடுத்துப் பொரும் போரைப் பொறுக்கும் மனவெழுச்சியையுடைத்தாகிய வலிய முயற்சியையுடைய

எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉ பழிச்சிய
வள் உயிர் வணர் மருப்பு அன்ன ஒள் இணர்
சுடர் பூ கொன்றை ஊழ்_உறு விளை நெற்று – அகம் 115/8-11

எவ்வி என்பான் வீழ்ந்த போர்க்களத்தே, பாணர்கள் கையால் தொழும் முறைமையோடு முன்பு, ஒடித்துப்போட்டுப் பராவிய வளம் பொருந்திய ஒலியினையுடைய வளைந்த கோட்டினை ஒத்த ஒளி பொருந்திய கொத்துக்களையுடைய
சுடரும் பூக்களையுடைய கொன்றையினது முற்றி விளைந்த நெற்றுக்கள்

மாண் இழை மகளிர் புலந்தனர் பரிந்த
பரூஉ காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு – மது 680,681

மாட்சிமைப்பட்ட அணிகலன்களையுடைய மகளிர் (கணவரோடு)புலந்தனராய், அறுத்த பரிய வடமாகிய ஆரம் சொரிந்த முத்தோடு,

ஐய எம் காதில் கனம் குழை வாங்கி பெயர்-தொறும்
போது இல் வறும் கூந்தல் கொள்வதை நின்னை யாம்
ஏதிலார் கண் சாய நுந்தை வியல் மார்பில்
தாது தேர் வண்டின் கிளை பட தைஇய
கோதை பரிபு ஆட காண்கும் – கலி 80/22-26

ஐயனே! என் காதில் உள்ள பொன்னாலான குழைகளைக் கழற்றிக்கொண்டு நீ ஓடும்போதெல்லாம் மலர் சூட்டிக்கொள்ளாத என் வெறுங்கூந்தலின் மீது தூக்கிவைத்துக்கொள்வது, உன்னை நான், உன் தந்தை அந்தப் பரத்தையர் மீது வைத்த அன்பு குறையும்படியாக, அவர்கள் அவரின் அகன்ற மார்பில் பூந்தாதுக்களைத் தேடியலையும் வண்டுகளின் கூட்டம் மொய்க்கும்படியாகக் கட்டின மாலையை நீ பறித்து விளையாடும் காட்சியில் காண்பதற்காத்தான்.

பரி அரை கமுகின் பாளை அம் பசும் பூ – பெரும் 7

பருத்த அடிமரத்தையுடைய கமுகின் பாளையாகிய அழகினையுடைய இளம் பூ

துனை பரி துரக்கும் செலவினர் – முல் 102

விரைந்து செல்லும் குதிரையைக் கடிதாகச் செலுத்தும் செலவினையுடையவரின்

தேஎம் தேறா கடும் பரி கடும்பொடு – மலை 364

திக்குத் தெரியாத மிக விரைவான ஓட்டத்தையுடைய சுற்றத்தோடே,

குரூஉ மயிர் புரவி உராலின் பரி நிமிர்ந்து
கால் என கடுக்கும் கவின் பெறு தேரும் – மது 387,388

நிறமிக்க மயிரினையுடைய குதிரைகள் ஓடுதலாலே, ஓட்டம் மிக்கு, காற்றுப்போல் விரையும் அழகிய தேரும்,

காலே பரி தப்பினவே – குறு 44/1

கால்களோ நடை இழந்தன

மார்பும் அல்குலும் மனத்தொடு பரியை – பரி 13/55

நின் திருமார்பும், பின்புறமும், நின் திருவுள்ளத்தோடு பருமையுடையனவாய்க் கொண்டிருக்கிறாய்

பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட – மலை 497

(சொந்த ஊரைவிட்டு வந்த)மிகுந்த ஏக்கத்தால் அலைக்கப்பட்ட உம் வருத்தம் குறைந்துபோக 

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.