சொல் பொருள்
(வி.அ) மெல்ல மெல்ல, சிறிது சிறிதாக, இலேசாக,
பார்க்க : பைப்பய
சொல் பொருள் விளக்கம்
மெல்ல மெல்ல, சிறிது சிறிதாக, இலேசாக,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
slowly, softly, gently
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பின்னி அன்ன பிணங்கு அரில் நுழைதொறும் முன்னோன் வாங்கிய கடு விசை கணை கோல் இன் இசை நல் யாழ் பத்தரும் விசி பிணி மண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பி கை பிணி விடாஅது பைபய கழி-மின் – மலை 379-383 பின்னிவைத்ததைப் போன்ற கொடிகள் பிணைந்திருக்கும் புதர்க்காட்டில் நுழையும்போதெல்லாம், முன்னே செல்பவன் (ஒதுக்கிப் பின்)விட்டுவிட்ட கடும் வேகம்கொண்ட திரண்ட கோல், இனிய இசையைத்தரும் நல்ல யாழின் (கூடு போன்ற)பத்தலினையும், இழுத்துக்கட்டப்பட்ட (தோலில் பூசப்பட்ட கரிய)சாந்து நிறைந்த முரசின் மேற்பரப்பையும், (அடித்து உடைத்துவிடாதபடி)பாதுகாத்து, (முன்செல்பவனைப் பற்றிய)கைப் பிடியை விட்டுவிடாமல் மெல்ல மெல்லப் போவீராக பைம் கண் யானை பரூஉ தாள் உதைத்த வெண் புற களரி விடு நீறு ஆடி சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபய பாஅர் மலி சிறு கூவலின் தணியும் – நற் 41/1-4 சிறிய கண்ணையுடைய யானையின் பருத்த கால்கள் எற்றியதால் ஏற்பட்ட வெண்மையான நிறத்தையுடைய களர் நிலத்தில் எழுந்த நுண்ணிய துகள் படிந்து காட்டுவழியின் தொடக்கத்தில் வருந்திய வருத்தம் சிறிதுசிறிதாக பாறைகள் மலிந்த சிறிய கிணற்று நீரில் தணிந்திட வண்டல் ஆயமொடு உண்துறை தலைஇ புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்தென புள் ஆர் பெண்ணை புலம்பு மடல் செல்லாது கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த வேள்வி தூணத்து அசைஇ யவனர் ஓதிம விளக்கின் உயர் மிசை கொண்ட வைகுறு_மீனின் பைபய தோன்றும் – பெரும் 311-318 (சிறு வீடு கட்டும்)விளையாட்டுடைய தோழியருடன் நீருண்ணும் துறையில் கூடி நீராடுகின்ற மகளிர் (நீரில்)நழுவவிட்டுச்சென்ற பொன்னாற் செய்த மகரக்குழையினை, இரையைத் தேடுகின்ற (நீல)மணி(போலும்) மீன்கொத்தி (தனக்கு)இரை என எண்ணிப் பாய்ந்தெடுத்து, பறவைகள் நிறைந்திருக்கின்ற பனைமரத்தின் தனித்த மடலுக்குச் செல்லாமல், நூற்கேள்வியையுடைய அந்தணர் செய்தற்கரிய கடனாகச் செய்து முடித்த வேள்விச்சாலையின் வேள்வித்தூணின்மேல் இருக்க, (அப்பறவை)யவனரின் அன்ன(த்தைப்போன்ற தொங்கு) விளக்கைப்போலவும், (மகரக்குழை, விளக்கின் தீச்சுடர்)உயர்ந்த வானில் இடங்கொண்ட வைகறை வெள்ளிமீன் போலவும் மினுக்மினுக் என்று இலேசாக ஒளிவிட்டும் தோன்றும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்