பாராட்டு –புகழ்ச்சி,புகழ்ந்துபேசு
சொல் பொருள் விளக்கம்
(வி) 1. புகழ்ந்துபேசு, மெச்சு, 2. கொஞ்சு, சீராட்டு, 3. மிகுத்துரை, 4. கொண்டாடு, 5. நலம் கூறு, 6. உரிமை கொண்டாடு,
(பெ) புகழ்ச்சி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
applaud, praise, caress, fondle, exaggerate, magnify, celebrate, commend, appreciate, claim, laudation
felicitation, commendation, compliment, glorification
congratulate, compliment, glorify
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கண்ணும் தோளும் தண் நறும் கதுப்பும் திதலை அல்குலும் பல பாராட்டி நெருநலும் இவணர்-மன்னே – நற் 84/1-3 என் கண்ணையும், தோளையும், குளிர்ச்சியான நறிய கூந்தலையும் அழகுத்தேமல் படர்ந்த அல்குலையும் பலவாறு புகழ்ந்து நேற்றுக்கூட இவ்விடம் இருந்தார், நிச்சயமாக! கிளி ஓர் அன்ன கிளவி பணை தோள் பாவை அன்ன வனப்பினள் இவள் என காமர் நெஞ்சமொடு பல பாராட்டி யாய் மறப்பு அறியா மடந்தை – நற் 301/5-8 கிளியின் தன்மையை ஒத்த சொற்களையும், பருத்த தோள்களையும், கொல்லிப்பாவை போன்ற வனப்பையும் கொண்டவள் என் மகள் என்று அன்புடைய நெஞ்சத்தோடு பலவாறாகக் கொஞ்சிப் பாராட்ட, எமது தாயின் கவனத்தைவிட்டுச் சிறிதும் அகலாத மடந்தை, மாலை நீ தகை மிக்க தாழ் சினை பதி சேர்ந்து புள் ஆர்ப்ப பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய் – கலி 118/17,18 ஏ மாலையே! அழகு மிக்க தாழ்ந்த கிளைகளில் இருக்கும் தமது இருப்பிடத்தைச் சேர்ந்து, பறவைகள் ஆரவாரிக்க, அவற்றைக் கண்டு பொறாமைப்படும் நெஞ்சத்தினையுடைய எங்களின் சிறுமைத்தனத்தை மிகுத்துப்பேசுகிறாய் துணை மலர் கோதையார் வைகலும் பாராட்ட மண மனை ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே – கலி 70/9,10 துணை மாலை கொண்ட மலர் மாலை அணிந்த பரத்தையர் கொண்டாட, ஒவ்வொருநாளும் , மணவீடுகளில் முழங்கும் உன் மண முழவின் ஓசை வந்து அத் தூக்கத்தைக் கலைக்கும்; மடல்_மா ஊர்ந்து மாலை சூடி கண் அகன் வைப்பின் நாடும் ஊரும் ஒண் நுதல் அரிவை நலம் பாராட்டி – நற் 377/1-3 பனைமடலால் செய்த குதிரையில் ஏறி வந்தும், எருக்கம்பூ மாலையைச் சூடியும் இடம் அகன்ற உலகத்தின் நாடுகள்தோறும், ஊர்கள்தோறும், ஒளிரும் நெற்றியையுடை அரிவையின் அழகினைச் சிறப்பித்துக்கூறியும், கண்ண் தண்ண் என கண்டும் கேட்டும் உண்டற்கு இனிய பல பாராட்டியும் – மலை 352,353 கண் குளிரக் கண்டும் (செவி குளிரக்)கேட்டும், உண்ணுவதற்கு இனியவை பலவற்றை உரிமையுடன் கொண்டும், என் பால் அல் பாராட்டு உவந்தோய் குடி உண்டீத்தை என் பாராட்டை பாலோ சில – கலி 85/32,33 எனக்குரிய பாலைக் குடிக்காமல், என் பாராட்டைக் கேட்டு உவந்தவனே! குடித்து உண்பாய் என் பாராட்டை! அந்தப் பாலும் கொஞ்சமே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்