Skip to content

சொல் பொருள்

(வி) 1. விரும்பு, 2. மகிழ், 3. புகழ்ந்து கூறு,

2. (பெ) 1. துணை, ஆதரவு, பற்றுக்கோடு, 2. விருப்பம்,  3. புகுதல், 4. வசிப்பிடம், இருப்பிடம், 5. வெற்றிச்செருக்கு

சொல் பொருள் விளக்கம்

1. விரும்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

desire, rejoice, praise, support, prop, desire, entering, dwelling, residence, elation over victory

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வெ வரி நிலைஇய எயில் எறிந்து அல்லது
உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய
நெஞ்சு புகல் ஊக்கத்தர் – பதி 68/5-7

கண்டோர் விரும்பும் அழகிய கோலங்கள் நிலையாய் அமைந்த பகைவர் மதிலை அழித்தாலொழிய
உண்பதில்லை என்று அடுக்கிக்கொண்டே சென்ற நாள்கள் பல கழிய,
நெஞ்சம் போரையே விரும்பும் ஊக்கத்தையுடையவராய்,

காதலர் உழையர் ஆக பெரிது உவந்து
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற – குறு 41/1,2

காதலர் அருகிலிருப்பவராய் இருக்கும்போது பெரிதும் மகிழ்ந்து
திருவிழாக்காணும் ஊரைப்போல மகிழ்வேன், உறுதியாக

செரு மிக்கு புகலும் திரு ஆர் மார்பன் – மலை 356

போர்த்தொழில் மிக்கு நடத்தலால் உலகம் புகழும் திருமகள் நிறைந்த மார்பினன்

மை அணல் காளை பொய் புகல் ஆக
அரும் சுரம் இறந்தனள் என்ப – நற் 179/8,9

கரிய மீசையும் தாடியையுமுடைய காளையொருவனின் பொய்மொழிகளை ஆதரவாகக் கொண்டு
கடப்பதற்கரிய பாலை வழியில் சென்றுவிட்டாள் என்கின்றனர்

ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு
படு பிணம் பிறங்க நூறி – பதி 69/8,9

பகைவரைத் தேடிப்பிடித்துப் போரிடும் போரவா மிகுந்த வீரர்களும் ஆகிய படையுடன் சென்று,
வெட்டுப்பட்டு விழுகின்ற பிணங்கள் குவிந்து உயரும்படி பகைவர்களைக் கொன்று,

ஒடுங்கி யாம் புகல் ஒல்லேம் பெயர்தர அவன் கண்டு
நெடும் கய மலர் வாங்கி நெறித்து தந்தனைத்தற்கோ – கலி 76/10,11

உடலை ஒடுக்கிக்கொண்டு நான் உள்ளே புகுந்து மலர் பறிக்கமாட்டாமல் பின்னேவர, அவன் அதனைக் கண்டு
ஆழமான குளத்து நீரில் இருந்த மலரைப் பறித்துப் புறவிதழை ஒடித்துத் தந்ததற்காகவோ

புள்_இனம் இரை மாந்தி புகல் சேர ஒலி ஆன்று
வள் இதழ் கூம்பிய மணி மருள் இரும் கழி – கலி 121/4,5

பறவை இனங்கள் தம் இரையை ஆர உண்டு தம் வசிப்பிடங்களைச் சேர, ஒலி அடங்கி,
வளமையான இதழ்கள் குவிந்து நிற்கும் நீல மணியைப் போன்ற பெரிய கழி

மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை
வாயுள் தப்பிய அரும் கேழ் வய புலி
மா நிலம் நெளிய குத்தி புகலொடு
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை – அகம் 251/15-18

குற்றமற்ற வெள்ளிய கொம்பினையுடைய பெருமை வாய்ந்த யானையானது
தன்வாயினின்றும் தப்பிய அரிய நிறத்தையுடைய வலிய புலியை
பெரிய நிலம் குழியக் குத்திக்கொன்று செருக்குடன் பாதுகாவல் இன்றித் தங்கியிருக்கும் தேக்குமரங்கள்
நிறைந்த காடாகிய

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.