சொல் பொருள்
(வி) 1. (பனி, மழை போன்றவை) மேலிருந்து விழு, பொழி, கொட்டு, 2. ஊற்று, வார், விடு, 3. (பாத்திரத்தில்)இடு, 4. கட்டு, 5. ஒழுகு, 6. கல, 7. உள் இடு, 8. சூடு, 9. பூசு, 10. செலுத்து, வீசு, எறி, 11. அமை, 12. பரப்பு, 13. அணி,
சொல் பொருள் விளக்கம்
1. (பனி, மழை போன்றவை) மேலிருந்து விழு, பொழி, கொட்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fall as rain drops or dew, pour into, pour down, put, place, lay, put into, serve up, as food in a dish;, tie, fasten leak, ooze, dribble, mix, put inside, wear (as string of flowers), smear, shoot an arrow, institute, spread, wear, put on
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடிப்பு இகு முரசின் முழங்கி இடித்து_இடித்து பெய்க இனி வாழியோ பெரு வான் – குறு 270/3,4 குறுந்தடியால் அடிக்கப்படும் முரசினைப் போல் முழங்கி பலமுறை இடித்து பெய்க இனி வாழ்க! பெரிய மேகமே! பெய் பனி நலிய உய்தல் செல்லாது குருகு_இனம் நரலும் பிரிவு அரும் காலை – ஐங் 457/1,2 பெய்யும் பனியினால் நலிவுற்று, அதினின்றும் உய்யும் வழியினைக் காணாது குருகினங்கள் ஒலியெழுப்பும் பிரிந்திருக்க அரிதான கூதிர்ப் பருவத்தில், நாடன் தீது இல் நெஞ்சத்து கிளவி நம்_வயின் வந்தன்று வாழி தோழி நாமும் நெய் பெய் தீயின் எதிர்கொண்டு தான் மணந்து அனையம் என விடுகம் தூதே – குறு 106/2-6 தலைவனின் தீதில்லாத நெஞ்சத்தின் சொற்கள் நம்மிடம் வந்தது வாழ்க தோழியே! நாமும் நெய் ஊற்றிய தீயைப்போல் அதனை எதிர்கொண்டு அவன் தன்னை மணந்தகாலத்து இருந்த நிலையிலுள்ளோம் என்று தூது விடுவோம். கான் நிலை எருமை கழை பெய் தீம் தயிர் – மலை 523 காட்டில் வசிக்கும் எருமையின், மூங்கில் குழாயினுள் இடப்பட்ட இன்சுவையுள்ள தயிரும் எஃகு போழ்ந்து அறுத்த வாள் நிண கொழும் குறை மை ஊன் பெய்த வெண்ணெல் வெண் சோறு – பதி 12/16,17 அரிவாளால் பிளந்து அறுக்கப்பட்ட வெண்மையான ஊனின் கொழுத்த இறைச்சித்துண்டுகளையும், ஆட்டு இறைச்சி இட்ட வெண்ணெல்லின் வெண்மையான சோற்றினையும், பஞ்சாய் கோரை பல்லின் சவட்டி புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி – பெரும் 217,218 பஞ்சாய்க் கோரையைப் பல்லால் சிதைத்து(க் கிழித்து) முடிந்த நாரால் கட்டிய உருவாக்கம் இனிதான மாலையை வாள் வாய் சுறவொடு வய மீன் கெண்டி நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும் – நற் 111/7,8 வாள் போன்ற வாயையுடைய சுறாமீனொடு வலிய பிற மீன்களையும் வாரிக்கொண்டு நிணம் ஒழுகும் தோணியராய்த் தாழ்ந்துவிழும் மணல்மேட்டினின்றும் இறங்கிவரும் விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி மறந்தனம் துறந்த காழ் முளை அகைய நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப – நற் 172/1-3 விளையாட்டுத் தோழியருடன் வெள்ளையான மணலில் ஊன்றிவைத்துப் பின்னர் மறந்தவராய் விட்டுப்போன விதை முளைத்து, முளை தோன்ற அதற்கு நெய் கலந்த இனிய பாலை ஊற்றி இனிதாக வளர்க்க, அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப தெருவில் – நற் 250/2 உள்ளே பரல்கள் இடப்பெற்ற கிண்கிணி ஒலியெழுப்ப வீ பெய் கூந்தல் வீசு வளி உளர – நற் 264/5 பூச்சூட்டப்பெற்ற கூந்தல் வீசுகின்ற காற்றில் அசைந்தாட, ஆழி தலை வீசிய அயிர் சேற்று அருவி கூழை பெய் எக்கர் குழீஇய பதுக்கை – குறு 372/4,5 கடலானது மேலெடுத்து வீசிய கருமணலான சேறு அருவியாய் இறங்கி கூந்தலில் பூசுகின்ற மண்சேறுபோல் குவியப்பெற்ற குவியல்கள் நெய்தல் நெறிக்கவும் வல்லன் நெடு மென் தோள் பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன் – கலி 143/31,32 நெய்தல் பூவின் புறவிதழை நீக்கி மாலை கட்டுவதில் அவன் வல்லவன், நீண்ட மென்மையான தோள்களின் மேல் எய்யக்கூடிய கரும்புவில்லை எழுதுவதிலும் அவன் வல்லவன் ஐவனம் காவலர் பெய் தீ நந்தின் ஒளி திகழ் திருந்து மணி நளி இருள் அகற்றும் – புறம் 172/6,7 ஐவன நெல்லைக் காப்பார் காவலுக்காக அமைத்த தீ அவ்விடத்துக் கெட்டகாலத்து ஒளி விளங்கும் திருந்தின மாணிக்கம் செறிந்த இருளைத் துரக்கும் பரல் பெய் பள்ளி பாய் இன்று வதியும் – புறம் 246/9 பருக்கைக்கற்கள் பரப்பிய படுக்கையின்கண் பாயும் இன்றிக் கிடக்கும் கொடும் குழை பெய்த செழும் செய் பேதை – நற் 120/3 வளைவான குழைகளை அணிந்த செழுமையாக அமைந்த பேதையானவள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்