Skip to content

சொல் பொருள்

(பெ) 1. வாழை, பனை, தாழை போன்றவற்றின் இலைப்பகுதி, 2. பனங்கருக்கு, 3. சோளக்கதிர், வாழைப்பூ முதலியவற்றின் மேலுறை, 4. தலைவியைப் பெற இயலாத தலைவன் பனங்கருக்கினால் செய்து ஏறும் குதிரை

சொல் பொருள் விளக்கம்

வாழை, பனை, தாழை போன்றவற்றின் இலைப்பகுதி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Flat leaf of plantain, palm and screwpine,  Jagged stem of a palmyra leaf;, sheath of indian corn, plantain flower etc., Horse of palmyra stems on which a thwarted lover mounts to proclaim his grief.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

படு நீர் சிலம்பில் கலித்த வாழை
கொடு மடல் ஈன்ற கூர் வாய் குவி முகை – நற் 188/1,2

நீர் வளமுடைய மலைச்சரிவில் செழித்து வளர்ந்த வாழையின்
வளைந்த மடல்கள் ஈன்ற கூரிய வாயையுடைய குவிந்த மொட்டு

இறவு அருந்திய இன நாரை
பூ புன்னை சினை சேப்பின்
ஓங்கு திரை ஒலி வெரீஇ
தீம் பெண்ணை மடல் சேப்பவும் – பொரு 204-207

இறவினைத் தின்ற திரண்ட நாரைகள் (இருக்கும்)
பூக்களையுடைய புன்னையின் கொம்புகளில் தங்கின்,
உயர்ந்த அலையின் ஆரவாரத்திற்கு வெருவி,
இனிய பனையின் மடலில் தங்கவும்,

வால் இணர் மடல் தாழை – பட் 118

வெண்மையான பூங்கொத்துக்களையும் மடல்களையுமுடைய தாழையையுடைய

வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை – பெரும் 353,354

வளவிய தோட்டினையுடைய தென்னை மரத்தின் வற்றிய மடலினை வேய்ந்த,
மஞ்சளையுடைய முற்றத்தினையும் மணல் கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய

முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை – நெடு 23,24

பெரிய அடிப்பகுதியையுடைய பாக்கு மரத்தின் (நீல)மணியைப் போன்ற கழுத்தின்
கொழுத்த மடல்களில் (பாளை)விரிந்த திரட்சியைக் கொண்ட கொத்துக்களில்

காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி – மலை 336

காந்தளின், துடுப்பைப்போன்ற, கமழுகின்ற (வெட்டுவதற்குக்கூரான விளிம்புள்ள)மடலை ஓங்கிப்பாய்ச்சி,

தூங்கல் ஓலை ஓங்கு மடல் பெண்ணை
மா அரை புதைத்த மணல் மலி முன்றில் – நற் 135/1,2

தொங்குகின்ற ஓலைகளையும், உயர்ந்து நீண்ட மடல்களையும் கொண்ட பனைமரத்தின்
கரிய அடிமரத்தைப் புதைத்த மணல் மிகுந்துகிடக்கும் வீட்டு முற்றத்தில்

ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு – புறம் 29/14

வீழ்ந்த பனங்கருக்காகிய விறகால் கழிக்கண் மீனைச் சுட்டு

குழல் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலை – அகம் 336/1

துளை பொருந்திய தண்டினையுடைய சேம்பினது கொழுவிய மடலிலுள்ள அகன்ற இலையுடன் கூடிய

இ நோய்
பொறுக்கலாம் வரைத்து அன்றி பெரிது ஆயின் பொலம் குழாய்
மறுத்து இ ஊர் மன்றத்து மடல் ஏறி
நிறுக்குவென் போல்வல் யான் நீ படு பழியே – கலி 58/20-23

இந்த நோயைப்
பொறுக்கக்கூடிய அளவையும் மீறி இது பெரியதானால், பொன்னால் செய்த குழையினையுடையவளே!
இதற்குப் பதிலாக, இந்த ஊர் மன்றத்தில் மடல் ஏறி
உன் மேல் நிலைநாட்டுவது போல் உள்ளேன் நான், நீ எய்தும் பழியை.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *