Skip to content
புலி

1. சொல் பொருள்

(பெ) வரிப்புலி, புள்ளிப்புலி, சிறுத்தைப் புலி

பார்க்க இரும்புலி, கடுவாய் புலி, புலித்தொடர், புலிப்பல்தாலி, புலிகடிமால்

2. சொல் பொருள் விளக்கம்

சங்க இலக்கியத்தில் பேசப்படும் புலி வரிப்புலியா , சிறுத்தைப்புலியா என்ற கேள்வி எழலாம் . பெரும்பாலும் வரிப்புலியைப் பற்றியே ( Tiger ) பாடியுள்ளனர் . ஆனால்சிறுத்தைப் புலியும் ( Panther) சிலவிடங்களில் கூறப்பட்டுள்ளது .

சங்க நூல்களும் வரிப்புலி வாழ்வதாகக் குறிப்பிடும் இடங்கள் மலைச்சாரல்களும் , மூங்கில் நிறைந்த காடுகளும் , சோலைகளுமாகும் . சங்க நூல்களில் புலி வாழும் இடங்கள் , சூழல்கள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது உண்மையான தெளிவான செய்தியாகும் .” பலாவமல் அடுக்கம் ” ” கழைநரல் சிலம்பு ” -அகம் , 8

” கழைநரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு வாழை யோங்கிய தாழ்கண் அசும்பு ” – அகம் , 8 “ மழைபடு சிலம்பு ” – அகம், 12. “ ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன் ” – அகம் , 72 ,” பனியிருஞ் சோலை – அகம் , 112 .” கழைதிரங்கு அடுக்கம் -அகம் , 347 .” ஒலிகழை நிவந்த ஓங்குமலைச் சாரல் “- குறுந்தொகை, 253 .கல்லகச் சிவப்பு அகம் , 202.“ தேக்கமல் சோலை ! –அகம் , 251 .

மூங்கிற் காடுகளிலும் , பலா மரங்கள் நெருங்கிய மலைச் சாரல்களிலும் மழை மிகுத்துப் பெய்யும் மலைக்காடுகளிலும் , வழை மரமும் வாழை மரமும் இயற்கையாக அடர்ந்து வளரும் தாழ்ந்த சேறு நிறைந்த சூழலிலும் புலி , வாழ்ந்ததாகக் கூறியிருப்பது உண்மையான செய்தியாகும். அடர்ந்த மலைச்சாரல் காடுகளிலும் தேக்கஞ் சோலைகளிலும் ( Sholas ) மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் புலிகளைத் தமிழ் நாட்டில் காணலாம் எனக் கூறுவர் . மலையடுக்கங்களிலும் சிலம்பிலும் புலி வாழ்வதாகக் கூறியுள்ளதையும் கவனிக்கலாம் . மலையில் உள்ள சிலம்பில் ( Valley ) வாழ்வதாக விலங்கு
நூலார் கூறுவர் . : தாழ்கண் அசும்பு – ( Swamps ) நீர் அறிக்கொண்டிருக்கும் இடமாகும் .

புலி
புலி

புலிகள் குட்டிகளுடன் இருக்குமிடம் , தங்குமிடம் கொடிய முள்ளுடைய ஈங்கையும் இண்டும் சூரலும்
உடைய இடம் என்று சொல்லியது மிக நுட்பமான செய்தியாகும் .

இண்டுக் கொடியும் முள்ளுடையது . புலி இக்கொடியினருகாமையில் காணப்பட்டதால் இதைப் புலியிண்டு என்று அழைப்பர், ஈங்கைக் கொடியை Acacia caesia என்றும் இண்டங்கொடியை Pterolobium Indicum என்றும் முள்ளுடைய
சூரல் செடியை Zizlyhus oenoplia என்றும் அழைப்பர். ஈங்கை கன்னடத்தில் சீங்கை எனப்படும் . இண்டங் கொடி
யின் முள்ளை புலி தடுக்கி என்றும் கூறுவர் . இண்டும் ஈங்கையும் சூழ்ந்த புதல் புலிக்குக் காப்பாகும் . அதுவே
புதலுக்கும் காப்பாகுமென்று கூறுவர் .

ஏனெனில் அந்தப் புதலை நெருங்க மனிதர் அஞ்சுவர் . புறநானூற்றில் புலி துஞ்சு வியன்புலம் கூறப்பட்டுள்ளது . புலிக்கும் புதற்கும் உள்ள தொடர்பையே புதற்கு வலியே புலிக்குப் புதலும் வலியாய் விடும் என்ற பழமொழியில் விளக்கப்பட்டது .

சங்க இலக்கியத்தில் பல பாடல்களில் புலி தங்குமிடம் , பதுங்குமிடம் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது .கல்முகை, கல்லளை , கன்முழை , இருள் முகை என்பனவெல்லாம் கற்குகையைக் குறிக்கும் . கற்பாறைகளில் இயற்கையாகவே காணும் மறைவான பிளப்புகளிலும் வாழ்வதாகக் கூறப்பட்டுள்ளதையும் கவனிக்கலாம் .விடரளை , விடரகம், விடர்முகை ஆகியவைகளில் புலி ஒடுங்குவதாகக் கூறியிருப்பதும் உண்மையான செய்தி . மூங்கிலை எடுத்துப் பாறைப் பிளப்பைச் சுற்றி நட்டு

வைத்ததுபோல இருக்குமிடத்தில் கொடிகள் அடர்ந்துமிடைந்த விடர்முகை யில் புலியிருந்ததாக நற்றிணை 322 ஆம் பாடல் கூறுவது மிக அரிய தெளிவான செய்தியாகும் . புலி படுக்குமிடமாக விடரளைப் பள்ளி என்று குறிப்பிடுவதையும் காணலாம் . சங்க இலக்கியத்தில் பல பாடல்களில் புலி பிறவிலங்குகளைக் கொன்று உண்பதைப் பற்றிய செய்திகள்
காணப்படுகின்றன .

புலி
புலி

புலியும் யானையும் போரிடும் செய்தியே மிகுந்து காணப்படுகின்றது . ஆமானையும் ( Indian Bisaa) , மரையானையும் (Nilgai ), மான்களையும் ( Deer and Antilopes ) , காட்டுப் பன்றியையும் வேட்டையாடுவதைப் பற்றிப் பல பாடல்களில் செய்திகள் வருகின்றன

-அகம் , 22 .சமயம் பார்த்துக்கொண்டே ஒதுங்கிப் பதுங்கிக் கொண்டிருக்கும் புலிபோல என்று அகநானூறு கூறுவது அரிய விளக்கமாகும் . புலி பதுங்கியிருந்து தாக்கும்போது பெரும்பாலும் இரையாகும் விலங்குகளைக் கழுத்தைக் கடித்து முறித்துக் கீழே விழச்செய்யும் என்று விலங்கு நூலார் கூறுவர் . கழுத்தின் அடிப்பாகமான தொண்டையைக் கவ்வும்போது எந்த விலங்கும் தப்பித்து ஓடுவது அரிது

கறுழ்பொருத செவ்வாயான் எருத்து வவ்விய புலி போன்றன என்று புறநானூறு (4) கூறுவது உற்றுநோக்கத்தக்கது. மான் முதலியவற்றின் கழுத்தைக் கவ்வி உதிரம் உவற்றியுண்ட புலியைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றது . தொண்டையைக் கடித்துக் கொல்வதுபோலவே இரையாகும் விலங்கின் மேலேறிப் பாய்ந்து கழுத்தைப் பிடித்து முறித்துக் கொல்வதுமுண்டு .புலியின் பாய்ச்சலைத் தனியானதெனக் கருதியே புலிப் பாய்த்துள் என்று வழங்கினர் .

-அகம், 362 . புலியின் பெரிய , வலிய , வளைந்த நகங்கள் இரத்தம் பூசப்பட்டிருக்கும்போது முருக்க மரத்தின் வளைந்த பூவரும்பை ஒத்திருக்கும் என்று கூறியது உருவிலும் நிறத்திலும் மிகப் பொருத்தமான உவமை .நகங்களை மடக்கி உள்ளே வைத்திருக்கும்போது விரல்களையுடைய புலியின் காலடி வாழைக்காயின் குலை போலிருக்கும் என்று கலித்தொகையில் உவமை வருகின்றது .

புலியின் விரல்கள் பிஞ்சு வாழைக்காய் போல இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது . புலியின் பிடியில் அகப்பட்ட விலங்கு தப்புவது அரிதென்பதை அறிந்தே சங்கப் புலவர்கள் புலிக்கு கோள்வல் ” என்ற அடைமொழி கொடுத்து வழங்கினர் . மற்றும்
புலிக்கோள் கோட்புலி என்றும் வழங்கினர் . கொண்டதை விடாத புலி என்பதைக் குறித்தே கோள்வல் ஏற்றை ( குறுந்தொகை 141 , அகம் 171 , ஐங்குறு நூறு 216 , நற்றிணை 36 ) கோள்வல் வேங்கை ( ஐங்குறுநூறு 385 ) , இருங்கோள் வயப்புலி ( அகம் 332 ) புலிக்கோள் ( ஐங்குறு நூறு 373 ) கோட்புலி (நற்றிணை 237 ) என்றெல்லாம் சங்க நூல்களில் வருகின்றன . சிலப்பதிகாரத்தில் கலனசை வேட்கையிற் கடும்புலி போன்று என்று வரும் கொலைக்களக் காதை வரிக்குக் கூறிய உரையில் கடும்பசியால் ஊனைக் கவ்விவிடாத புலிபோன்று என்று கூறியிருப்பதைக் காணலாம் .

புலி
புலி

அகநானூறு 347 ஆம் செய்யுள் புலி பாய்ந்ததற்குப் பயந்து கன்றை விட்டுவிட்டு ஓடிய பெண் யானையைப்
பற்றிக் கூறுகின்றது. கன்றைக் காணாமல் பெண்யானை கையைத் தலையில் வைத்துக் குரலிடுவதாகக் கூறுவதைக் காணலாம் . ஐங்குறுநூறு 216 ஆம் பாடலில் புலி பெண்யானை யீன்ற கன்றைத் தூக்கிக் கொண்டு செல்வதைப் பற்றிக் கூறியுள்ளது . நிரையுடன் கூடியிருக்கும் போது யானையின் கன்றைப் புலி கவர முயன்றாலும் முடியாது . நிரையில் உள்ள ஆண் யானைகள் புலியிட மிருந்து கன்றைக் காக்குமென விலங்கு நூலார் கூறுவர். அகநானூறு 168 ஆம் பாடலில் இதே செய்தி கூறப்படுவதைக் காணலாம் . .

சங்க இலக்கியத்தில் சில பாடல்களில் யானையைப் புலி கொல்வதாகக் கூறப்பட்டுள்ளது . சில பாடல்களில் புலியை கொல்வதாகப் பாடப்பட் சில பாடல்களில் யானையும் புலியும் போரிட்டு ஒன்றை யொன்று வெல்ல முடியாது வலி
யிழந்து புண்களுடன் போவதாகப் பாடப்பட்டுள்ளது .

நற்றிணை , 36 .புலி யானையைக் கொல்வதாக மேலே பாடல்களில் கூறப்பட்டுள்ளது . இச்செய்தி பாடல்களில் வருகின்றது . அதுபோலவே யானை புலியைத் தாக்கிக் கொல்வதாகவும். விரட்டிவிடுவதாகவும் சில சங்கப் பாடல்கள் கூறுவது அரிய செய்தியாகும் . தும்பிக்கையில் அகப்படாது தப்பித்த புலியைப்பற்றி அகநானூறு 118 ஆம் பாடல் குறிப்பிடுகிறது

அகநானூறு 251 -ஆம் பாடல் யானையின் வாயிலிருந்து தப்பிய புலியைப் பற்றிப் பேசுகின்றது . புலியுடன் நடத்திய போரில் புண்ணுற்று வருந்தும் யானையைப் பற்றி அகம் . 45 , 202 , 308 , 398 பாடல்கள் கூறுகின்றன . புலியைக் கொன்று வென்ற
யானையைப் பற்றி அகநானூற்றுப் பாடல்கள் 202 , 272 , 307, 332 , நற்றிணைப் பாடல்கள் 39 , 353 கூறுகின்றன.
புலிக்குத் தப்பிய யானையைப் பற்றி அகநானூறு 118 , 221 பாடல்கள் கூறுகின்றன . தன்னுடைய கன்றை
யுடைய இனத்தைக் காப்பாற்றப் புலியை வென்றயானையைப் பற்றி அகநானூறு 202 குறுந்தொகை 215 பாடல்கள்

கூறுகின்றன. நற்றிணைப் பாடல் ( 39 ) புலியை விளையாடிய யானையைப் பற்றிக் கூறியது அறிய செய்தியாகும் . புலியை எளிதில் கொன்ற யானையைப்பற்றியே அப்படிக் கூறப்பட்டுள்ளது .362 ஆம் பாடல் யானையால் காயமுற்று வருந்தும் புலியைப் பற்றிக் கூறியுள்ளது . புலியுடன் போரிட்டதில் புலியால் நீண்ட தசை கிழிக்கப்பட்ட புண்ணோடு காணும் யானையைப்பற்றி அகநானூறு 308 கூறுவது உண்மைச் செய்தியாகும் . இந்தச் செய்திகளெல்லாம் சங்கப் புலவர்கள் – நேரில் கண்டறிந்து கூறியன போலத் தோற்றுகின்றன. சங்கப் புலவர்கள் யானைக்கும் புலிக்கும் நடந்த போரில் இயற்கையாகவே நிகழும் பல செய்திகளையும் கண்டறிந்தவர் போலக் கூறினமை மிகுந்த வியப்பை அளிக்கின்றது . இந்தச் செய்திகள் அனைத்தும் பல வேட்டையாளர் இன்று எழுதி வருகின்றனர் .

புலி
புலி

-நற்றிணை , 104 . நற்றிணைப் பாடலில் குறச் சிறுவர்கள் புலியும் யானையும் போரிடுவதை உயர்ந்த பாறையிலிருந்து கண்டு களித்ததாகக் கூறுவதைக் காணலாம். இம் முறையாகக் காட்டில் நிகழ்ந்தவையைக் கண்டோ அல்லது கண்டார்வாய்க் கேட்டோ சங்கப் புலவர்கள் பாடியதாகத் தெரிகின்றது . தொல்காப்பியத்தில் தடுமாறு பொருளில் வரும் தொழிற் பெயர்க்கு எடுத்துக்காட்டாக உரையாசிரியர்கள் ” புலி கொன்ற யானை ” ” புலி கொல் யானை என்ற தொடர்களைக் கூறியிருக்கின்றனர் . புலியைக் கொன்ற யானை யென்றும் புலியாற் கொல்லப்பட்ட யானை யென்றும் இரு பொருளுடனும் மயக்கமாகி வருமெனக் கூறினர். இந்த எடுத்துக்காட்டு இயற்கையறிவுடன் நுட்பமாகக் கூறப்பட்டுள்ளது .
சங்க நூல்களில் புலியைக் கொன்ற யானையும் புலியாற் கொல்லப்பட்ட யானையும் கூறப்பட்டுள்ளன . விலங்கு நூலாரும் இதை உண்மையெனக் கூறுவர். இத்தகைய அரிய உண்மையான இயற்கை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தடுமாறு தொழிற் பெயருக்குத் தொல்காப்பியரே இலக்கணம் வகுத்ததைக் கருதுங் கால் பழந்தமிழரின் அறிவாற்றலைப் போற்றாதிருக்க முடியாது .

புலி யானையையும் , பன்றியையும் கொன்று ஈர்த்துச் செல்வதைக் கூறியிருப்பதைக் காணலாம் . பலாமரங்கள் நிறைந்த அடுக்கத்தில் கொன்ற பன்றியை மூங்கிற் காட்டுக்குள் இழுத்துச் செல்வதை அகநானூறு ( 8 ) கூறுவதைக் காணலாம் . யானையைக் கொன்று பாறையில் இழுத்துச் சென்றதால் பாறையெல்லாம் இரத்தம் சிந்திச் சிவப்பாகும்படி இழுத்துச் சென்று நிறைந்த இடத்தில் உண்டதாக அகநானூறு 357 ஆம் பாடல் கூறுவதும் கவனிக்க வேண்டியது .

குறுந்தொகை . 253 . புலி தனது இரையாக எந்த விலங்கைக் கொன்றாலும் உடனே அதை இழுத்துச் சென்று பதுக்கி வைத்து உண்ணும் என்று விலங்கு நூலார் கூறுவர். இதற்குக் காரணம் புலியின் இரையை நரியும் , கழுதைப்புலியும். பிணந்தின்னிக் கழுகுகளும் , காக்கைகளும் , கழுகுகளும் எப்போதும் திருடித் தின்னக் காத்திருக்கின்றன . இந்தக் கள்வர்களிடமிருந்து தான் கொன்ற இரையைக் காக்கவே புலி பாதுகாப்பாக மறைப்பதாக விலங்கு நூலார் கூறுகின்றனர் .

புலியும் சிறுத்தைப்புலியும் மறைத்து வைத்த இரை அழுகிப் புழுப்பிடித்துப்போனாலும் உண்ணும் என்று விலங்கு நூலார் கூறுவர் ; இதைச் சங்கப் புலவர்கள் அறிந்திருந்தனர் . குறுந்தொகை 253 ஆம் பாடலில் புலி தனது இரையைக் கற்குகையில் பதுக்கி வைத்துக் கெடுநாற்றமடித்ததை ” புலி புகாவுறுத்த புலவு நாறு கல்லளை ” என்று தெளிவாகக்
கூறுகின்றது.

அகநானூறு (3 , 97 ) மிகத் தெளிவாக ” புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை ” என்று புலியின் முடைநாற்றமெடுத்த இரையைப் பற்றிக் கூறுகின்றது . இதில் வியப்பைத் தரும் செய்தி அகநானூறு பிணந்தின்னிக் கழுகும் பருந்தும் புலி
கொன்ற இரையைக் கள்வர்போலக் கொள்ளையடிப்ப கூறுவதுதான் . செஞ்செவி எருவை ( king vulture ) என்பது ஒருவகைப் பிணந்தின்னிக் கழுகு . கொள்ளை மாந்தரைப் போல , புலிக்கு இரையான மரையாவின் ஊனைக் கவர்ந்து உண்டதாக அகநானூறு ( 3 ) கூறுவது நேரில் கண்ட செய்தி போலவே உள்ளது . அகநானூறு 97 ஆவது பாடல் இன்னும் விளக்கமாகக் கொள்ளையடிக்கும் கள்ளரைப்போல பிணந்தின்னிக் கழுகும் , பருந்தும் ( plebian eagles ) புலி கொன்று
போட்ட மானின் ஊனைக் கவர்ந்ததாகக் கூறுவதைக் கவனிக்க வேண்டும் . சங்கப் புலவர்கள் புலி தனது இரையை இழுத்துச் சென்று பதுக்குவதையும் , கெடு நாற்றமடிக்க வைப்பதையும் நன்கு கண்டறிந்தே பாடினர் என்பது தெளிவாகின்றது . மேலே காட்டிய பாடல்களில் புலி யானையையும் , மரையாவையும் ( Nilgai ) , கலைமானையும் ( chital stag ) . காட்டுப் பன்றியையும் ( wild boar) கொன்றதாகக் கொண்டது கூறப்பட்டுள்ளதைக் காணலாம் .

புலி பெரும்பாலும் மானினத்தையும் காட்டுப் பன்றிகளையுமே விரும்பி உண்ணும் என்று கூறுவர். ஆனால் தன்னைவிடப் பெரிய விலங்குகளான யானை , ஆமான்( gaur ) ஆகியவைகளைக் கொன்றால் அவைகளையும் இழுத்துச் செல்லும் வலிமை வாய்ந்தது எனக் கண்டுள் ளனர். காட்டுப் பசுவைக் கொல்வது எளிதன்று . அரிதாகக் கொன்ற காட்டுப் பசுவைப் புலி இழுத்துச் செல்வதை அகநானூறு 238 ஆம் பாடல் கூறுவது கண்டதைக் கண்டவாறே கூறுவதுபோலத் தோன்றுகின்றது . -அகம். 238 . விலங்குகள் ஒன்றையொன்று கண்டறிய முடியாதபடி நெருங்கி மரங்கள் வளர்ந்த காட்டில் புலி தனது உணவான மானைத் தேடிச் சென்று காட்டுப் பசுவைக் கொன்று பெரிய பாறைப் பரப்பில் இரத்தம் சிவக்க இழுத்துச் சென்றதாகக் கூறுவதைக் கவனிக்க வேண்டும். மடமான் வல்சி என்று கூறுவதிலிருந்து மானை அன்றாட உணவாகக் கருதினரெனத் தெரிகின்றறது .

” பனைமருள் எருத்திற் பல்வரி இரும்போத்து ” என்று புலியைக் கூறியதையும் கவனிக்க வேண்டும் . களைப் புலி மிகுதியாகக் கொன்று உண்பதால் மான்களுக்குப் புலியைக் கண்டால் மிகவும் அச்சம் . அகம் 249 ஆம் பாடல் புலியினை அஞ்சிப் புள்ளிமான்கள் நிலை தடுமாறி ஓடுவதைக் கூறுகின்றது . அகம் 147 ஆம் பாடலில் கொம்பையுடைய ஆண்மானின் குரலைக் கேட்டுப் புலி குகையைவிட்டு இரைக்குக் கிளம்பு தலைக் கூறுகின்றது . புலி இம்முறையாக மானின் குரலைக்
கேட்டு வேட்டையாடுவது உண்மையே .

புலி
புலி

மலைபடுகடாம் , 505-508 . மரையாவைக் கொன்று உண்பதைப் பிற பாடல்களும் கூறுவதைக் காணலாம். மானினத்தில் பெரியதான கடமானையும் ( Sambur ) புலி கொல்வதைச் சங்கப் புலவர்கள் கூறியுள்ளனர் .

–நாலடி , 300 . கடமான் பெண்மானைக் கூப்பிடும் குரலைக் கேட்கும் புலி என்று கூறியது அரிய செய்தியாகும் . அது போலவே புலியின் குரலைக் கேட்டு மான்கள் ஓடுவதையும் சங்க நூல்கள் கூறுவதைக் கவனிக்கலாம். புலி காட்டுப்பன்றியைக் கொன்று தின்னும் செய்தி கூறப்படுகின்றது , பன்றி வரும் வழியைப் பார்த்துப் புலி பதுங்கியிருந்ததைக்
கூறுவதைக் காணலாம் . புலியிடமிருந்து குட்டிகளைப் பாதுகாக்க ஆண் பன்றி புலியுடன் போரிடுவதையும் கூறியிருப்பதைக் காணலாம் . காட்டுப்பன்றி மிகவும் நெஞ்சுரம் படைத்த விலங்கென விலங்கு நூலார் கூறுவர் . குட்டிகளைப் பாதுகாக்கப் புலியையும் எதிர்த்துப் போராடுவதுண்டு. புலி வேட்டையாடி

பின் உண்ட மகிழ்ச்சியில் புல்லில் புரளுமென்பர். ” முணங்கு நிமிர்ந்து புலவுப் புலி புரண்ட புல்சாய் சிறுநெறி ” என்று அகநானூறு கூறுவதைக் காணலாம். புலி வேட்டையாடும்போது காட்டு விலங்குகள் நீர் உண்ணச் செல்லும் பழக்கமான வழியிலோ யானை போன்ற விலங்குகள் காட்டில் செல்வதற்கு அமைத்துக் கொண்ட தடங்களிலோ பதுங்கிக் கொண்டு பார்க்கும் . மாலைக் காலத்திலோ , விடியலிலோ , இரவிலோ காத்திருக்குமென வேட்டையாளர் கூறுவர் . காடுகளில்
மான்கள் முதலிய விலங்குகள் அன்றாடம் நீர்நிலையை நோக்கிச் செல்லும் தடங்களை எளிதில் காணலாம் .
வேட்டையாளர் இத்தடங்களிலோ நீர்நிலைக் கருகாமையிலோ பதுங்கி இவ்விலங்குகளைக் கொல்வர் . இத்தகைய தடங்களைச் சங்கப் புலவர்கள் நன்கு அறிந்திருந்தனர் . அவைகளை ‘மானதர் என் றழைத்தனர் . மான் என்ற சொல் இங்கு விலங்குகளைப் பொதுவாகக் குறிக்கும் . கானமான தர் என்று அகநானூறு (318 ) கூறுவதை நோக்குக .

மலையில் உள்ள சிறு தடத்தில் இரையைத் தேடிப் புலி சென்றதாக நற்றிணை ( 332 ) கூறுவதைக் கவனிக்க வேண்டும் . அத்தகைய சிறுநெறி சேருமிடத்தில் பரலுடைய பள்ளத்தில் ஊறிய நீர்த்தடத்திற்கு அருகில் புலி யானையைக் கொன்றதாக நற்றிணை 333 ஆம் பாடல் கூறுவதையும் காணலாம் . -அகம் , 155 . நீரைத் தேடிச் சென்ற யானையைப் புலி பின்பற்றிப் பதுங்கிச் சென்றதாகக் கூறுவதைக் காணலாம் . இரவில் புலி இரைதேட வேட்டைக்கு எழுவதைப் புறநானூற்றுப் பாடல்கள் கூறுகின்றன . உடம்பைத் திமிர் முறித்து எழுந்து குகையை விட்டுச் செல்வதாகக் கூறுவதைக் காணலாம் .

இரவில் புலி உருமும் குரல் கேட்டால் காட்டுவிலங்குகள் பாதுகாப்பைத் தேடுமென்பர் . புறநானூற்றில் புலி இரை வேட்டெழுதலை அரசனொருவன் பகைவரை மதியாது போருக்குச் சென்றதற்கு ஒப்பிட்டுக் கூறப்பட்டிருக்கின்றது . காட்டில் செல்லும் புலி எந்த விலங்குகளையும் மதிக்காது போகுமென்பர் .இந்தக் குணத்தையே அரசரை மதியாது பெருமிதமாகப் போர்க்குச் சென்ற செயலுக்கு ஒப்பிடப்பட்டிருக்கின்றது . புலி இரவுக் காலத்தில் காட்டில் செல்லுங்கால் அதைப் பார்த்தோ அல்லது அதன் குரல் கேட்டோ பிற விலங்குகள் பதுங்கும். குரங்குகள் கூக்குரலிட்டுக் கிளைகளில் தாவி உயரப்போகும் . குரங்குகளில் ஒரு முதிய பெண் குரங்கு உச்சிக் கிளையில் அமர்ந்து தொலைவில் வரும் புலியையும்
கண்டுணர்ந்து தனது கூட்டத்தினருக்கு எச்சரிக்கையாகக் குரல் காட்டும் . உடனே குரங்குகள் கூட்ட
மாகக் கிளைகளில் மேலேறிக் கூக்குரலிடும் .

புள்ளிப்புலி
புள்ளிப்புலி

குரங்குகளின் இந்த வழக்கம் வேட்டையாளர்க்கும் விலங்குகளுக்கும் புலி தொலைவில் வருவதை அறிந்து கொள்ள உதவுகிறது . குரங்குகள் காடுகளில் மிகவும் அஞ்சும் எதிரி வரிப்புலியும் சிறுத்தைப் புலியுமாகும். சிறுத்தைப்புலி குரங்குகளை உண்பதையே மிகவும் விரும்புமெனக் கண்டு பிடித்துள்ளனர் . குரங்குகள் புலியைக் கண்டு மிகவும் அஞ்சும் தன்மையைச் சங்கப் புலவர்கள் தெரிந்திருந்தனர் .

அகம் , 205 . புலியின் வரியையுடைய தோல்போல வேங்கைப் பூக்கள் பாறையில் தாவிக் கிடக்க அதைக் கண்ட குரங்குக் கூட்டங்கள் புலியெனக் கருதி மேலே எழுந்த பெரிய கிளைகளில் ஏறிக் கூக்குரலிடும் என்று சொல்லப்பட்டிருப்பதைக் காணுங்கால் சங்கப் புலவர்களுடைய நுண்ணிய அறிவைப் போற்றாதிருக்க முடியாது . புலியின் உருமும் குரலைக் கேட்டவுடன் குரங்குகள் குன்றின் மேல் ஏறியதாக ஐங்குறு நூறு (274 ) கூறுவதையும் காணலாம் .ஐங்குறு நூறு , 274 . குரங்கு புலிக்கு அஞ்சுவதைப் பற்றிக் கூறப்பட்டுள்ள இன்னொரு செய்தியும் வியப்பைத் தருகின்றது .-மலைபடுகடாம் , 309-315 . புலியின் உருமும் குரலைக் கேட்ட தாய்க்குரங்கு கையிலிருந்த குட்டியைக் கைப்பிடியிலிருந்து விட்டுவிட மலைப்பிளப்பில் விழுந்த குட்டியை எடுக்க முடியாது குரங்குகள் கூடிக் கூக்குரலிட்டதாக மலைபடுகடாம் கூறுகிறது . புலிக்குக் குரங்குகள் அஞ்சுவதை இச்செய்தி நன்கு விளக்குகின்றது .

புலி காட்டில் வாழும் விலங்குகளைக் கொன்று உண்ணுவது பொதுவான வழக்கம் . ஆனால் சில சமயங்களில் சில புலிகள் ஆடுமாடுகளைக் கொன்று உண்ணும் பழக்கத்தைக் கொண்டுள்ளன . மேய்வதற்கு வரும் மாடுகளைக் கொன்று உண்ட புலி அந்தப் பழக்கத்தை எளிதில் விடுவதில்லை . சங்ககாலத்திலும் மாடுகளைக் கவர்ந்த புலிகள் இருந்தனவெனத் தெரிகின்றது.

அகம் , 52 . பசுவைக் கொல்லும் புலியைக் கொல்லக் கானவர் வந்த தாகக் கூறுவதையும் காணலாம் . இதைவிட முக்கியமான செய்தி யொன்றையும் சங்கப் புலவர்கள் கூறியுள்ளனர் . சங்க காலத்திலேயே மனிதரைக் கொன்று
உண்ணும் புலிகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது . — ஐந்திணை யெழுபது , 29 . மனி தரைக் கண்டால் காட்டு விலங்குகள் ஒதுங்கிச் செல்வதே வழக்கம் . புலிகூடக் காட்டில் மனிதரைக் கண்டால் ஒதுங்கிச் செல்லுமென வேட்டையாளர்
கூறுவர் . ஆனால் சில சமயங்களில் புலி தற்செயலாக மனிதனைக் கொன்று சுவை கண்டு விட்டால் மீண்டும் மனிதரையே கொன்று உண்ண விரும்புமாம் .இத்தகைய ஆட்கொல்லிப் புலி காடுகளில் மனிதரை நடமாடும் தடங்களில் பதுங்கிப்
பாய்ந்து கொன்றுவிடும் . மாடுமேய்க்கும் ஆட்களை மாலைக்காலத்தில் வழிபார்த்திருந்து கால்வது வழக்கம் .

புள்ளிப்புலி
புள்ளிப்புலி

ஆட்கள் நடமாடும் வழியில் ஒரு குகை யில் பதுங்கிக் கொல்லப்பார்க்கும் புலியைப்பற்றி நற்றிணை 322 -ஆம் பாடல் கூறுகின்றது . பாழான ஊரிலே நடமாடும் மனிதரை உணவுக்காகப் புலி பார்த்ததாக ஐந்திணையெழுபது கூறுகின்றது.
கொல்லிப் புலிகள் ( Man – eaters ) சங்க காலத்திலேயே இருந்தமை சங்கப் புலவர்கள் கூறியுள்ள திலிருந்து நன்கு விளங்குகின்றது . 218 ஆம் பாடல் காட்டு வழியில் மனிதரைக் கொல்லப் புலி பதுங்கிப் பார்ப்பதைக் கூறுகின் றது .
நற்றிணை இரண்டாம் பாடடலும் 29 ஆம் பாடலும் வழியில் சென்றவர்களைக் கொன்ற புலியைப் பற்றிக் கூறுகின்றன . புலி வழங்கும் அதர், புலிவழங்கும் அத்தம் என்று ஐங்குறுநூறு கூறுவதைக் காணலாம் . காட்டில்

வாழும் ஆண் புலிகள் தங்களுக்கென வேட்டையாட எல்லை வகுத்துக்கொண்டு வாழுமெனக் கூறுவர் . ( A tiger settles in a favoured locality and establishes its right over this territory ) சீவக சிந்தாமணியில் ( 1226) கூறப்படும் பழமொழியில் இச்செய்தி வருவது வியப்பைத் தருகின்றது . “புலிக்குத் தன் காடும் பிறகாடும் ஒக்கும் ” என்று கூறப்பட்டுள்ளது . ஒவ்வொரு
புலிக்கும் தன் காடு என்று ஒன்று உள்ளதை இப்பழமொழி குறிப்பிடுகின்றது .

புலி குட்டிபோடும் காலத்தில் புதர் நிறைந்த குகையில் மறைவான இடத்தில் குட்டி போடுமென்பர் . சங்க நூல்களிலும் புலி குட்டி போடுவதைப்பற்றிக் கூறியுள்ளனர் . நற்றிணைப் பாடல்கள் பெண் புலி குகையில் குட்டி போடுவதைக் கூறுகின்றன .
அகநானூறு 147 ஆம் பாடல் மிக வரியதொரு செய்தியைக் கூறுகின்றது .ஈன்று ஊன்பொதி அவிழாத மூன்று குட்டிகள் குகையின் மூலையில் கிடந்ததைப் பற்றிக் கூறிய செய்தி மிக அரிய செய்தியாகும் . புலிகளில் சிறுத்தைப்புலி மரத்தில் நன்கு ஏறும் என்று விலங்கு நூலார் கூறுவர் . வரிப்புலி நீரிலும் நீந்தக்கூடியதெனக் கூறுவர் .

புள்ளிப்புலி
புள்ளிப்புலி

-யாப்பருங்கல விருத்தி- மேற்கோள் . விரைவாக நீர் செல்லும் கான்யாற்றை நீந்திச்சென்ற புலியைப்பற்றிக் கூறியிருப்பதைக் கவனிக்கவும் . சங்க நூல்களில் பெரும்பாலும் காட்டில் வாழும் வரிப் புலியைப் பற்றியே ( Tiger ) பல செய்திகள் காணப்படுகின்றன. அடர்ந்த காட்டில் வாழும் பெருஞ் சிறுத்தைப் புலியைப் ( Panther ) பற்றியும் செய்திகள்
காணப்படுகின்றன . ஆனால் குறுங் காடுகளிலும் , பாறைகள் குன்றுகளிலும் , காட்டுச் சார்பான ஊர் அருகாமையிலும் வாழும் சிறிய சிறுத்தைப் புலியைப் ( Leopard ) பற்றிய செய்திகள் சங்க நூல்களில் மிகுதி யாகக் காணப்படவில்லை .

சங்கநூல்களில் வரிப்புலியையும் ( Tiger ) , பொறிப் புலியையும் (Panther) ஒன்றாகக்கருதியே பலவிடங்களில் பாடப்பட்டிருப்பதைக் காணலாம் . ஆனால் அவைகளைப் பிரித்துணர்ந்து சில பாடல்களில் தெளிவாகக் கூறியிருப்பதையும் காண்கிறோம் . வரிப்புலிக்கு உடலில் வளைந்த வரிகள் உண்டு . பொறிப் புலிக்கு அவ்வரிக்கு இணையாகப் பூப்போன்ற புள்ளிகள் வரிசையாகக் காணப்படுகின்றன . வரிசையாக இப் பொறிகள் காணப்படுவதால் வரியா , புள்ளியா என்பதைக் கண்டு பிடிப்பது எளிதன்று . இதன் காரணமாகவே சங்கப் புலவர் ஆள் வரிப்புலியையும் பெருஞ்சிறுத்தைப் புலியையும்
-அஃதாவது பொறிப் பலியையும் ( Large Panther ) இரும் புலி ( அகம் 27 , 92 , 158, 171 , 216, 272 ; நற்றிணை 36 , 65 , 344 ; குறுந்தொகை 47 , 141 , 215 , 321 , 343 ; புறம் 19, 202 ) என்ற பெயரில் பெரிய புலி என்ற பொருளில் கூறினர் . வலிய புலி என்ற பொருளில் வயப்புலி ( அகம் 22 , 52 , 251 , 347 ) என்றும் வயமான் ( அகம் 14 , 73 , 99 ; ஐங்குறுநூறு 30-1 ) என்றும் , வல்லியம் ( அகம் 362 ; நற்றிணை 2) என்றும் கூறினர் . பெரிய புலி என்றும் , வலிய புலி என்றும் கூறக் காரணம் புள்ளிகளையுடைய சிறுத்தைப் புலியிலிருந்து பிரித்துணரவே என்பதை நன்கு தெளிந்துகொள்ள வேண்டும் . சிறுத்தைப்புலி ( Leopard ) அடர்ந்த காட்டில் வாழ்வதில்லை . ஊர்களின் அருகிலே அடிக்கடி காணப்படும் . வீடுகளில் உள்ள ஆடுமாடுகளையும் நாய்களையும் பிடித்துத் தின்னும் .

காட்டில் வாழும் பெருஞ் சிறுத்தைப்புலி போன்று ( Panther ) பொறிகளை உடையதாயினும் அதைப்போல வலிமையுடையதன்று. இந்தச் சிறுத்தைப் புலியினின்று – சிறுபுலியினின்று பிரித்துணரவே பெரும்புலி யென்ற பொருளில் ” இரும்புலி பாடல்களில் வழங்கினர் . இன்றும் பேச்சு வழக்கிலும் கன்னட மொழியிலும் கொலாமி ( Kolami ), கடபர் மொழியிலும் பெரும்புலி என்றும் ‘ பெத்தபுலி என்றும் , தெலுங்கில் பெப்புலி என்றும் வரிப்புலிக்குப் ( Tiger) பெயர்கள் வழங்கி வருவது சங்ககாலப் பெயரான இரும்புலியுடன் ஒத்துவருவது வியப்பைத் தருகின்றது . மலையாளத்தில் பொறியுடைய புலியைக் குறிக்க புள்ளிப்புலி ( Panther and Leopard ) என்றே வழங்குகின்றனர் . வரிப்புலியைக் கடுவாய் என்று தமிழில் வழங்குவதுபோல் அழைக்கின்றனர் . கொலாமி ( Kolami ) மொழியிலும் கெடியாக் ( Kediak ) என்று வரிப்புலியை அழைப்பதுவும் கவனிக்கத்தக்கது . புலி என்ற சொல்லே முதலில் புள்ளி என்ற சொல்லிலிருந்து தோன்றி , புள்ளியுடைய புலியை அஃதாவது சிறுத்தைப் புலியைக் குறித்து வழங்கியிருக்க வேண்டும் . புள்ளியுடைய புறாவை புலிப்புறா என்று நாட்டுமக்கள் அழைப்பதைக் காணலாம் . புள்ளிப் புலியைக் குறித்த புலியென்ற சொல் பின்னர்ப் புலியின விலங்குகளுக்குப் பொதுவாக வழங்கலாயிற்று . வேங்கை என்ற சொல்லும் வெம்மையான கை என்ற பொருளில் புலியினுடைய வலிய கையைக்குறித்து வழங்கியதாகத் தெரிகின்றது . புலி பிற விலங்குகளை வேட்டையாட அதன் முன்கால்களையே , அஃதாவது கைகளை யே பெரிதும் பயன்படுத்துகின்றது . புலீயின் கையும் வாயும் கொடியவை எனக் கருதினமையால் வேங்கை , கடுவாய் என்ற பெயர்கள் தோன்றின .

புள்ளிப்புலி
புள்ளிப்புலி

பெருஞ்சிறுத்தைப் புலியின் உடலில் காணப்படும் புள்ளி போன்ற , பூப்போன்ற வளைந்த வரியைப் பூம்பொறி என்று கூறினர் . ஆங்கிலத்தில் இதையே Rosette என்று கூறியதை இது சார்பாக நினைத்துப் பார்க்கலாம் . பெருஞ் சிறுத்தைப் புலியின் ( Panther) பொறியைக் குறிப்பாக எடுத்துக் கூறியுள்ளனர் . “ பொறிகிளர் உழுவை ( அகம் 147 ; நற்றிணை 205 ) என்று சங்க இலக்கியத்தில் பெருஞ் சிறுத்தைப்புலி அழைக்கப்பட்டுள்ளது . வரிப்புலியின் வரிகளும் பல பாடல்களில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன . வாள் வரி வயப்புலி ( அகம் 168 ,249 ) , வாள் வரி வயமான் ( அகம் 99 ) வரி வயங்கு
இரும்புலி ( அகம் 216) என்றும் , வாள்வரி ( அகம் 252 ) என்றேயும் புலியை அழைத்திருப்பதும் கவனிக்க வேண்டும் . கொடுவரி இரும்புலி ( அகம் 27, 92 ) என்றும் , கொடுவரி ( அகம் 322 ) என்றேயும் புலியை அழைத்திருப்பதையும் காணலாம் . பல் வரி இரும் போத்து என்று அகநானூறு 238 ஆம் பாடல்கின்றது . புலியின் வரிகள் வளைந்து கொடுவாள் ( Sickle ) போல் உடலில் காணப்படுவதால் வாள்வரி என்றும் கொடுவரி என்றும் பொருத்தமாகக் கூறப்பட்டது . குயவரி இரும்போத்து ( அகம் 398 ), குறிவரி இரும்புலி (நற்றிணை 65 ) எனக் கூறுவதையும் நோக்குக . புலியின் வரிகள் உடலில் வளையம்
போல் திரும்பி ஒன்றுசேராது கொடுவாள் உருவில் இருக்கின்றன.

கடற்கரையில் அலை அடித்துக் கருமணல் வரித்த வரி போன்று இருப்பதாக நற்றிணை( 323 ) கூறுவது மிக அரிய உவமையாகும் . புலிவரி எக்கர் என்று நற்றிணை கூறுகின்றது . புலியினத்தின் வரியையும் பொறியையும் சங்கப்புலவர்கள் தெளிந்திருந்தனர் என்பது தெளிவு . புலியினத்தின் வரியையும் பொறியையுமுடைய தோலை ,வரியும் புள்ளியு மயங்கு வான்புறத்துரிவை மேகலை யுடீ இப் பரிவொடு வேட்டுவ வரி . 29-30 .என்று சிலப்பதிகாரம் கூறுவது பெருஞ்சிறுத்தைப்
புலியின் உடலில் பொறிகள் ( Rosettes ) வரிசையாக அமைந்த தோலைக் குறித்த தாகு மெனலாம் .பெருஞ் சிறுத்தைப் புலி அடர்ந்த காட்டில் வாழ்வதாகவும் வரிப்புலியின் குணங்களை யுடையதாகவும் விலங்கு நூலார் கூறுவர். இப்புவியைத் தற்காலத்தில் தெண்டுப்புலி என்றும் வழங்குவர் .

சிறுத்தைப் புலி
சிறுத்தைப் புலி

புலியின் வரியும் பொறியும் சேர்ந்த உருவம் வேங்கைப் பூக்கள் கற்பாறையில் விழுந்தாற்போல இருப்பதாகவும் , வேங்கை மரத்தின் தழையும் பூவும் புலிக்குட்டி போல இருப்பதாகவும் சங்க நூல்களில் பல பாடல்கள் கூறுவதைக் காணலாம் .

நற்றிணை , 383 . அடர்ந்த காட்டில் மங்கிய ஒளியிலும் , நிலவு வெளிச்சத்திலும் மஞ்சளான ஒள்ளிய வேங்கைப் பூக்கள் கரிய பாறையில் வீழ்ந்து கிடப்பது புலியின் தோல்போன்று இருப்பதாகக் கூறியது பொருத்தமான அரிய உவமை . புலியின் தோல் மஞ்சள் நிறமானதும் கரிய வரிகளுடையதுமாகும் . பெருஞ்சிறுத்தைப் புலியின் பொறிகளுடன் கூடிய மஞ்சள் உடலும் வேங்கைப் பூக்கள் வீழ்ந்த பாறை போலவும் வேங்கைப் பூக்கள் நிறைந்த கிளைகள் போலவும் தோன்றியதாகக் கூறியதும் பொருத்தமான தேயாகும் . புலி வழங்கும் அடர்ந்த காடுகளில் வேங்கை மரமும் இயற்கையில் காணப்படு வதையும் உணரவேண்டும் .

புள்ளிப்புலி
புள்ளிப்புலி

நற்றிணை , 158 , வரிப்புலி யானையைக் கொன்று தன் வாயில் இருந்த இரத்தத்தை வேங்கை மரத்தின் அடிமரத்தில் துடைக்கும் என்று நற்றிணைப் பாடல் கூறியதிலிருந்து வேங்கை மரச் சூழலில் புலியைக் கண்டு சொல்லியிருப்பதைக்
காணலாம் . வேங்கைமரம் என்ற பெயரே வேங்கை மரத்தின் இத்தோற்றத்தால் தோன்றிற்று என்பதையும் உணரவேண்டும் . பாயா வேங்கை வேங்கை மரத்தைக் கூறுவர் . வேங்கையின் பூவைப் பறிக்கும்போது குறமகளிர் புலி , புலி எனக் கூறுவர் .
அதுகேட்டு உண்மையாகவே புலி கருதி அதைக் கொல்ல ஆடவர் வருவர் என்ற செய்திகளையும் சங்க நூல்கள் கூறுகின்றன .பிற்கால இலக்கியத்தில் வேங்கை மரம் மகளிர் புலி , புலி என்று பறித்தால் பூக்கும் என்று கதை கட்டி விட்டனர் . வேங்கை மரப்பூ உதிர்ந்த தோற்றம் புலி போலத் தோன்றும் என்பது வெறும் கற்பனையன்று . உண்மைச் செய்தியே என்பதை அறிய ஒரு வேட்டையாளரின் அனுபவம் உறுதுணை புரிவது சங்கப் புலவர்கள் எந்த அளவு நுணுக்கமாக இயற்கையின் நிலையையும் நிகழ்ச்சிகளையும் ஆராய்ந்து கூறினர் என்பதைக் காட்டுகின்றது.
தென்னாட்டில் ஏறக்குறைய 70 ஆண்டுகட்கு முன் பல விலங்குகளை வேட்டையாடிய போலக் ( Leiut Colonel
Pollock ) தாம் எழுதிய நூலில் கீழ்வருமாறு ஓர் அனுபவச் செய்தியைக் கூறுகிறார் .

I saw something white more under a tree close to me . It was the panther s belly and I immediately fired . We waited for sometime before approaching the body and I pointed out the wound to the chief who declared that he thought it was flower which had dropped from an overhanging Kino tree . It turned out to be Leopard and we were surprised how so small an animal can kill a full grown buffalo .

புலியின் வயிற்றைப் பார்த்துச் சுட்டதைக் கண்ட நண்பர் அது புலியில்லை என்று கூறி, அது மேலே கவிழ்ந்திருந்த வேங்கையின் (Kino tree) பூக்கள் எனக் கூறினாராம் . ஆனால் கூர்ந்து பார்க்கையில் வேங்கை யின் பூக்கள் எனக் கருதிய வொன்று கொல்லப்பட்ட சிறுத்தைப் புலியாகக் கிடந்ததாம் . இச் செய்தியி லிருந்து வேங்கைப் பூவைப் புலி யெனக் கருதி ஏமாந்த வேட்டையாளரின் அதே அனுபவத்தையே சங்க காலப் புலவரும் அடைந்தே வேங்கைப் பூவிற்குப் புலி யின் உடலை உவமையாகக் கூறினரென்று தெரிகின்றது . அதன் காரணமாக வேங்கை மரத்திற்குப் புலியின் மறுபெயரான வேங்கை என்ற சொல் வழங்கிற்று என்பதுவும் தெளிவாகின்றது . வேங்கை மரத்திற்குக் காரணப் பெயர் ஏற்படப் பிறிதொரு சான்றும் கூறலாம் . வேங்கை மரம் நம் நாட்டுக்கு மலேயா நாட்டிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன் பரவி , காடுகளில் இந்தியாவின் சொந்த மரம்போல் வளர் கின்றது எனச் செடி நூலார் கூறுவர். வெளிநாட்டிலிருந்து வந்த வேங்கை மரத்திற்கு அதன் சூழ்நிலையில் அதைப்போன்றே காணப்பட்ட ஒரு விலங்கின் நிற, உருவ அடிப்படையில் காரணத்தோடு பெயரிட்டது
இயல்பே .சங்க இலக்கியத்தில் சிறுத்தைப் புலியின் புள்ளிகள் நிறைந்த உடலை நன்கு உணர்ந்தே ” புலிப்பொறி அன்ன புள்ளியம் பொதும்பில் ” ( நற்றிணை , 391 ) என்று பாடியுள்ளனர் .

புள்ளிப்புலி
புள்ளிப்புலி

புள்ளியம் பொதும்பு புலிப் பொறி போல இருப்பதால் சிறுத்தைப் புலியைப் புள்ளியம் பொதும்பெனக் கருதுவது இயற்கையே .இது போன்றே புள்ளிமான் மரங்களின் புள்ளி நிழல் போலத் தோன்றி மறைந்து கொள்கின்றதென விலங்கு நூலார் கூறுவர் . இச் செய்தியும் சங்க நூற் புலவருக்குப் புதிய செய்தியன்று . உழைப் புறத்தன்ன புள்ளி நீழல் என்று அகநானூறு (379) கூறுவதைக் கவனிக்கலாம் . இயற்கைச் சூழ்நிலையில் விலங்குகளைச் சங்கப் புலவர்கள் நுனித்துக் கண்டுணர்ந்ததையே வேங்கைப்பூ பற்றிய உவமையும் புள்ளி நிழலைப் பற்றிய உவமையும் நன்கு எடுத்துக் காட்டுகின்றன . இயற்கையின்
( Natural environment ) இந்த அளவு நுனித்து அறிந்து எழுதின புலமையை அந்தக் காலத்தில் வேறே எந்த நாட்டு இலக்கியத்திலும் காணமுடியாது . புலியின் கண் சிவந்து காணப்படும் என்று சங்க நூல்களில் கூறப்பட்டுள்ளது . செங்கணிரும்புலி ( நற்றிணை 148 ; அகம் 92 ) என்று பிற பாடல்களும் கூறும். இரவில் சிறிது வெளிச்சத்திலும் புலியின் கண் தீப்போல ஒளிவிடுமெனக் கூறுவர் .

புலியின் கண் கொடுமை வாய்ந்ததாகக் காணப்படுவதால் கொடுங்கண் கடுங்கண் ( கலி . 43 , 65 ) என்று கூறுவர் . புலி கொடிய விலங்காயினும் அழகிய தோற்றமுடையது . ஆதலின் ‘ அருங்கேழ் வயப் புலி ( அகம் . 251 ) என்றும் கொடுங் கேழ் இரும்புலி” ( கலி . 65 ; நற்றிணை . 36 ) ( fierce beauty ) என்றும் ஒண் கேழ்வயப்புலி நற்றிணை . 65 ; அகம் . 347 ; ஐங்குறுநூறு , 274) என்றும் புலியின் கொடிய அழகைக் குறிப்பிட்டனர் . புலியைப் பற்றி ஓர் அரிய செய்தி சங்க நூல்களில்
காணப்படுகின்றது . வரிப்புலியும் சிறுத்தைப் புலியும் குரலிடும் ஒலியைப் பற்றியும் சங்க நூல்களில் கூறப்பட்
டுள்ளது . சங்க நூல்களில் புலியின் குரல் குழுமும் , உரறும் என்று கூறப்பட்டுள்ளது . தழங்கு குரல் ( மலைபடுகடாம் , 311 ) என்றும் புலியின் குரல் கூறப்பட்டுள்ளது . புலியின் குரலாக இன்னோர் ஓசையையும் சங்கநூற் புலவர்கள் கூறியுள்ளது ஆராயத்தக்கது. அகநானூறு 272 ஆம் பாடலில் கடையலங் குரல் வால்வரி உழுவை என்று கூறப்பட்டுள்ளது .

அகநானூற்றில் புலியின் குரல் கடைவதுபோல என்று கூறப்பட்டிருப்பதையே தயிரைக் கடையும்போது மத்து ஒலிப்பதுபோன்று இருப்பதாகப் பிற்கால நூல் கள் கூறின . ஆனால் வேட்டையாளர் ஆராய்ச்சிப்படி இத்தகைய ஒலியை எழுப்பும் புலி வரிப்புலியன்று . பெருஞ் சிறுத்தைப் புலியும் சிறிய சிறுத்தைப் புலியுமே இத்தகைய குரலெழுப்புமெனக் கூறுவர் . (The guttural sawing of the panther echoes along gamepaths, Ah — hah ! Ah – hah ! ah – hah ! — This is the jungle by Kenneth Aaderson ) கடையுங் குரல் என்று மிக நுட்பமாகக் கேட்டறிந்து கூறியிருப்பது வியப்புக்குரியது .
காட்டு விலங்குகளின் குரலைக் கூர்ந்து கேட்டுக்குறிப்பிட்டிருப்பதைச் சங்க நூல்களில் காணலாம் . புலியின் பழகிய குரலாக உறுமும் குரலே குறிக்கப்பட்டுள்ளது. இடியுறுமுவது போன்று புலி உறுமுவதாகக் கூறப் பட்டிருக்கின்றது .

வரிப்புலி
வரிப்புலி

புலியைப் பற்றிச் சங்க இலக்கியத்தில் இரு செய்திகள் நாட்டு மக்களிடையே வழங்கிய கற்பனைச் செய்திகளாகத் தெரிகின்றன . சங்க இலக்கியத்தில் இத்தகைய கற்பனைச் செய்திகள் , செவிவழிச் செய்திகள் அருகிக் காணப்படுகின்றன . பெரும்பாலும் உண்மைச் செய்திகளே காணப்படும் சங்க இலக்கியத் தில் இத்தகைய கற்பனைச் செய்திகளும் அருகிக் காணப்படுகின் றன. புலி ஒரு விலங்கை உணவுக்காகக் கொல்லும்போது கொன்ற விலங்கு இடது பக்கத்தில் விழுந்தால் அதை உண்ணாது என்பது ஒரு செய்தியாகும் . இது புலவர்கள் கற்பனையில் எழுந்த செய்தியேயாகும் , உண்மைச் செய்தி யன்று . புலிக்கோ அல்லது பொதுவாக விலங்குகளுக்கோ இத்தகைய உணர்ச்சி கிடையாது . மனிதருக்கு மான உணர்ச்சி ,
பெருமித உணர்ச்சி ஊட்டுவதற்காகச் சங்கப் புலவர்கள் இந்தக் கற்பனையைப் புலியின்மேல் ஏற்றினர் எனத் தெரிகின்றது .

புவி வேட்டையாடும்போது இடப்புறமாக வீழ்ந்ததை உண்ணாது என்பது இயற்கையில் காணப்படும் நிகழ்ச்சியன்று . புலிக்கு இடமோ , வலமோ என்பது தெரியாது . புலி வலது கையால் ( காலால் ) இரையாகும் விலங்கை அடிக்கும்போது இடது பக்கம் அவ் விலங்கு வீழ்ந்தால் அஃது இயற்கையான நிகழ்ச்சியாகும் . அது மற்றக் கொடிய விலங்குகளுக்கும் ஒக்கும் . ஆனால் புலி தன் இரையான விலங்கை அடிக்குங்கால் வலது கையால் அடித்து வலது பக்கமே வீழ்ந்தால் சிறந்த செய்தியாகும் என்பது கருதியே புலிக்கு உயர்வு , பெருமிதம் , மானம் ஆகிய மனிதரின் குணங்களை ஏற்றிச் சங்கப் புலவர்கள் கற்பித்துக் கூறினர் என்பதை இக்காலத்துப் புலவர்கள் இதை உண்மைச் செய்தியைப் போல மாணவர்க்குப் பாடங் கற்பிப்பது வருந்தத்தக்கது . அடர்ந்த காட்டில் புலியைப் போன்று எதையும் மதிக்காது தான் தான் அரசன்
என்று கருதும் விலங்கு எதுவுமில்லை என்பதை விலங்கு நூலார் கண்டுள்ளனர் . விலங்குகளுக்கு அரசு என்று கருதப்படும் சிங்கம் கூடப் புலியைப்போன்று பெருமிதமும் துணிவும் உடையதன்று என்பதை விலங்கியலார் கண்டுள்ளனர் . புலியின் இத்தகைய சிறப்பைக் கண்டே சங்கநூற் புலவர்கள் இந்தக் கற்பனையைப் புலிக்குக் கூறினர் எனத் தெரிகின்றது . இதன் காரண மாகவே பிற்காலப் புலவர்கள் “ புலி பசித்தாற் புல்லைத் தின்னாது ” எனக் கூறினர் . புறநானூற்றிலும் புலி யானையைக் குறிவைத்துக் கொல்லாது

தப்பின் எலியைக் குறிவைக்காது என்று கூறினர் . ஓங்குவரைப் புலிபார்த் தொற்றிய களிற்றிரை பிழைப்பின் எலிபார்த் தொற்றா தாகு மலிதிரைக் -புறம் , 287 . ஆனால் இச்செய்தி இயற்கையில் கண்ட உண்மை ஏனெனில் புலி பசித்தால் தவளையைக் கூடப் பிடித்துத் தின்னு மென்பதை விலங்கு நூலார் கண்டுள்ளனர் . பசித்த புலிக்கு யாதோர் இரையும் சில நாட்களுக்குக் கிடைக்காவிட்டால் ஆடு மாடுகள் போடும் சாணத்தில் வெளிப்படும் வண்டுகளைக்கூடத் தின்னுமென்பர் .

வரிப்புலி
வரிப்புலி

கென்னத் ஆண்டர்சன் ( Kenneth Anderson ) என்ற பெயர்பெற்ற வேட்டையாளர் ஒரு புலியின் வாழ்க்கை
யை வர்ணிக்கும்போது முள்ளம்பன்றியால் புண்ணுற்ற புலி வேட்டையாட முடியாமல் வற்றிய குளத்தில் இருந்த தவளைகளையும் நண்டுகளையும் பிடித்து உண்பதைக் கூறியிருக்கிறார் . நத்தையையும் வெட்டுக் கிளிகளையுங்கூட , கடும்பசியைத் தணிக்க உண்ணுமாம் . ஆதலின் புலிக்கு எந்த உணவும் விலக்கல்ல என்பதை உணரவேண்டும் . நாலடியாரில் இந்த உண்மைச் செய் தியை உணர்ந்து ஒரு புலவர் பாடியிருப்பது வியப்பைத் தருகின்றது .

” உறுபுலி ஊனிரை இன்றி ஒருநாட் சிறுதேரை பற்றியுந் தின்னும் -நாலடியார் . 193 . நாலடியாரில் கூறிய செய்தி அரிய உண்மையான செய்தியாகும் . ஆளி யென்ற ஒரு விலங்கைப் பற்றிய செய்திகள் மேற்காட்டிய பாடல்களில் கூறப்பட்டுள்ளன . ஆளி என்ற விலங்கு யானையின் தந்தத்தைப் பிய்த்து அதன் குருத்தை உண்ணும் கொடுமை வாய்ந்ததென்று கூறப்பட்டுள்ளது . மற்றும் இந்த ஆளியைக் கண்டு புலி அஞ்சி நடுங்குவதாகவும் , புலி இரைக்காக அடித்துக் கொன்ற களிற்று யானையை ஆளி பறித்துச் செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது . யானைகள் மிகவும் அஞ்சும் விலங்காக ஆளி கூறப்பட்டுள்ளது . இயற்கையில் காடுகளில் ஆளியென்ற விலங்கோ ஆளி போன்ற விலங்கோ உண்டா என்பது ஆராயத்தக்கது . அத்தகைய விலங்கு இயற்கையில் கிடையாது . இதைச் சிலர் சிங்கமெனக் கொண்டனர் . சிங்கம் அடர்ந்த காடுகளில் காணப்படும் விலங்கு அன்று . புலி வாழும் சூழ்நிலையில் சிங்கம் வாழாது . மற்றும் சிங்கம் தமிழ்நாட்டில் என்றும் இயற்கையில் வாழ்ந்த விலங்கு அன்று . அதனால் தான் சங்கப்புலவர்கள் சிங்கத்தைப் பற்றி யாதொரு செய்தியும் கூறவில்லை. பிற்காலப் புலவர்கள் உண்மைச் செய்திகளை அறியாது , சிங்கம் தமிழ் நாட்டில் வாழும் விலங்காகக் கருதி எழுதிச் சென்றனர் . சங்க இலக்கியத்தில் சிலபாடல்களில் வயமான் என்பதற்குச் சிங்கம் என்று சிலர் உரை கூறினர் . இது
தவறு . புலியெனப் பொருள் கொள்ள வேண்டிய இடத்தில் சிங்கமெனப் பொருள் கொண்டமை பொருந்தாது .

” மனையுறை குரீஇக் கறையணற் சேவல்
பாணர் நரம்பின் சுகிரொடு வயமான்
குரற்செய் பீலியி னிழைத்த குடம்பைப் -புறம், 318 .

இதில் வயமான் என்பதற்குச் சிங்கம் என்று பொருள் கொண்டுள்ளது பொருந்தாது . வயமான் வரும் பலபாடல்களிலும் புலி யென்றே பொருள் கொண்டுள்ளனர் . சிங்கத்தின் பிடரி மயிர் என்று கொண்டு பொருள் கூறினர். தினைக்கதிர் போன்று
வாலின் நுனியில் மயிர்க்கற்றையை யுடைய புலி என் பதே நேரிய , பொருத்தமான , உண்மையான பொருள் . வாலின் நுனியிலிருந்து வீழ்ந்த மயிரை வைத்து ஊர்க் குருவி கூடுகட்டுவதையே கூறியுள்ளார் . விலங்கின் வாலின் பெயர் பீலி என்றும் வழங்கும். சிங்கம் தமிழ்நாட்டில் என்றும் இயற்கையில் வாழவில்லையாதலால் தமிழில் சிங்கத்திற்கு உரிய பெயர் கூடக் கிடையாது . ஆளியென்பது சிங்கமன்று . பதிற்றுப்பத்தில் இரும்புலி கொன்று பெருங்களிறு அடூஉம் அடும் பொறி வயமா னனையை ” என்ற வரி ( 75 : 2 ) வருகின்றது . இங்கு வயமான் என்பது சிங்கத்தைக் குறித்தேயெனத் தோன்றுகிறது . இச் செய்தி செவிவழிச் செய்தியே யெனத் தோன்றுகின்றது . ஆனால் இயற்கையில் உண்மையற்றது . அரசனின் பெருமையை தெந்து கூறவே கற்பனையாகக் கூறப்பட்டது . சிங்கமும் புலியும் இயற்கையில் ஒரே சூழ்நிலையில் இந்தியாவில் எங்கும் காணப்படவில்லை . ஆதலின் சிங்கமும் புலியும் போரிடுவது காணக்கூடாத செய்தியாகும் .ஆளி நன்மானைப் பற்றிச் சங்கப்பாடற் செய்தி வட நூலில் இருந்து வந்த செய்தியாகவே தெரிகின்றது . வட நூலில் இத்தகைய கற்பனையான புராணச் செய்திகள் மிகுந்து காணப்படுகின்றன . ஆளியை அத்தியாளி என்று பிற்கால நூல்கள் கூறும் . நிகண்டுகளில் யானை யாளி யென்றும் இதையே அறுகு , பூட்கை யென்றும் கூறப்பட்டுள்ளது . யானையினுடைய கையும் புலியினுடைய உடலும் அல்லது சிங்கத்தினுடைய உருவும் கலந்த விலங்காகக் கூறுவர் . இத்தகைய விலங்கு இயற்
கையில் கிடையாது .

வரிப்புலி
வரிப்புலி

தற்காலத்தில் சில அறிஞர்கள் இந்த விலங்கைக் காண்டாமிருகத்தைக் கண்டு கற்பனையாகக் கூறப்பட்ட விலங்காகக் கருதுகின்றனர் . ஏனென்றால் இந்தியாவில் சில பகுதிகளில் முற்காலத்தில் காண்டாமிருகமும் புலியும் ஒரே சூழலில் காணப்
பட்டன . ஆளிபற்றிய சங்கச் செய்திகள் வடமொழியிலிருந்து வந்தனவாகத் தெரிகின்றது. நிகண்டுகளில் சிங்கத்தின் பெயர்களாகத் தூய தமிழ்ப் பெயர் , தனிப்பெயர் எதுவுமில்லை . புலியின் பெயரையே சிங்கத்திற்குச் சேர்த்துக் கூறுவதையும் காண்கிறோம் . சிலப்பதிகாரத்தில் காட்சிக் காதையில் ஆளியும் சிங்கமும் புலியும் தனித்தனியேகூறப்படுவதும் கவனிக்கத் தக்கது . புலிகள் வாழுமிடங்களை நன்குதெரிந்தே சங்கப் புலவர்கள் பாடியுள்ளனரென்பது விளக்கப் பட்டுள்ளது . அகநானூற்றில் 37 ஆம் பாடலில் புலிகள் வாழும் ஒரு காட்டின் பெயரையே குறிப்பிட்டிருப்பதைக் காணலாம் . உம்பற்பெருங் காட்டில் வாழ்ந்த புலிகளுக்கு அஞ்சி யானைக்கூட்டம் அந்தக் காட்டை விட்டு விலகிச் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது .

சிறுத்தைப் புலி
சிறுத்தைப் புலி

வேட்டையாளர் பலர் வயநாட்டுக் காடுகளில் பெரியபுலிகள் மிகுத்துக் காணப்பட்டதைப் பற்றி எழுதியுள்ளனர் . இன்றும் வயநாட்டுக் காடுகளில் புலிகள் உள்ளன . புலி காட்டில் எதற்கும் பயப்படாத விலங்காயினும் நெருப்பைக் கண்டால் மிகவும் அஞ்சும் . இதையே ஞெலிகழை முயங்கழல் வயமா வெரூஉம் என்று ஐங்குறு நூறு ( 307 ) கூறுகிறது . சங்க இலக்கியத்
தில் புலியைப் பல பாடல்களில் இரும்புலி என்றே கூறியுள்ளனர். இரும்புலி என்பதற்குச் சிலவிடங்களில் கரிய புலி என்று பொருள் கொண்டனர் . தவறு . பெரிய புலி என்ற பொருளிலே சிறுத்தைப் புலியினின்றும் பிரித்துணர்த்தவே இரும்புலி என்று வரிப்புலியைக் குறித்துக் கூறினர் . சிறுத்தைப் புலியில் கரும்புலி தமிழ்நாட்டில் மிக அரிதாகக் காணப் படுவதுண்டு . அதுபோலச் செம்புலி என்றோர் இனமும் மிகமிக அரிதாகத் தென்படுவதுண்டு . கரும்புலி மிகவும் வலிமை வாய்ந்த தென்பர் . மறவர் குலத்தில் சில பிரிவுகள் கரும்புலி செம்புலி என்று பெயர் கொடுத்து அழைக்கப்படுகின்றன .

புலியைப்போல வலிய விலங்கு , கொடிய விலங்கு தமிழ் நாட்டில் இல்லை . இந்த விலங்கைப் பற்றிச் சங்கநூல்களில் பல பாடல்களில் செய்திகள் காணப்படுவதிலிருந்து புலியைக் காட்டு விலங்குகளில் மிக முக்கிய விலங்காகச் சங்கப் புலவர்கள் கருதினரெனத் தெளிவா இன்று வேட்டையாளர் புலி வேட்டையையே பெரிய வேட்டையாகக் கருதுவர் . அந்த வேட்டையாளர் கண்ட செய்திகளில் பல அரிய செய்திகளைச் சங்க நூல்கள் கூறுவது மிக மிக வியப்புக்குரியதாகும் . சிறுத்தைப் புலியையும் , காட்டில் வாழும் புள்ளிப்புலியையும் Panthera pardus என்றும் வரிப் புலியை Panthera Tigris என்றும் விலங்கு நூலார் அழைப்பர்.

சிறுத்தைப் புலி
சிறுத்தைப் புலி

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

காட்டில் வாழும் புள்ளிப்புலி Panthera pardus, வரிப் புலி Panthera Tigris

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

உறு புலி துப்பின் ஓவியர் பெருமகன் – சிறு 122

புலி போத்து அன்ன புல் அணல் காளை – பெரும் 138

புலி குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி – பெரும் 156

ஏறு அடு வய புலி பூசலொடு அனைத்தும் – மது 298

வய களிறு பார்க்கும் வய புலி போல – மது 643

புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து – நெடு 126

புலி அஞ்சு இதணம் ஏறி அவண – குறி 41

புலி பொறி போர் கதவின் – பட் 40

புலி பொறித்து புறம் போக்கி – பட் 135

ஒண் கேழ் வய புலி பாய்ந்து என கிளையொடு – மலை 309

புலி உற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி – மலை 404

குரூஉ புலி பொருத புண் கூர் யானை – மலை 517

புலி பார்த்து உறையும் புல் அதர் சிறு நெறி – நற் 29/5

குறும் கை இரும் புலி கோள் வல் ஏற்றை – நற் 36/1

புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் – நற் 39/5

குறு வரி இரும் புலி அஞ்சி குறு நடை – நற் 85/4

புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம் – நற் 107/6

ஒண் கேழ் வய புலி படூஉம் நாடன் – நற் 119/3

பிணவு புலி வழங்கும் அணங்கு அரும் கவலை – நற் 144/6

செம் கண் இரும் புலி கோள் வல் ஏற்றை – நற் 148/9

கொல் முரண் இரும் புலி அரும் புழை தாக்கி – நற் 151/2

விடர் முகை செறிந்த வெம் சின இரும் புலி/புகர் முக வேழம் புலம்ப தாக்கி – நற் 158/5,6

புலி எதிர் முழங்கும் வளி வழங்கு ஆரிடை – நற் 174/4

புலி பொர சிவந்த புலால் அம் செம் கோட்டு – நற் 202/1

இரும் கேழ் வய புலி வெரீஇ அயலது – நற் 217/3

புலி பொறி கொண்ட பூ நாறு குரூஉ சுவல் – நற் 249/5

வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇ – நற் 249/6

இரும் புலி வழங்கும் சோலை – நற் 274/8

கடுங்கண் வய புலி ஒடுங்கும் நாடன் – நற் 322/7

புலி வரிபு எக்கர் புன்னை உதிர்த்த – நற் 323/7

ஈன் பிணவு ஒடுக்கிய இரும் கேழ் வய புலி/இரை நசைஇ பரிக்கும் மலை முதல் சிறு நெறி – நற் 332/6,7

பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும் – நற் 333/4

உரவு சின வேழம் உறு புலி பார்க்கும் – நற் 336/7

பெரும் கல் விடர்அகம் சிலம்ப இரும் புலி/களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து – நற் 344/9,10

களிற்று துப்பு அஞ்சா புலி அதள் இதணத்து – நற் 351/7

இரும் புலி தொலைத்த பெரும் கை யானை – நற் 353/9

வய புனிற்று இரும் பிண பசித்து என வய புலி/புகர் முகம் சிதைய தாக்கி களிறு அட்டு – நற் 383/3,4

வேங்கையும் புலி ஈன்றன அருவியும் – நற் 389/1 புலி பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின் – நற் 391/2

இரும் புலி குருளையின் தோன்றும் காட்டு இடை – குறு 47/2

சிறு கண் பெரும் களிறு வய புலி தாக்கி – குறு 88/2

குறும் கை இரும் புலி கொலை வல் ஏற்றை – குறு 141/5

புலி பல் தாலி புதல்வன் புல்லி – குறு 161/3

மற புலி குருளை கோள் இடம் கரக்கும் – குறு 209/2

கொடு வரி இரும் புலி காக்கும் – குறு 215/6

கோள் புலி வழங்கும் சோலை – குறு 237/6

புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை – குறு 253/6

செம் கண் இரும் புலி குழுமும் அதனால் – குறு 321/6

புலி நோக்கு உறழ் நிலை கண்ட – குறு 328/7

மிகு வலி இரும் புலி பகு வாய் ஏற்றை – குறு 343/3

குறும் கை இரும் புலி கோள் வல் ஏற்றை – ஐங் 216/1

களிறு கோள் பிழைத்த கதம் சிறந்து எழு புலி/எழுதரு மழையின் குழுமும் – ஐங் 218/3,4

கல் முகை வய புலி கழங்கு மெய்ப்படூஉ – ஐங் 246/2

புலி கொல் பெண்பால் பூ வரி குருளை – ஐங் 265/1

குறு கை இரும் புலி பொரூஉம் நாட – ஐங் 266/2

ஒண் கேழ் வய புலி குழுமலின் விரைந்து உடன் – ஐங் 274/2

புலி வழங்கு அதர கானத்தானே – ஐங் 316/5

புலி கோள் பிழைத்த கவை கோட்டு முது கலை – ஐங் 373/2

புன்கண் யானையொடு புலி வழங்கு அத்தம் – ஐங் 386/1

புலி பொறி வேங்கை பொன் இணர் கொய்து நின் – ஐங் 396/1

புலிஉறை கழித்த புலவு வாய் எஃகம் – பதி 24/2

மற புலி குழூஉ குரல் செத்து வய களிறு – பதி 41/7

இரும் புலி கொன்று பெரும் களிறு அடூஉம் – பதி 75/1

பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானை – பரி 20/4

வலி முன்பின் வல்லென்ற யாக்கை புலி நோக்கின் – கலி 4/1

உறு புலி உரு ஏய்ப்ப பூத்த வேங்கையை – கலி 38/6

மறம் கொள் இரும் புலி தொன் முரண் தொலைத்த – கலி 42/1

புகர் முக களிறொடு புலி பொருது உழக்கும் நின் – கலி 45/12

வேங்கை அம் சினை என விறல் புலி முற்றியும் – கலி 46/5

இரும் புலி மயக்கு-உற்ற இகல் மலை நன் நாட – கலி 48/7

முறம் செவி மறை பாய்பு முரண் செய்த புலி செற்று – கலி 52/1

புலி என்று ஓர்க்கும் இ கலி கேழ் ஊரே – கலி 52/18

இரும் புலி கொள்-மார் நிறுத்த வலையுள் ஓர் – கலி 65/24

ஆங்கு இரும் புலி தொழுதியும் பெரும் களிற்று இனமும் – கலி 103/56

புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை – அகம் 3/9

புலி பல் கோத்த புலம்பு மணி தாலி – அகம் 7/18

புலி செத்து வெரீஇய புகர் முக வேழம் – அகம் 12/11

ஒளித்து இயங்கும் மரபின் வய புலி போல – அகம் 22/15

கொடு வரி இரும் புலி தயங்க நெடு வரை – அகம் 27/1

மதர் புலி வெரீஇய மையல் வேழத்து – அகம் 39/11

புலி புலி என்னும் பூசல் தோன்ற – அகம் 48/7

புலி புலி என்னும் பூசல் தோன்ற – அகம் 48/7

ஆ கொள் வய புலி ஆகும் அஃது என தம் – அகம் 52/6

அடு புலி முன்பின் தொடு கழல் மறவர் – அகம் 75/6

இரும் புலி தொலைத்த பெரும் கை யானை – அகம் 88/9

செம் கண் இரும் புலி குழுமும் சாரல் – அகம் 92/4

புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை – அகம் 97/3

இரும் புலி துறந்த ஏற்று மான் உணங்கல் – அகம் 107/5

ஈன்று அணி வயவு பிண பசித்து என மற புலி/ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டு குழுமும் – அகம் 112/5,6

அடு புலி வழங்கும் ஆர் இருள் நடுநாள் – அகம் 118/9

மற புலி உழந்த வசி படு சென்னி – அகம் 119/16

புலி கேழ் உற்ற பூ இடை பெரும் சினை – அகம் 141/25

உறு புலி உரற குத்தி விறல் கடிந்து – அகம் 148/5

பெரும் களிறு மிதித்த அடிஅகத்து இரும் புலி/ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி – அகம் 155/11,12

புலி கணத்து அன்ன நாய் தொடர் விட்டு – அகம் 158/15

வாள் வரி வய புலி கல் முழை உரற – அகம் 168/12

புலி தொலைத்து உண்ட பெரும் களிற்று ஒழி ஊன் – அகம் 169/3

புலி பகை வென்ற புண் கூர் யானை – அகம் 202/3

புலி உரி வரி அதள் கடுப்ப கலி சிறந்து – அகம் 205/19

வரி வயங்கு இரும் புலி வழங்குநர் பார்க்கும் – அகம் 218/11

புலி கேழ் வேங்கை பூ சினை புலம்ப – அகம் 227/8

புலி பொறி கடுப்ப தோன்றலின் கய வாய் – அகம் 228/11

மாஅல் யானை புலி செத்து வெரீஇ – அகம் 232/3

புலி என உலம்பும் செம் கண் ஆடவர் – அகம் 239/3

வாள் வரி வய புலி தீண்டிய விளி செத்து – அகம் 249/16

வாயுள் தப்பிய அரும் கேழ் வய புலி/மா நிலம் நெளிய குத்தி புகலொடு – அகம் 251/16,17

புலி மருள் செம்மல் நோக்கி – அகம் 259/17

அரும் சுரத்து அல்கியேமே இரும் புலி/களிறு அட்டு குழுமும் ஓசையும் களி பட்டு – அகம் 261/12,13

பூ நுதல் யானையொடு புலி பொர குழைந்த – அகம் 268/2

இரும் புலி தொலைத்த பெரும் கை வேழத்து – அகம் 272/1

இரும் புலி வேங்கை கரும் தோல் அன்ன – அகம் 285/8

புலி புக்கு ஈனும் வறும் சுனை – அகம் 329/13

ஒண் கேழ் வய புலி பாய்ந்து என குவவு அடி – அகம் 347/11

புலவு புலி புரண்ட புல் சாய் சிறு நெறி – அகம் 357/6

உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்கு – அகம் 379/24

மற புலி உரற வாரணம் கதற – அகம் 392/16

எருத்து வவ்விய புலி போன்றன – புறம் 4/9

புலி நிற கவசம் பூ பொறி சிதைய – புறம் 13/2

இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய – புறம் 19/5

புலி புறங்காக்கும் குருளை போல – புறம் 42/10

புலி துஞ்சு வியன் புலத்து அற்றே – புறம் 54/13

துஞ்சு புலி இடறிய சிதடன் போல – புறம் 73/7

புலி சேர்ந்து போகிய கல் அளை போல – புறம் 86/4

மற புலி உடலின் மான் கணம் உளவோ – புறம் 90/3

இரும் புலி புகர் போத்து ஓர்க்கும் – புறம் 157/12

மற புலி உரைத்தும் மதியம் காட்டியும் – புறம் 160/22

புலி துஞ்சு நெடு வரை குடிஞையோடு இரட்டும் – புறம் 170/7

விடர் புலி பொறித்த கோட்டை சுடர் பூண் – புறம் 174/17

புலி பசித்து அன்ன மெலிவு இல் உள்ளத்து – புறம் 190/10

இரும் புலி வரி புறம் கடுக்கும் – புறம் 202/20

புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின் – புறம் 237/16

ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே – புறம் 255/1

புத்து அகல் கொண்ட புலி கண் வெப்பர் – புறம் 269/4

புலி கணத்து அன்ன கடுங்கண் சுற்றமொடு – புறம் 341/6

இரும் கேழ் வய புலி வரி அதள் குவைஇ – புறம் 374/14

புலிஇனம் மடிந்த கல் அளை போல – புறம் 398/10

அறு மருப்பு எழில் கலை புலி-பால் பட்டு என – புறம் 23/18

புலி-பால் பட்ட ஆமான் குழவிக்கு – புறம் 323/1

புலிஇனம் மடிந்த கல் அளை போல – புறம் 398/10

புலிஉறை கழித்த புலவு வாய் எஃகம் – பதி 24/2

ஒலியல் கண்ணி புலிகடிமாஅல்/யான் தர இவரை கொண்-மதி வான் கவித்து – புறம் 201/15,16

ஒலியல் கண்ணி புலிகடிமாஅல்/நும் போல் அறிவின் நுமருள் ஒருவன் – புறம் 202/10,11

புலித்தொடர் விட்ட புனை மாண் நல் இல் – முல் 62

புலிப்பல்தாலி புன் தலை சிறாஅர் – புறம் 374/9

வீழ் களிறு மிசையா புலியினும் சிறந்த – அகம் 29/3

அரவும் புலியும் அஞ்சு_தகவு உடைய – அகம் 318/3

திண் பிணி எஃகம் புலியுறை கழிப்ப – பதி 19/4

கூட்டு உறை வய_மா புலியொடு குழும – மது 677

புலியொடு பொருத புண் கூர் யானை – நற் 65/5

புலியொடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர் கெண்டை – கலி 104/3

புலியொடு பொருது சினம் சிறந்து வலியோடு – அகம் 291/6

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *