Skip to content

பெயர்தரு(தல்)

சொல் பொருள்

(வி) 1. மீண்டும் வரு(தல்), 2. திருப்பிக்கொடு(த்தல்),  3. வெளிப்படு, இடத்தைவிட்டு அகல்,

சொல் பொருள் விளக்கம்

1. மீண்டும் வரு(தல்),

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

come again, give back, come out, leave a place

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

காமம் கடையின் காதலர் படர்ந்து
நாம் அவர் புலம்பின் நம்மோடு ஆகி
ஒரு பால் படுதல் செல்லாது ஆயிடை
அழுவம் நின்ற அலர் வேய் கண்டல்
கழி பெயர் மருங்கின் ஒல்கி ஓதம்
பெயர்தர பெயர்தந்து ஆங்கு
வருந்தும் தோழி அவர் இருந்த என் நெஞ்சே – குறு 340

காதல் மிகும்போது காதலரை நினைத்துச் சென்று,
நாம் அவரிடத்தே வருந்தும்போது நம்மோடு ஆகி,
ஒரு பக்கமாகச் சேர்தல் இல்லாது, இரண்டு பக்கமுமாக,
கடற்கரைப் பரப்பில் நின்ற மலர்கள் நிறைந்த தாழை
கழிநீர் ஓடிய பக்கத்தே வளைந்து, பொங்கும் கடல்நீர்
மீண்டுவரும்போது தானும் மீண்டுநின்றாற்போல
வருந்தும் தோழி! தலைவர் இருந்த என் நெஞ்சம்.

திருந்து இழை அரிவை நின் நலம் உள்ளி
அரும் செயல் பொருள்_பிணி பெரும் திரு உறுக என
சொல்லாது பெயர்தந்தேனே – ஐங் 355/1-3

திருத்தமான அணிகலன்களை உடைய அரிவையே! உனது நலத்தை எண்ணி,
செயற்கரிய செயலாகிய பொருளீட்டலை, “பெரும் நலம் பெறுக” என வாழ்த்திவிட்டு
சொல்லாமற்கொள்ளாமல் திரும்பிவிட்டேன்

அளை மாறி பெயர்தருவாய் அறிதியோ – கலி 108/26

மோரினை விற்றுவிட்டு நீ திரும்பிவருவாய், உனக்குத்தெரியும் இல்லையா

சென்றுபடு விறல் கவின் உள்ளி என்றும்
இரங்குநர் அல்லது பெயர்தந்து யாவரும்
தருநரும் உளரோ இ உலகத்தான் என – அகம் 75/14-16

சென்றொழிந்த மிக்க அழகினை நினைத்து என்றும்
இரங்குவார் ஆவரே அல்லது மீண்டும் எவரேனும்
அவ்வழகினைத் தருவார் உளராவரோ இவ்வுலகத்தே என்று

அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு
ஈர்ம் தண் எருமை சுவல் படு முது போத்து
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி பொழுது பட
பைம் நிண வராஅல் குறைய பெயர்தந்து
குரூஉ கொடி பகன்றை சூடி மூதூர்
போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன் – அகம் 316/2-7

விளங்கும் ஆம்பல் மலரை மேய்ந்த நெறித்த கோட்டினையும்
மிக்க குளிர்ச்சியுற்ற முதுகினையுமுடைய முதிய எருமைக்கடா
மிக்க சேற்றின் குழம்பிலே கிடந்து இரவெல்லாம் துயின்று, ஞாயிறு தோன்றிய காலையில்
பசிய நிணத்தையுடைய வரால் மீன்கள் மிதிபட்டு அழிய வெளிப்பட்டு
வெள்ளிய பூக்களையுடைய பகன்றைக் கொடியினைச் சூடிக்கொண்டு பழமையான ஊரின்கண்
போரில்வென்றி எய்திய வீரர் வருமாறு போல புகும் ஊரினையுடைய நம் தலைவன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *