Skip to content

சொல் பொருள்

(வி) 1. தனித்திரு, 2. தனித்திருந்து வருந்து, 3. தனிமைத்துயரில் வாடு, 4. வருத்தம்கொள், 5. எதிரொலி, 6. ஒலியெழுப்பு, , 7. அரற்று

2. (பெ) 1. தனிமை, 2. தனிமைத்துயர், 3. ஒற்றை, 4. வருத்தம், 

சொல் பொருள் விளக்கம்

1. தனித்திரு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be solitary, be only one, be lonely and despair, fade away due to loneliness, grieve, echo, sound, mourn, wail, cry put, loneliness, grief due to loneliness, single, distress

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை
இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்தென
புள் ஆர் பெண்ணை புலம்பு மடல் செல்லாது – பெரும் 312-314

நீராடுகின்ற மகளிர் (நீரில்)நழுவவிட்டுச்சென்ற பொன்னாற் செய்த மகரக்குழையினை,
இரையைத் தேடுகின்ற (நீல)மணி(போலும்) மீன்கொத்தி (தனக்கு)இரை என எண்ணிப் பாய்ந்தெடுத்து,
பறவைகள் நிறைந்திருக்கின்ற பனைமரத்தின் தனித்த மடலுக்குச் செல்லாமல்,

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும்
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே – குறு 11/1-3

சங்கினை அறுத்துச் செய்யப்பட்ட ஒளிரும் வளை நெகிழ, நாள்தொறும்
தூக்கம் இல்லாமல் கலங்கி அழும் கண்ணோடு தனித்து வருந்தி
இப்படி இங்கே தங்கியிருத்தலிலிருந்து விடுபடுவோம்;

இவள் நலம் புலம்ப பிரிய
அனை நலம் உடையளோ மகிழ்ந நின் பெண்டே- ஐங் 57/3,4

இவளின் பெண்மை நலத்தைத் தனிமையில் வாடவிட்டுப் பிரிந்துசெல்ல
அந்த அளவுக்குப் பெருநலம் உடையவளோ, தலைவனே! உன் பரத்தை?

குறும் கை இரும் புலி கோள் வல் ஏற்றை
பூ நுதல் இரும் பிடி புலம்ப தாக்க – நற் 36/1,2

குட்டையான கைகளையுடைய பெரிய புலியின் கொல்லுதலில் வல்ல ஆண்புலி
அழகிய நெற்றியையுடைய பெரிய பெண்யானை வருந்தும்படி தாக்கி

அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்ப களிறு அட்டு
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும் – நற் 112/2-4

அரும்புகள் முற்றிலும் இல்லாமல் மலர்ந்த கரிய அடிப்பகுதியையுடைய வேங்கை மரத்தில்
வண்டுகள் ஒலியெழுப்பும் அடுக்குமலைகள் எதிரொலி செய்ய, களிற்றினைக் கொன்று
அச்சமற்ற உள்ளத்தையுடைய சிங்கம் நடமாடும்

பொறி படு தட கை சுருக்கி பிறிது ஓர்
ஆறு இடையிட்ட அளவைக்கு வேறு உணர்ந்து
என்றூழ் விடர் அகம் சிலம்ப
புன் தலை மட பிடி புலம்பிய குரலே – நற் 318/6-9

வரிகளையுடைய தன் நீண்ட கையினைச் சுருக்கி, வேறு ஒரு
பாதையில் சென்றுவிட்டதும், அதனை வேறாக உணர்ந்து
வெயில் பரவிய மலைப் பிளப்புகளில் எதிரொலிக்குமாறு
புல்லிய தலையைக்கொண்ட இளம் பெண்யானை பிளிறிக்கொண்டு ஒலித்த குரலை

கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீர
கெடல் அரும் காதலர் துனைதர பிணி நீங்கி – கலி 144/68,69

கடலோடு புலம்பிக்கொண்டிருந்தவளின் கலக்கம் தரும் துன்பம் தீரும்படியாக,
ஒழுக்கம் குன்றாக் காதலர் விரைந்து ஓடிவர, தன் காமநோய் நீங்கி,

பணை நிலை முனைஇய பல் உளை புரவி
புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு – நெடு 93,94

கொட்டிலில் நிற்பதை வெறுத்த நிறைந்த பிடரிமயிரையுடைய குதிரைகள்
புல்லாகிய உணவை வாய் நிறைய மெல்லும்(போது ஏற்படும்) தனிமை (அமைதியைக்)கெடுக்கும் ஓசையோடு

நல் கவின் தொலையவும் நறும் தோள் நெகிழவும்
புள் பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும் – குறி 9,10

(அவளுடைய)நல்ல அழகு கெடவும், நறுமணமிக்க தோள்கள் மெலியவும்,
வளை (கழலுதலைப்)பிறர் அறியவும், தனிமைத் துயர் (அவள் உள்ளத்தில்)தோன்றி வருத்தவும்,

புலி பல் கோத்த புலம்பு மணி தாலி – அகம் 7/18

புலிப்பல்லோடு கோக்கப்பெற்ற ஒற்றை மணித் தாலியினையும்

கயம் புக்கு அன்ன பயம் படு தண் நிழல்
புனல் கால்கழீஇய மணல் வார் புறவில்
புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சி
கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ – மலை 47-50

குளத்தில் மூழ்கியதைப் போன்ற பயனைத் தருகின்ற குளிர்ந்த நிழலில்,
வெள்ள நீர் தூய்மைப்படுத்திய மணல்பரப்பு (ஆங்காங்கே)நீண்டுகிடக்கும் முல்லைநிலத்தின்கண்,
(நடந்துவந்த)வருத்தத்தைக் கைவிட்டு அமர்ந்திருந்த புதுமைப்பொலிவு இல்லாத(தளர்ந்த) தோற்றத்தையுடைய,
அணிகலன்களைப் பெறும் கூத்தர் குடும்பத்திற்குத் தலைவனே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *