சொல் பொருள்
(வி) 1. பாடலை இசையுடன் வெளிப்படுத்து, 2. பறவை, வண்டு முதலியன இனிமையாக ஒலியெழுப்பு, 3. புகழ், பாராட்டு,
2. (பெ) 1. ஒலி, ஓசை, 2. பூசுதல், 3. வருத்தம், துன்பம், 4. பக்கம், 5. பெருமை, உயர்வு, 6. உலக ஒழுக்கம், 7. தூக்கம், 8. அனுபவம், 9. விழுதல், 10. படுக்கை நிலை, 11. கேடு, 12. கூறு, 13. பாடுதல், 14. நிகழ்தல்
சொல் பொருள் விளக்கம்
1. பாடலை இசையுடன் வெளிப்படுத்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sing, chant, warbleas birds, hum as bees, praise, speak endearingly, sound, noise, smearing, hardship, suffering, side, Dignity, honour, greatness, eminence, Etiquette; conventional rules of social behaviour, sleep, Experience; endurance; feeling; bearing, fall, Recumbency, lying prostrate, Ruin, injury, damage, disaster, detriment;, division, singing, occurrence, happening
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி கூடு கொள் இன் இயம் – சிறு 228,229 பாடும் துறைகளெல்லாம் முடியப் பாடுதற்கு, பயன் விளங்குகின்ற இசைகளைத் சுதிசேர்த்தல் கொண்ட இனிய யாழை தன் பாடிய தளி உணவின் புள் தேம்ப புயல் மாறி – பட் 3,4 தன்னை(மேகத்தை)ப் பாடிய, நீர்த்துளியையே உணவாகக்கொண்ட வானம்பாடி வருந்த மழை பெய்யாமற்போக மை படு மால் வரை பாடினள் கொடிச்சி ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு – நற் 373/3,4 முகில் தவழும் பெரிய மலையைப் புகழ்ந்து பாடியவளாய்க் குறமகள் ஐவனம் என்னும் மலைநெல்லைக் குற்றும் நாட்டைச் சேர்ந்த தலைவனோடு ஒரு கை பாடு இன் படு மணி இரட்ட – திரு 114,115 ஒரு கை ஓசை இனிதாக ஒலிக்கின்ற மணியை மாறி மாறி ஒலிக்கப்பண்ண பாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சி – அகம் 226/15 ஓசை இனிய தெளிந்த கிணையினது ஒலியைக் கேட்டு அவனது பெருமையை உணர்ந்து அஞ்சி பாடு புலர்ந்த நறும் சாந்தின் – மது 226 பூசினபடியே புலர்ந்த நறிய சந்தனத்தையுமுடைய வேனில் ஓதி பாடு நடை வழலை – நற் 92/2 வேனிற்காலத்து ஓந்தியின் வருத்தமான நடையைக்கொண்ட ஆண் ஓந்தி கழை பாடு இரங்க பல் இயம் கறங்க ஆடு_மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று – நற் 95/1,2 குழல்கள் பக்கத்தே இசைக்க, பலவகை இன்னிசைக் கருவிகள் முழங்க, ஆட்டக்காரியான கழைக்கூத்தி நடந்த வளைந்த முறுக்கேறிய வலிய கயிற்றில் யாணர் ஊர நின் மாண் இழை மகளிரை எம் மனை தந்து நீ தழீஇயினும் அவர்_தம் புன் மனத்து உண்மையோ அரிதே அவரும் பைம் தொடி மகளிரொடு சிறுவர் பயந்து நன்றி சான்ற கற்பொடு எம் பாடு ஆதல் அதனினும் அரிதே – நற் 330/6-11 புதிய வருவாயையுடைய ஊரினைச் சேர்ந்தவனே! உன்னுடைய மாண்புமிக்க அணிகலன்களை அணிந்த மகளிரை எம்முடைய வீட்டுக்கே அழைத்து வந்து நீ அவருடன் கூடியிருந்தாலும், அவர்களின் புல்லிய மனத்தில் இடம்பிடித்திருப்பது அரிது, அந்த மகளிரும் பசிய தொடியணிந்த புதல்வியரொடு, புதல்வரையும் பெற்றுத்தந்து நன்மை மிகுந்த கற்போடு எம்மைப்போல் குலமகளிரின் பெருமையை அடைதல் அதனினும் அரிது. நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும் பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும் நும்மினும் அறிகுவென்-மன்னே – நற் 160/1-3 நடுவுநிலைமை, நட்பைப் போற்றல், நாணவுணர்வு நன்றாக உடைமை, ஈத்து உவத்தல், நற்பண்பு, உலகவழக்கை அறிந்து ஒழுகுதல் ஆகிய நற்குணங்களை உன்னைக்காட்டிலும் நன்கு அறிவேன் உறுதியாக நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின் பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய் சாதலும் இனிதே – நற் 327/1-3 நம்மை விரும்பி வந்த சான்றோரான நம் தலைவரை நம்புதல் பழியைத் தருமென்றால், உறக்கமில்லாதனவாய்க் கண்ணீர் சொரியும் கண்களோடு மெலிவுற்று இறந்துபோதலும் நமக்கு இனிதாகும் கடும் சுறா எறிந்த கொடும் தாள் தந்தை புள் இமிழ் பெரும் கடல் கொள்ளான் சென்று என மனை அழுது ஒழிந்த புன் தலை சிறாஅர் துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின் பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும் – நற் 392/1-5 கொடிய சுறாமினை எறிந்து கொன்ற கடிய முயற்சியைக் கொண்ட தந்தை பறவைகள் ஒலிக்கும் பெரிய கடலுக்குக் கூட்டிச் செல்லாமல் சென்றுவிட்டான் என்று வீட்டில் அழுது ஓய்ந்த புல்லிய தலையை உடைய சிறுவர்கள் கூட்டாக முயன்று பெற்ற இனிய கண்ணையுடைய நுங்கைத் தாயின் பருத்த கதகதப்பான கொங்கையை உண்ணுவதுபோலச் சுவைத்து உண்டு மகிழும் மயில் அடி இலைய மா குரல் நொச்சி அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே – குறு 138/3-5 மயிலின் அடியைப் போன்ற இலையையுடைய கரிய பூங்கொத்துக்களையுடைய நொச்சியின் அழகுமிக்க மெல்லிய கிளைகளில் மலர்ந்த நீல மணி போன்ற பூக்கள் உதிர்வதால் உண்டாகும் ஓசையை மிகவும் கேட்டு அவரே கேடு இல் விழு பொருள் தரும்-மார் பாசிலை வாடா வள்ளி அம் காடு இறந்தோரே யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ நாளும் பாடு அமை சேக்கையில் படர் கூர்ந்திசினே – குறு 216/1-4 தலைவர், கேடில்லாத சிறந்த பொருளைக் கொணருவதற்காக, பசிய இலைகளையுடைய வாடாத வள்ளிக்கொடி படர்ந்த அழகிய காட்டைக் கடந்துசென்றார்; நானோ, தொகுதியான ஒளியையுடைய வளையல்கள் நெகிழ்ந்துவீழ, ஒவ்வொருநாளும் படுத்தலுக்குரிய கட்டிலில் வருத்தமுற்று இருக்கிறேன்; பாடு ஏற்று கொள்பவர் பாய்ந்து மேல் ஊர்பவர் – கலி 104/55 ஏறுகளின் குத்துக்களைத் தாங்கிக்கொள்பவரும், அவற்றின் மேல் பாய்ந்து ஏறிக்கொள்பவரும் ஆடு_உறு குழிசி பாடு இன்று தூக்கி – புறம் 371/6 சமைத்தற்கு அமைந்த பானையைக் கெடாதபடி மெல்ல எடுத்துவைத்து கடல் பாடு அழிய இன மீன் முகந்து ——————- ——————————- இரந்தோர் வறும் கலம் மல்க வீசி பாடு பல அமைத்து கொள்ளை சாற்றி – அகம் 30/2-10 கடலின் பெருமை அழிய மீன்களை முகந்து ——————- ——————————- இரப்போரின் வெறும் கலன்களில் நிறையச் சொரிந்து பல கூறுகளாகச் செய்து தாம் கொண்டவற்றை விலைகூறி விற்று ஒள் இழை பாடு வல் விறலியர் கோதையும் புனைக – புறம் 172/2,3 விளங்கிய அணிகலத்தையுடைய பாடுதல் வல்ல விறலியர் மாலையும் சூடுக பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து முலைக்கோள் மறந்த புதல்வனொடு – புறம் 211/20,21 பால் இல்லாமையால் பல முறை சுவைத்து முலையுண்டலை வெறுத்த பிள்ளையுடனே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்