Skip to content

சொல் பொருள்

(வி) 1. அன்புடன் கவனி, ஆதரி, பராமரி, கா, 2. வழிபடு,  3. விரும்பி உபசரி, 4. விரும்பு, 5. கருத்தில்கொள், 6. உட்கொள், 7. அணிசெய், 8. பாதுகா, 9. கவனமுடன் கையாள், 10. கனிவுகாட்டு, பரிவுடன் இரு, 11. பொருட்படுத்து, மதி,

சொல் பொருள் விளக்கம்

அன்புடன் கவனி, ஆதரி, பராமரி, கா,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

foster, tend, nurture, care for, worship, treat courteously, desire, wish for, mind, take in, adorn, safeguard, protect, take great care, treat tenderly, be compassionate, regard, value

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வாய் பறை அசாஅம் வலி முந்து கூகை
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்
எலி வான் சூட்டொடு மலிய பேணுதும்
எஞ்சா கொள்கை எம் காதலர் வரல் நசைஇ
துஞ்சாது அலமரு பொழுதின்
அஞ்சு வர கடும் குரல் பயிற்றாதீமே – நற் 83/4-9

ஓயாது ஒலிக்கும் வாயினால் பிறரை வருத்தும், வலிமை மிகுந்த கூகையே!
ஆட்டிறைச்சி கலந்த நெய்யிட்டுச் சமைத்த வெண்சோற்றை,
வெள்ளெலியின் சூட்டு இறைச்சியோடு நிறையத் தந்து உன்னை அன்புடன் கவனித்துக்கொள்வேன்,
அன்பில் குறைவுபடாத கொள்கையுடைய எனது காதலர் வருவதை விரும்பி
நான் தூங்காது வருந்திக்கொண்டிருக்கும்வேளையில்,
அச்சம் தோன்றும் வண்ணம் உன் கடுமையான குரலில் கூவாதிருப்பாயாக!

ஆழி முதல்வ நின் பேணுதும் தொழுது – பரி 2/19

சக்கரப்படையை உடைய முதல்வனே! உன்னை வழிபடுகிறோம் தொழுது.

அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும் – பட் 200

தேவர்களை வழிபட்டும், வேள்வியைச் செய்வித்தும்

பெரிதே உலகம் பேணுநர் பலரே – புறம் 207/7

உலகம் பெரியது, விரும்பி உபசரிப்பார் பலர் இருக்கின்றனர்

பேணுநர் பெறாஅது விளியும்
புன் தலை பெரும்பாழ் செயும் இவள் நலனே – புறம் 346/6,7

விரும்புவோர் கிடைக்காமல் கெடும்,
புல்லிய இடமாகிய பெரிய பாழிடமாக இவ்வூரைச் செய்யும், இவள் நலன்

வைகல்-தோறும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும் இ உலகத்து
காணீர் என்றலோ அரிதே அது நனி
பேணீர் ஆகுவிர் ஐய – நற் 46/1-4

ஒவ்வொரு நாளும் இன்பமும் இளமையும்
எய்யப்பட்ட அம்பின் நிழலைப் போலக் கழிகின்ற இந்த உலகத்தில்
அதனை நீவிர் அறியமாட்டீர் என்று கூறுவது இயலாது. அதனை மிகவும்
கருத்தில்கொண்ட தன்மையர் ஆவீராக ஐயனே;

பேர் மகிழ் செய்யும் பெரு நறா பேணியவே
கூர் நறா ஆர்ந்தவள் கண் – பரி 7/63,64

கண்டார்க்குப் பெரு மகிழ்ச்சியைச் செய்யும் பெரிய நறவத்தின் சிவந்த நிறத்தைப் பெற்றன,
மிகுதியான கள்ளினைக் குடித்தவளின் கண்;

தளவின் பைம் கொடி தழீஇ பையென
நிலவின் அன்ன நேர் அரும்பு பேணி
கார் நயந்து எய்தும் முல்லை – ஐங் 454/1-3

செம்முல்லையின் பசிய கொடியைத் தழுவிக்கொண்டு, மெதுவாக
நிலவைப் போன்ற அழகிய வெண்மையான அரும்புகளால் அணிசெய்து
கார்ப் பருவத்தை விரும்பித் தோன்றியிருக்கின்றன முல்லை மலர்கள்;

இளம் துணை புதல்வரின் முதியர் பேணி
தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல் – பதி 70/21,22

இளம் துணைவராகிய புதல்வரைப் பெற்று, முதியோரைப் பாதுகாத்து
தொன்றுதொட்ட உன் கடமையைத் தவறாது செய்யும், வெல்லுகின்ற போரையுடைய அண்ணலே!

மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ
பேணி துடைத்து அன்ன மேனியாய் கோங்கின் – கலி 117/1,2

“நன்றாக உருக்கிய பசும்பொன்னின் நடுவே நீலமணிகளை அழுந்தப் பதித்துப்
மிக்க கவனமாகத் துடைத்துவிட்டதைப் போன்ற கரிய நிறமுடையவளே!

மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து அவன்
காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும்
பேணி அவன் சிறிது அளித்த_கால் என்
நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல் – கலி 122/8-11

மிகவும் சிறப்புள்ள அழகும் காதலும் உள்ள தன் மனைவியருடன் மனம் விரும்பி வாழும் அவன்
நம்மைக் காணும் விருப்பமும் இல்லாதவனாயிருப்பதை அறிவேன், அப்படி அறிந்திருந்தாலும்
கனிவுடன் அவன் நம்மேல் சிறிதளவாவது அன்புகாட்டியவுடனே என்
நாணமற்ற நெஞ்சம் அவனுக்காக நெகிழ்ந்துபோவதையும் காண்கிறேன்;

முடலை யாக்கை முழு வலி மாக்கள்
வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து
துவலை தண் துளி பேணார் – நெடு 32-34

முறுக்குண்ட உடம்பினையும், மிகுந்த உடற்பலமும் உடைய மிலேச்சர்
வண்டுகள் மொய்க்கும் கள்ளினை மிகுதியாக உண்டு, களிப்பு மிக்கு,
தூரலாக விழும் குளிர்ந்த துளியைப் பொருட்படுத்தாமல்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *