Skip to content
மஞ்சள்

மஞ்சள் ஒரு பூண்டு வகைச் செடி.

1. சொல் பொருள்

(பெ) வேரில் கிழங்கு வைக்கும் ஒரு செடி, ஒரு நிற வகை

2. சொல் பொருள் விளக்கம்

கப்புமஞ்சள், கறிமஞ்சள், மரமஞ்சள், விரலிமஞ்சள், கஸ்தூரிமஞ்சள் என மஞ்சளில் பல வகைகள் உள்ளன

  1. இது சேரநாட்டு நீர்நிலை ஓரங்களில் செழித்து வளரும்.
  2. வீட்டு முற்றங்களில் இதன் கிழங்கைப் புதைத்துவைத்துச் செடியாக இதனை வளர்ப்பர்.
  3. முற்றாத மஞ்சள்கிழங்கின் சொரசொரப்பான முதுகினைப் போல இறாமீன்களிருக்குமாம்.
  4. இறந்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்ட நடுகற்களை நீராட்டி, மஞ்சள்கிழங்கை அரைத்துப் பூசுவர்.
மஞ்சள்
மஞ்சள்

மொழிபெயர்ப்புகள்

English: Curcuma longa– COMMON TURMERIC, Turmeric • Assamese: হালধি, Halodhi • Bengali: হলুদ Halud • Gujarati: હળદર Haldar • Hindi: हल्दी Haldi • Kannada: Arishina, Arisina • Malayalam: മഞ്ഞള്‍, Manjal • Marathi: हळद Halad • Nepali: हल्दी Haldi • Oriya: Haladi • Sanskrit: Haridra, Marmarii • Tamil: Manjal • Telugu: హరిద్ర, Haridra • Urdu: Haldi, ہلدی 

3. ஆங்கிலம்

Turmeric, curcuma longa, Linn., Curcuma aromatica(கஸ்தூரிமஞ்சள்), yellow.;

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

மஞ்சள்
மஞ்சள்
கஸ்தூரிமஞ்சள்
கஸ்தூரிமஞ்சள்
1. இது சேரநாட்டு நீர்நிலை ஓரங்களில் செழித்து வளரும்.

கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை
பைம் கறி நிவந்த பலவின் நீழல்
மஞ்சள் மெல் இலை மயிர் புறம் தைவர
விளையா இளம் கள் நாற மெல்குபு பெயரா
குளவி பள்ளி பாயல் கொள்ளும்
குட புலம் காவலர் மருமான் – சிறு 42-47

செங்கழுநீர்ப்பூவைத் தின்ற பெரிய வாயையுடைய எருமை
பசிய மிளகுக் கொடி படர்ந்த பலாமரத்தின் நிழலில்,
மஞ்சளின் மெல்லிய இலை தனது மயிரையுடைய முதுகினைத் தடவிநிற்ப,
முற்றாத இளைய தேன் மணக்கும்படி, மென்றவாறு நடந்து,
காட்டு மல்லிகையாகிய பள்ளியில் துயில்கொள்ளும்
மேற்றிசைக்கண்ணுள்ள நிலத்தைக் காக்கும் சேரர் குடியிலுள்ளோன்

2.வீட்டு முற்றங்களில் இதன் கிழங்கைப் புதைத்துவைத்துச் செடியாக இதனை வளர்ப்பர்.

வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை
தண்டலை உழவர் தனி மனை – பெரும் 353-355

வளவிய தோட்டினையுடைய தென்னை மரத்தின் வற்றிய மடலினை வேய்ந்த,
மஞ்சளையுடைய முற்றத்தினையும் மணம் கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய
தோப்புகளில் வாழும் உழவரின் தனித்தனியாக அமைந்த மனைகளில்

3.முற்றாத மஞ்சள்கிழங்கின் சொரசொரப்பான முதுகினைப் போல இறாமீன்களிருக்குமாம்.

முற்றா மஞ்சள் பசும் புறம் கடுப்ப
சுற்றிய பிணர சூழ் கழி இறவின் – நற் 101/1,2

முற்றாத இளம் மஞ்சள்கிழங்கின் பசிய மேற்புறத்தைப்போலச்
சுற்றிலும் அமைந்த சொரசொரப்பையுடைய, சூழ்ந்துள்ள கழியில் உள்ள இறாமீனின்

4.இறந்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்ட நடுகற்களை நீராட்டி, மஞ்சள் கிழங்கை அரைத்துப் பூசுவர்.

ஏறு உடை இன நிரை பெயர பெயராது
செறி சுரை வெள் வேல் மழவர் தாங்கிய
தறுகணாளர் நல் இசை நிறும்-மார்
பிடி மடிந்து அன்ன குறும் பொறை மருங்கின்
நட்ட போலும் நடாஅ நெடும் கல்
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய – அகம் 269/3-9

ஏறுகளுடன் கூடிய பசுவினமாய் நிரைகள் மீளவும், மீளாது நின்று
திணிந்த சுரையையுடைய வெள்ளிய வேலையுடைய வெட்சி மறவரைத் தடுத்துப் பொருது பட்ட
அஞ்சாமையுடைய கரந்தை வீரரது நல்ல புகழை நிலைநிறுத்துமாறு
பெண்யானைகள்கிடந்தாலொத்த குன்றுகளின் பக்கத்தே
நட்டு வைத்தலைப் போன்ற இயற்கையில் எழுந்த நீண்ட கற்களின்
அகன்ற இடத்தைச் செதுக்கி இயற்றிய பல வடிவுகளையும் நீராட்டி
நறுமணமுள்ள மஞ்சள் அவற்றின் ஈரிய புறத்தில் விளங்குமாறு பூசி

மஞ்சள் மெல் இலை மயிர் புறம் தைவர - சிறு 44

மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை - பெரும் 354

இஞ்சி மஞ்சள் பைம் கறி பிறவும் - மது 289

காய் கமுகின் கமழ் மஞ்சள்/இன மாவின் இணர் பெண்ணை - பட் 17,18

முற்றா மஞ்சள் பசும் புறம் கடுப்ப - நற் 101/1

நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய - அகம் 269/9

சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர் - மலை 343

மஞ்சள் அழகும் அழகு அல்ல நெஞ்சத்து - நாலடி:14 1/2

மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி மேதகு தென்னன் பெருந்துறையான் - திருவா:9 9/2

ஏலமோடு இலை இலவங்கமே இஞ்சியே மஞ்சள் உந்தி - தேவா-சம்:3784/3

அரைத்த மஞ்சள் அது ஆவதை அறிந்தேன் அஞ்சினேன் நமனார் அவர்-தம்மை - தேவா-சுந்:615/2

மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பு இடில் - திருமந்:849/3

மஞ்சள் அழிந்த அதற்கு இரங்கி மையும் கண்ணின் மருங்கு ஒதுக்கி - 7.வார்கொண்ட:3 60/2

பற்று மஞ்சள் பூசி பாவைமாரொடு பாடியில் - நாலாயி:235/1

பைய ஆட்டி பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட - நாலாயி:18/2,3

நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்து நீராட்டும் இ நம்பிக்கு - நாலாயி:37/1,2

மெய் திமிரும் நான பொடியோடு மஞ்சளும்
செய்ய தடம் கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும் - நாலாயி:52/1,2

மஞ்சளும் செங்கழுநீரின் வாசிகையும் நாறு சாந்தும் - நாலாயி:155/3

வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள் - நாலாயி:256/3

மஞ்சள் நீர் ஆடி மினுக்கி பஞ்சணைதனில் ஏறி - திருப்:155/6

மஞ்சள் மணம் அதுவே துலங்க வகை பேசி - திருப்:180/2

நாலா பச்சிலையாலே மெல் புசி மஞ்சள் கலந்து அணி வாளி கொந்தள - திருப்:412/2

கொந்து அண் அம் குழல் இன்ப மஞ்சள் அணிந்து சண்பக வஞ்சி இளம் கொடி - திருப்:455/3

மந்த கடைக்கண் காட்டுவர் கந்த குழல் பின் காட்டுவர் மஞ்சள் பிணி பொன் காட்டுவர் அநுராக - திருப்:594/1

சார மஞ்சள் புயமும் கிளி முகங்கள் உகிர் பாளிதம் புனை துவண்டு இடையொடு இன்ப ரச - திருப்:829/5

கந்த வார் குழல் கோதி மாலையை புனைந்து மஞ்சளால் அழகாக மேனியில் திமிர்ந்து - திருப்:885/1

கங்குலின் குழல் கார் முகம் சசி மஞ்சளின் புயத்தார் சரம் பெறு - திருப்:454/1

வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல - திருப்:27/15

வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல - திருப்:40/15

அம் செம் சாந்தமொடு மஞ்சள் நீவி - இலாவாண:3/47

நெய் நிறம் கொண்ட பைம் நிற மஞ்சளின்
வை மருப்பு அணி பெற வண்ணம் கொளீஇ - மகத:5/60,61

கிழங்கும் மஞ்சளும் கொழும் கால் தகரமும் - உஞ்ஞை:51/27

மஞ்சளும் இஞ்சியும் செம் சிறு கடுகும் - மகத:17/142

மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அரில் வலயத்து - புகார்:10/74

காயமும் மஞ்சளும் ஆய் கொடி கவலையும் - மது:11/82

மண் ஆர மஞ்சள் உரிஞ்சி மலர் சூட்டி - சிந்தா:13 2780/1
கஸ்தூரிமஞ்சள்
கஸ்தூரிமஞ்சள்
கஸ்தூரிமஞ்சள்
கஸ்தூரி மஞ்சள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *