Skip to content
நரி

நரி என்பது கண நரி, குறுநரி, வெண்ணரி, ஒரு விலங்கு.

1. சொல் பொருள்

(பெ) கண நரி, குறுநரி, வெண்ணரி, ஒரு விலங்கு.

2. சொல் பொருள் விளக்கம்

சங்க இலக்கியத்தில் நரி வருமிடங்களிலெல்லாம் கண நரியைக் ( Jackal ) குறிப்பதாகவே தெரிகின்றது. கணநரியைச் சங்க இலக்கியத்தில் குறுநரி ( அகம் . 94 , 274 , புறம் . 359 , நற்றிணை 164 , கலி . 65 ) என்றழைப்பதைக் காணலாம் .

ஊளையிடும் நரியையே சங்க நூல்கள் ‘ கணநரி எனக் குறிப்பிடுகின்றன . இந்நரிகள் பெரும்பாலும் கூட்டமாகக் காணப்படும் . கூட்டமாக மாறிமாறி ஊளையிடும் . கூட்டமாக வேட்டையாடுவதுமுண்டு. இம்முறையாகக் கூட்டமாகவே பெரும் பாலும் கண்டதால் சங்க காலத்தில் இந் நரியினத்தைக் கணநரி அழைத்தனரெனத் தெளிவாகின்றது .

இந் நரிகள் கூட்டமாக உணவைத் தேடி உண்பது . நரியினத்தில் இந் நரியினமே இத்தகைய குணமுடையது. ஆதலின் கணநரி என்று அழைத்தது மிகவும் பொருத்தமானது. அகநானூற்றிலும் புறநானூற்றிலும் கணநரி என்றே கூறப்பட்டிருப்பதை நோக்கவும் . கணநரி இனத்தோடு குழுமிப் பிணத்தின் கொழுப்பைத் தின்றதாகக் கூறியிருப்பதையும் கவனிக்கலாம்.

நரி
நரி

காடுகளில் கழிந்த ஊன் தசைகளையும், வேட்டையாடும் புலி முதலிய விலங்குகள் உண்ட மிச்சிலையும் இந்நரிகள் உண்ணும் . இந்நரிகள் காடுகளில் வேட்டையாடும் புலி, சிறுத்தை முதலிய விலங்குகளின் பின்னால் திரியும் . வேட்டையாடிய விலங்குகள் உண்டு சென்றபின் எஞ்சியதைத் தின்று இந்நரிகள் வயிற்றை நிறைக்குமென்று கண்டுள்ளனர் .

பழமொழி நானூற்றில் “நரியிற் கூண் நல்யாண்டும் தீயாண்டும் இல் ( 102 )” என்ற பழமொழி வருகின்றது . நரிக்கு உணவு நிறையக் கிடைக்கின்ற நல்ல காலமும் உணவு கிடைக்காத பஞ்சகாலமும் கிடையாது என்பதைக் கண்டுணர்ந்து கூறியுள்ளார் . நரியானது பெரும்பாலும் தானே வேட்டையாடி உண்பது கிடையாது .

ஆதலால் நரிக்கு உணவுப் பஞ்சம் என்பது கிடையாது. வேட்டையாடும் விலங்குகள் விட்டுச் சென்ற கழிவுகளையே தின்பதால் அதற்கு என்றும் பஞ்சம் ஏற்படப் போவதில்லை . புலி முதலிய வேட்டையாடும் விலங்குகளுக்கு மான் முதலிய விலங்குகள் இரையாகும் . இந்த இரையாகும் விலங்குகள் சில காலங்களில் மிகுந்தும் சில காலங்களில் அரிதாகவும் இயற்கையில் காணப்படுமென விலங்கு நூலார் கூறுவர்.

நரி
நரி

புலிக்கு ஏற்படும் உணவுப் பஞ்சம் நரிக்கு என்றுமில்லை . நரியின் உணவோ சிறிது. அதுவும் காட்டில் கிடக்கும் கழிவுகள் . இயற்கைச் செய்திகளை நன்கு கண்டு உணர்ந்த பழுத்த அனுபவத்தில் கூறப்பட்ட இந்தப் பழமொழியின் உண்மை விளக்கம் பிற்காலத்தாருக்குப் புரியவில்லை .

கலி . 65 . புலியைப் பிடிக்க வைத்த வலையில் நரி அகப்பட்டது என்று கலித்தொகை கூறுவது புலியைப் பின் பற்றி நரி செல்வதைக் குறிப்பாகக் காட்டுகின்றது . சங்க நூல்களில் இந் நரிகள் பிணங்களைத் தின்பதைத் தெளிவாகக் கூறியிருப்பதைக் காணலாம் .

பழைமையாகாத இரத்தம் வரும் புதிய உடல் தசையை எருவைக் கழுகுகளுடன் சேர்ந்து நரிகள் உண்ணும் என்று கூறுவதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் . அகநானூறு 275ஆம் பாடல் தெளிவாகக் கணநரி எருவைக் கழுகுடன் சேர்ந்து கொல்லப்பட்டவரின் நிணத்தையும் இரத்தத்தையும் உண்ட தாகக் கூறுகின்றது .

அகநானூறு 193 ஆம் பாடல் எருவைக் கழுகு தன் குஞ்சுகளுக்கு மர உச்சியில் ஊட்டிய ஊன் தசை வழுக்கிவிழ அது நரிக்கு இடைரையானதைக் கூறுகின்றது . நற்றுணை 352 ஆம் பாடல் நெருப்பைப் போன்ற சிவந்த தலையையுடைய எருவைக் கழுகுடன் போரிட்டு நிணத்தைத் தின்ற நரியைப் பற்றிப் பேசுகின்றது.

நரி
நரி

புறநானூறு 391 ஆம் பாடலில் கழுகும் நரியும் பிணத்தைத் தொடர்ந்து பாதுகாக்கச் சொல்லி ஒரு புலவர் பாடுவதைக் கவனிக்கலாம் . இப்பாடல்களில் கூறிய செய்தி அரிய உண்மையான செய்தியாகும்.

பிணந்தின்னிக் கழுகுகளுடன் ( Vultures ) கழிவுகளுக்கும் பிணத்திற்கும் இந்நரிகள் போரிடுவதுமுண்டாம் .இதையே நற்றிணை ( 352 ) நிணம்புரி முதுநரி அழல்போல் செவிய எருவைச் சேவலை ஆட்டியதாகக் கூறியுள்ளது மிகவும் வியப்பாகும் .

கண நரிகள் காடுகளிலும் பாலைவனங்களிலும் தோட்டங்களிலும் வீட்டருகிலும் வாழும் . எந்தச் சூழ்நிலையிலும் காணலாம் . நரிகளைப் பகலில் காண்பது அரிது . இவைகளை இரவில் ஊளையிடுவது கொண்டே கண்டறியலாம் . இரவுக் காலத்தில் வெளியே விடியற்காலையில் பதுங்கிவிடும் . மனிதர்கள் நடமாடாக் காடுகளிலும் பாலைகளிலும் பகலிலும் காணலாம் .

பகலில் காண்பதருமையானதால் நரிமுகத்தில் விழித்தாற்போல என்ற வழக்கு ஏற்பட்டது . சங்க நூல்களில் பெரும்பாலும் வறட்சியான காடுகளின் சூழ்நிலையிலேயே இந் நரி வாழ்வதாகக் கூறப்பட்டிருக்கின்றது . பிணங்களைப் புதைக்கும் முது காட்டிலும் காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது . இச் செய்திகள் இயற்கையோடு ஒத்த செய்திகளாகும் . இந்நரி இரவில் ஊளையிடுவதைக் குறிப்பாகக் கூறியுள்ளனர் .

பதிற்றுப்பத்தில் ஞாயிறு காயும் நடுப்பகலில் இரவில் கூவும் நரி ஊளையிட்டதாகக் கூறியிருப்பதைக் காணலாம். மணிமேகலையில் இரவில் இடுகாட்டில் நரியின் ஊளை கேட்டதாகக் கூறப்பட்டுள்ளது . ஊளை யிடும் இதன் குணத்தை அடிப்படையாகக் கொண்டு ஊளன் என்று மலையாளத்தில் இந்நரியை அழைப்பர் .

கணநரி
கணநரி

-அகம் . 337 . மழையின்றிப் பாலையாக மாறிய வழியில் கள்ளி மரத்தின் நிழலில் வெயில் தாங்காது கதறிக் கொண்டு இரத்தம் சொட்டும் குடலைத் தின்றுகொண்டு ஒரு தனியான ஆண்நரி காணப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது .

நரிகளில் சில காலங்களில் ஆண் நரியைத் தனியாகக் காணலாம் எனக் கூறுவர் . ஆண்நரி தனியாகக் காண்பதையே அகநானூறு 337 ஆம் பாடல் குறிப்பாகக் கூறுகின்றது . நரிகள் காட்டில் மேயும் ஆட்டு மந்தையில் புகுந்து குட்டிகளைப் பிடித்துக் கொன்று உண்பதுண்டு . நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடுகேட்கும் என்ற பழமொழி இதன் காரணமாகவே தோன்றிற்று .

-அகம் , 94 . மேலே காட்டிய அகநானூற்றுப் பாடல்களில் ஆட்டு மந்தையில் குட்டியைப் பார்த்திருக்கும் நரி இடையன் விடும் வீளையோசைக்குப் பயந்து ஓடி ஒளிவதாகக் கூறப்பட்டுள்ளதைக் காணலாம் .

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலான் முகத்த களிறு ” – குறள் , 500

களர்ச் சேற்றில் காலாழ்ந்து புதைந்த யானையை நரி கூடக் கொல்லுமென்றது , நரிகள் கூட்டமாகச் சேர்ந்து கொல்லுமென்பதேயாகும் .

தொல் காப்பியத்தில் , மரபியலில் “ பாட்டி யென்பது பன்றியு நாயும் , நரியு மற்றே நாடினர் கொளினே ” ( 620-64 ) என்று வரும் சூத்திரத்தில் நரி கூறப்பட்டுள்ளது . பெண் நரி பாட்டி யெனக் கூறப்படும் . ஆனால் இன்று இப்பெயர் மனிதருக்கு வழங்குகிறது . தாயின் தாய்க்குப் பாட்டி யென்ற சொல் வழங்குவது நகைப்புக் கிடமாயிருக்கின்றது .

குறுநரி
குறுநரி

நரியின் கூழைப் பார்வையைக் குறித்தே சிலருடைய சாய்ந்த பார்வையை ஒன்றரைக் கண்ண ஓரியான் என்று நகையாகக் குறிப்பிடுகின்றனர். கணநரியைச் சங்க இலக்கியத்தில் குறுநரி ( அகம் . 94 , 274 , புறம் . 359 , நற்றிணை 164 , கலி . 65 ) என்றழைப்பதைக் காணலாம் .

மலையாளத்தில் கணநரியைக் ( Jackal ) குறுக்கன் என்றும் ஊளன் என்றும் குறுநரி என்றும் வழங்குகின் றனர் . குறுநரி என்று சங்க நூல்கள் குறிப்பிடுவது இன்றும் மலையாளத்தில் வழங்கும் குறுநரியே என்பதில் ஐயமில்லை. குறுநரிக்கு நல்ல நாராயங் கொளல் என்ற பழமொழி ( 51 ) கூறும் நரியும் இஃதேயாகும் . குறுநரியைக் கொல்ல இரும்பாலான குத்துக்கோலான நாராசத்தைப் பாய்ச்ச வேண்டியதில்லை என்றே இப்பழமொழி கூறுகின்றது .

வெண்ணரி என்று இரு பாடல்களில் குறிப்பிடப்பட்டிருப்பது கணநரியே யாகும் . மழைக்காலத்தில் சிறிது கருமை கலந்தும் , வெயிற் காலத்தில்வெண்மை கலந்தும் நரியின் நிறம் தெரியும். நரியின் நிறத்தை உறுதியாகக் கூற முடியாது . அதனால் தான் நரிநிறமென்ற வழக்கிற்குப் பலநிறக் கலப்பு என்ற பொருள் உள்ளது .

வெண்ணரி
வெண்ணரி

வெண்ணரி ( புறம் 291 ; பதிற்றுப்பத்து , 22 : 35 ) என்பது நரியினத்தில் காணப்படும் வெள்ளையினத்தைக் குறித்தேயிருக்கும் .பெரும்பாலும் நரி புதர்களில் வாழும் . குள்ளநரி குழி களில் பதுங்கி வாழும் . இதனால் ‘ நரிப்பள்ளம் எனும் சொல் ஆற்றில் ஆழம் அளந்தறியாத பள்ளத்திற்குப் பெயர் . குள்ளநரி வளைந்து வளைந்து உள்ள வழியில் குழிகளுக்குள் வாழுமெனக் கூறுவர் .

இக்குழிகளை எளிதில் அறிய முடியாது . நரிப் பள்ளம் என்ற வழக்கு இதனால் வந்தது . சங்கப்புலவர் ஒருவருக்கு நரிவெரூஉத்தலையார் என்ற பெயர் காணப்படுகின்றது . நரிகள் பிணத்தையும் , கழிவு ஊன்தசைகள் , எலும்பு களையும் தின்று வாழுமாதலால் நரிகள் பயப்படும்படி யான விலங்குத் தலையோ மனி தன் தலையோ இருக்க முடியாதெனக் கருதி அத்தகைய நரியும் பயப்படும்படி யான உருவுடைய தலையை யுடையவராக அப் புலவர் இருந்திருப்பாரெனத் தெரிகின்றது .

புலித்தலையை நாய் மோத்தலில் என்றொரு பழமொழி உண்டு. புலி யைக் கண்டால் நாய்க்கு மிக்க பயம் . அதன் காரணமாக இறந்த புலியின் தலையைக் கண்டால்கூட நாய் பயப்படுமென்பதையே இப்பழமொழி கூறும். ஆனால் நரிகளுக்கு அத்தகைய பயம் கிடையாது . அவைகள் கூடப் பயப்படும்படியான தலை என்பதையே புலவர் பெயர் குறிப்பிடுகின்றது .

குறுநரி
குறுநரி

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Canis Indicus, The Jackal

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி/பச்சூன் கொள்ளை மாந்தி வெய்து-உற்று – நற் 352/5,6

கவலை வெள் நரி கூஉம் முறை பயிற்றி – பதி 22/35

ஏதில் குறு நரி பட்டு அற்றால் காதலன் – கலி 65/25

கொல் பசி முது நரி வல்சி ஆகும் – அகம் 193/10

வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை – அகம் 337/15

கண நரி இனனொடு குழீஇ நிணன் அருந்தும் – அகம் 375/6

விளரி கொட்பின் வெள் நரி கடிகுவென் – புறம் 291/4

பிணம் தின் குறு நரி நிணம் திகழ் பல்ல – புறம் 359/3

கண நரி திரிதரும் ஆங்கண் நிணன் அருந்து – புறம் 373/37

கண நரியோடு கழுது களம் படுப்ப – புறம் 369/16

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *