1. சொல் பொருள்
(பெ) ஒரு பறவை
2. சொல் பொருள் விளக்கம்
புறா இனங்களில் மணிப்புறா, மாடப்புறா, வெண்புறா என்று பலவகைகளுண்டு
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Dove, Pigeon;
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
புன் புறா உயவும் வெம் துகள் இயவின் – நற் 66/5
மிளகை வாயில் போட்டு மெல்லும்போது காரம் இருப்பது போலச் சுவை இருக்கும் உகாய்க் காயைச் சிதைத்து உண்ட புறா தனித்து விரிந்திருக்கும் மரக்கிளை ஒன்றில் ஏறி இருந்துகொண்டு அதன் காரம் போக, வெறி கொண்ட துடிப்போடு தன் கழுத்துச் சிறகுகளைக் கோதிக்கொண்டிருக்கும் காடு அது.
புன் புறா வீழ் பெடை பயிரும் – நற் 314/11
நீர்க் குமிழி போல் பூத்திருக்கும் கள்ளியில் அமர்ந்துகொண்டு ஆண்புறா தான் விரும்பும் பெண்புறாவை அழைக்கும் காட்டில் கோடைக்காலத்தில் சென்றுவிட்டார்.
துணை புறா இரிக்கும் தூய் மழை நனம் தலை – அகம் 287/9
கோடைக்காற்று வீசும்போது ஆலம் விழுது ஆடும். விழுது ஆடும்போது அதில் அமர்ந்திருக்கும் இணைப்புறாக்கள் பறந்தோடும். கோடைமழை பொழியும்.
இரும் புறா பெடையொடு பயிரும் – அகம் 307/14
கோயில் சுவரில் புற்று ஏற, கோயில் கொடிக்கம்பத் தூணில் நிலை கொள்ளாமல் கடவுள் விட்டுவிட்டுப் போன கோயிலை விட்டு விலகிச் செல்லாமல் அதன் சுவற்றில் வாழும் ஆண்-புறா தன் பெண்-புறாவைக் கூவி அழைக்கும் வழியில்,
மணிப்புறா துறந்த மரம் சோர் மாடத்து – அகம் 167/14
மணிப்புறா விட்டொழிந்த மரம் சோர்ந்த மாடத்தினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது