Skip to content

சொல் பொருள்

(பெ) 1. சிறுமி, மகளிர்பருவம் ஏழனுள் ஐந்து வயதுமுதல் ஏழு வயதுவரையுள்ள பருவத்துப் பெண்,

2. இளமையானது

3. அறிவிலி, அறிவில்லாதது, அறியாமை,

4. சூதுவாதற்ற, கள்ளங்கபடமற்ற ஆண்/பெண்,

சொல் பொருள் விளக்கம்

சிறுமி, மகளிர்பருவம் ஏழனுள் ஐந்து வயதுமுதல் ஏழு வயதுவரையுள்ள பருவத்துப் பெண்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Girl between the ages of five and seven;

that which is very young

simpleton, foolish person/thing, ignorance

simple-minded person

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

முலை முகம்_செய்தன முள் எயிறு இலங்கின
தலை முடி சான்ற தண் தழை உடையை
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்
மூப்பு உடை முது பதி தாக்கு அணங்கு உடைய
காப்பும் பூண்டிசின் கடையும் போகலை
பேதை அல்லை மேதை அம் குறு_மகள் – அகம் 7/1-6

“முலைகள் கூம்பி நிறைந்த வளர்ச்சியுற்றன. கூரிய பற்கள் மின்னுகின்றன.
தலையில் கூந்தலும் நன்கு வளர்ந்துள்ளது. குளிர்ந்த தழையாடையையும் உடுத்தியுள்ளாய்.
சுற்றித்திரியும் விளையாட்டுத் தோழியருடன் எவ்விடத்தும் செல்லாதிருப்பாய்,
மிகப் பழமை வாய்ந்த இந்த மூதூர் வருத்தும் தெய்வங்களை உடையது.
(எனவே நீ)காவலுக்கு உட்பட்டிருக்கவேண்டும், வீட்டின் வெளி வாசல் வரைக்கும் போகக்கூடாது.
சிறுமி அல்லவே நீ, அறிவுள்ள சிறுமகளே!,

இரும் சேறு ஆடிய நுதல கொல் களிறு
பேதை ஆசினி ஒசித்த
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே – நற் 51/9-11

கரிய சேற்றைப் பூசிக்கொண்ட நெற்றியையுடையதுமான கொல்லவல்ல ஆண்யானை
இளையதாகிய ஆசினிப் பலாவின் கிளையை வளைத்து முறித்து,
மலர்கள் செறிந்த வேங்கைமரத்தின் நிழலில் தங்கியிருக்கும் மலையை உடைய நம் தலைவனுக்காக

பா அடி உரல பகு வாய் வள்ளை
ஏதில்_மாக்கள் நுவறலும் நுவல்ப
அழிவது எவன்-கொல் இ பேதை ஊர்க்கே – குறு 89/1-3

பரந்த அடிப்பகுதியையுடைய உரலிடத்து பகுத்த வாயாற் பாடும் வள்ளைப்பாட்டை
அயலோராகிய பெண்கள் குறையும் கூறுவர்;
கெடுதல்தான் யாது இந்த அறிவில்லாத ஊருக்கு?

கறவை தந்த கடும் கால் மறவர்
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ
முதுவாய் பெண்டின் செது கால் குரம்பை
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை
தோள் துணை ஆக துயிற்ற துஞ்சாள் – அகம் 63/12-16

கறவைகளைக் கொண்டுவந்த மிகுந்த வேகமுள்ள காலையுடைய மறவர்களின்
ஆரவாரமிக்க சிறிய ஊரில் இரவில் தங்கி
முதிய பெண்ணின் சோர்ந்த கால்களையுடைய குடிசையில்
இளம் மயிலைப் போன்ற எனது நடை மெலிந்த பேதைமகள்
தன் தலைவன் தனது தோளையே அணையாக வைத்துத் தூங்கப்பண்ணவும் தூங்காதவளாகி,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *