Skip to content

பருக்கை

பொருள்

  • பருமனாதல்
  • சோற்றுப் பருக்கை
  • பருக்கைக்கல்
  • உருண்டை


விளக்கம்

பருத்தல் என்பது பருக்கை எனவும்படும். பருமனாதல், சோற்றுப் பருக்கை, பருக்கைக்கல், உருண்டை என்பவை பருக்கைப் பொருளன.

பருக்கை என்பது சிறுகல்லே; கூழாங்கல்லே. எனினும் அது பரியகல் உறுத்தும் துயரினும் பருவரல் (துயர்) மிகவுண்டாக்கும் கல்லாதல் அறியத் தக்கது. பரல் என்பது பருக்கைக்கல். செருப்பிடையே பட்டுக் காலை வருத்தும் கல்லின் கொடுஞ்செயல் பட்டார்க்கே தெரியும். அதனால் பகைவரை வாட்டவல்ல வேந்தன் ஒருவன் ‘செருப்பிடைப் பரல்’ அன்னன் எனப் பட்டான்.

“செருப்பிடைச் சிறுபரல் அன்னன்” என்கிறது புறநானூறு (257).

கண்ணுள் குறுஞ்சிறு பரல் புகுந்து தரும் அல்லலைச் சொல்லி முடியாது, கண் வீங்கி இமை வீங்கி முகம் வீங்கிப் படும்பாடு பட்டார் அன்றிப் பிறர் அறியார். அதனால் விளக்கெண்ணெயும் தாய்ப்பாலும் கலந்து கண்ணுள் விட்டு மெல்ல நீவிப் ‘பருக்கை எடுப்பார்’ இந்நாளில் கூடச் சிற்றூர்களில் உளர். “பருக்கை எடுத்தல்” என்பது வினை; “பருக்கை எடுப்பார்” பெயர்.

அப்பருக்கை எப்பருக்கை? பட்ட இடத்தைப் பன்மடங்கு பருக்க வைக்கும் அதற்குப் பருக்கை என்பது நல்ல பட்டம் தான்! பருக்கைக் கல்லுக்கும் பருக்காங்கல் என்பதொரு வழக்குப் பெயர்.

அரிசி ‘மணி’ எனப்படும். மணி என்பதற்குச் ‘சிறு’ என்னும் பொருள் உண்டு. சிறுமணிப் பயறு என ஒரு பயறும் உண்டு. மணிக்கடல், மணிக்கொச்சம், என்பவை சிறுமை சுட்டும் ஒட்டுச்சொற்கள். அரிசிமணி வேகவைக்கப் பட்டால் அதன் அளவில் பருமன் ஆகிவிடுகின்றது. அதனால் அதற்குப் பருக்கைப் பெயர் வயது விடுகிறது.

“என்ன உழைத்தும் சோற்றுப் பருக்கைக்கு வழியில்லை” என்று ஏங்குவார்படும் பருக்கைப்பாடு பரும்பாடே! “பருக்கை யிலாக் கூழுக்குப்போட உப்பு இல்லை” என்பதொரு வறுமைப் பாட்டு! இது தனிப்பாட்டு.

– இரா. இளங்குமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *