Skip to content

சொல் பொருள்

(பெ) 1. சிங்கம்,  2. யமன், 3. ஊழிப்பெருந்தீ, வடவைத்தீ, வடவாமுகாக்கினி, பெண்குதிரை முகத்தின் வடிவில் கடலுள் தங்கியிருந்து, யுகமுடிவில் வெளிப்பட்டு, உலகத்தை அழித்துவிடுவதாக நம்பப்படும் தீ, 4. ஊழியின் முடிவுக்காலம், 5. இறப்பு, சாவு, 6. கூற்றுவன், யமனுக்கு ஏவல் செய்பவன், 7. மடங்கிப்போதல், கீழ்ப்படுதல்,

சொல் பொருள் விளக்கம்

சிங்கம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

lion, Yama, as subduer of all things, A submarine fire in the shape of a mare’s head believed to consume
the word at the end of an aeon, end of an aeon, death, attendent of Yama, turning about, submission

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தடம் கோட்டு ஆமான் மடங்கல் மா நிரை
குன்ற வேங்கை கன்றொடு வதிந்து என – நற் 57/1,2

வளைந்த கொம்புகளையுடைய காட்டுப்பசு, சிங்கம் முதலான விலங்குகளின் கூட்டம் உள்ள
குன்றிலுள்ள வேங்கை மரத்தடியில் தன் கன்றுடன் படுத்திருந்ததாக,

மடங்கல் போல் சினைஇ மாயம் செய் அவுணரை
கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூ எயிலும்
உடன்ற_கால் முகம் போல ஒண் கதிர் தெறுதலின் – கலி 2/3-5

யமனைப் போல் சினங்கொண்டு, அழிவு செய்யும் அந்த அரக்கர்களைக்
கொன்று அழிக்கும் ஆற்றலோடு, முக்கண்ணனாகிய சிவன் அந்த அரக்கர் வாழும் திரிபுரக் கோட்டைகளைச்
சினந்து நோக்கிய பொழுது இருந்த பொறி பறக்கும் முகத்தினைப் போல, வெண் கதிர் வீசும் ஞாயிறு
சுட்டுப்பொசுக்குவதால்,

பொங்கு பிசிர் நுடக்கிய செம் சுடர் நிகழ்வின்
மடங்கல் தீயின் அனையை
சினம் கெழு குருசில் நின் உடற்றிசினோர்க்கே – பதி 72/14-16

பொங்கியெழும் பிசிரினையுடைய வெள்ளத்தை வற்றச் செய்யும் சிவந்த சுவாலைகளோடு தோன்றும்
ஊழிப்பெருந்தீயைப் போன்றவன்,
சினம் பொருந்திய குருசிலே! உன்னைக் கோபப்படுத்தியவர்களுக்கு.

மடங்கலும் கணிச்சியும் காலனும் கூற்றும் – கலி 105/20

ஊழித்தீயும், சிவனும், காலதேவனும், கூற்றுவனும்,

நால் திசையும் நடுக்கு_உறூஉம் மடங்கல் காலை
கூற்று நக்கது போலும் உட்குவரு கடு மாலை – கலி 120/8,9

நான்கு திசைகளும் நடுக்கமுறும் ஊழியின் முடிவுக்காலத்தில்
கூற்றுவன் சிரிப்பது போன்று அச்சத்தை வருவித்துக் கொடுமை செய்யும் மாலைக்காலமே

வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்கல் உண்மை மாயமோ அன்றே – புறம் 363/7-9

இறவாமல்
உடம்போடே என்றும் இருந்தவர் யாருமில்லை
இறப்பு உள்ளது பொய்யன்று

தா_மா_இருவரும் தருமனும் மடங்கலும்
மூ_ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும்
மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம் – பரி 3/8-10

அசுவினி, தேவர் ஆகிய இருவரும், இயமனும், கூற்றுவனும்,
மூன்று ஏழேழு உலகங்களாகிய இருபத்தியொரு உலகங்களும், அவ் உலகத்து உயிர்களும்,
மாயவனே! உன்னிடமிருந்து தோன்றிப் பரவினவை என்று சொன்னோம்,

உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும்
புல்லி அவன் சிறிது அளித்த_கால் என்
அல்லல் நெஞ்சம் மடங்கலும் காண்பல் – கலி 122/17-19

என்னை நினைத்துப்பார்க்கவும் செய்யாத பண்பற்றவன் என்பதை அறிவேன், அப்படி அறிந்திருந்தும்
என்னைத் தழுவிக்கொண்டு அவன் நம்மேல் சிறிதளவாவது அன்புகாட்டியவுடனே என்
அல்லல்படும் நெஞ்சம் மடங்கிப்போவதையும் காண்கிறேன்;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *