Skip to content
மடு

மடு என்பதன் பொருள்மாட்டின் பால்மடி,பள்ளம் …

1. சொல் பொருள்

மாட்டின் பால்மடி

பள்ளம்

உள்வாங்கல்

(வி) 1. ஊட்டு, 2. செலுத்து, நுழை, 3. தீ மூட்டு,  4. சேர்த்துவை, 5. ஊடுருவக்குத்து, 6. மேற்கொள், 7. அமிழ்த்து,  8. கொண்டுபோ, எடுத்துச்செல், 9. நுழை, புகு,  10. உணவுபடை, பலியுணவு செலுத்து,  11. துயில்கொள், 12. உண், அருந்து, 13. விழுங்கு,

(பெ) 1. சிறுகுளம்; குட்டை, 2. சுனை; பொய்கை, 3. ஆற்றில் உள்ள ஆழமான பள்ளம், 4. பெரும்பள்ளம

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

Cow Udder Teats

feed, cause to go or enter, ignite, kindle, unite, join, gore, pierce, thrust, undertake, immerse, cause to sink, take with, enter, offer food, offer oblation to deity, go to sleep, eat, drink, devour

pond; pool, waterhole, deep pool in a river, deep gorge

3. சொல் பொருள் விளக்கம்

மாட்டின் பால்மடியை ‘மடு’ என்பது பொதுவழக்கு. “ஆறிடு மேடும் மடுவும்” என்பதால் ஆற்றுப் போக்கால் ஏற்படும் மேடும் பள்ளமுமாகியவற்றுள் பள்ளத்தைக் குறிக்கின்றது, மடு என்பது, மடுத்தல் என்பது உண்ணல், பருகல், கேட்டல் என்னும் பொருளில் வருகின்றது.

நல்வழி :32

ஆறுஇடும் மேடும் மடுவும்போல் ஆம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர்! – சோறு இடும்;
தண்ணீரும் வாரும்; தருமமே சார்புஆக,
உள்நீர்மை வீறும், உயர்ந்து
நல்வழி :32

(இடும் = உருவாக்கும், மடு = பள்ளம், ஏறிடும் = உயர்ந்திடும், வீறும் = மிகும்.)

ஆற்றில் தண்ணீர் ஓடும் வேகத்திற்கு ஏற்ப மேடுகளும் பள்ளங்களும் மாறி மாறி அமையும். அதைப்போல், செல்வமும் ஒருவரிடம் நிலைத்து இருப்பது இல்லை. ஒருவரிடம் மிகுதியாகச் செல்வம் சேரும். வேறு ஒருவரிடம் குறைவாகச் சேரும். அதுவும் நிலையாக இருப்பதில்லை.

எனவே, செல்வம் இருக்கின்ற போதே அந்தச் செல்வத்தைப் பயன்படுத்தி உணவளித்தல், தண்ணீர்ப் பந்தல் அமைத்தல் முதலிய அறச்செயல்களைச் செய்தல் வேண்டும். இவ்வாறு அறச்செயல்கள் செய்தால் நமது உள்ளம் மகிழ்ச்சி அடையும் என்று நல்வழி தெரிவிக்கிறது.

இது, உள்வாங்கல் ஆகும். மடு என்னும் பள்ளமான நீர்நிலையும் உள்வாங்கல் பொருளில் அமைந்துள்ளது. எ-டு: மணற்பாட்டு மடு. இது நெல்லை வழக்கு.

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கரும் கோட்டு எருமை செம் கண் புனிற்று ஆ

காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும்

நுந்தை நும் ஊர் வருதும் – ஐங் 92/1-3

கரிய கொம்பினையுடைய எருமையின் சிவந்த கண்ணையுடைய அண்மையில் ஈன்ற பெண்ணெருமை தன் அன்புக்குரிய கன்றினுக்குப் பால் சுரக்கும் தன் முலையைத் தந்து ஊட்டிவிடும் உனது தந்தை இருக்கும் உன் ஊருக்கு வருகிறேன்,

கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும்

ஆரை சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்

உரன் உடை நோன் பகட்டு அன்ன – புறம் 60/7-9

கழியின் நீரால் விளைந்த உப்பை முகந்துகொண்டு மலைநாட்டை நோக்கிச் செலுத்துகின்ற ஆரையுடைய சகடையினது குழிப்பாய்தலைத் தீர்த்துச்செலுத்தும் வலியையுடைய பாரம் பொறுக்கும் பகட்டை ஒக்கும்

சேமம் மடிந்த பொழுதின் வாய் மடுத்து

இரும் புனம் நிழத்தலின் சிறுமை நோனாது – குறி 156,157

காவல்தொழிலில் சோம்பியிருந்த பொழுதில், (யானை தன் கையால் தினையை உருவி)வாயில் நுழைத்து(உண்டு) பெரிய புனத்தை அழித்துவிடுகையினால், (தம்)மனத் தாழ்மையைப் பொறுக்கமாட்டாமல்,

காம்பு தலைமணந்த கல் அதர் சிறு நெறி

உறு பகை பேணாது இரவின் வந்து இவள்

பொறி கிளர் ஆகம் புல்ல தோள் சேர்பு

அறுகால்பறவை அளவு இல மொய்த்தலின்

கண் கோள் ஆக நோக்கி பண்டும்

இனையையோ என வினவினள் யாயே

அதன் எதிர் சொல்லாள் ஆகி அல்லாந்து

என் முகம் நோக்கியோளே அன்னாய்

யாங்கு உணர்ந்து உய்குவள்-கொல் என மடுத்த

சாந்த ஞெகிழி காட்டி

ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே – நற் 55/2-12

மூங்கில்கள் பின்னிக்கிடக்கும் கற்பாறை நெறியாகிய சிறிய வழியில், நேரக்கூடிய தீங்குகளை எண்ணிப்பாராமல், இரவில் வந்து இவளின் புள்ளித்தேமல் படர்ந்த மார்பகத்தைத் தழுவிச்செல்ல, இவளின் தோளைச் சேர்த்து வண்டினங்கள் அளவில்லாதனவாய் மொய்க்க, கண்ணால் கொல்பவளைப் போல் பார்த்து,

“இதற்கு முன்பும் இவ்வாறு மொய்க்கப்பெற்றாயோ” எனக் கேட்டாள் தாய்;

அதற்கு மறுமொழி சொல்லாதவளாய் மனம்வருந்தி என் முகத்தை நோக்கினாள் தலைவி; “அன்னையே” எப்படி ஆராய்ந்து இதனின்றும் தப்பிப்பாள் என எண்ணி, தீ மூட்டிய சந்தனக் கொள்ளிக்கட்டையைக் காட்டி, “இதனால்தான் இப்படி ஆயிற்று” என்றேன் நான்.

கொல் வினை பொலிந்த கூர் வாய் எறிஉளி

5. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

முகம் பட மடுத்த முளி வெதிர் நோன் காழ் – குறு 304/1,2

கொல்லன் தொழிலால் பொலிவுபெற்ற கூரிய வாயையுடைய எறியுளி முகத்தில் படும்படி சேர்த்துக்கட்டப்பட்ட உலர்ந்த மூங்கிலின் வலிமையுள்ள கழியை

முறம் செவி மறை பாய்பு முரண் செய்த புலி செற்று

மறம் தலைக்கொண்ட நூற்றுவர்தலைவனை

குறங்கு அறுத்திடுவான் போல் கூர் நுதி மடுத்து அதன்

நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை – கலி 52/1,4

தன் முறம் போன்ற செவியின் மறைவிடத்தில் பாய்ந்து தாக்கிய புலியைச் சினந்து, அறத்தை விட்டு மறத்தை மேற்கொண்ட நூற்றுவர் தலைவனான துரியோதனனின் தொடையை முறித்திட்ட வீமசேனன் போல் தன் கூரிய கொம்புமுனையால் குத்தி, அதன் மருமத்தைக் கிழித்துத் தன் பகையைத் தீர்த்துக்கொண்ட நீண்ட கொம்புகளையுடைய அழகிய யானை,

எல்லு தொழில் மடுத்த வல் வினை பரதவர் – அகம் 340/19

பகலிலே மீன் பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட வலிய செயலையுடைய மீன்பிடிப்போர்

அழல் எழு தித்தியம் மடுத்த யாமை

நிழலுடை நெடும் கயம் புகல் வேட்டாங்கு – அகம் 361/11,12

அழல் ஓங்கிய வேள்விக்குண்டத்தின் கண் ஆழ இடப்பெற்ற யாமை நிழல் பொருந்திய பெரிய பொய்கையின்கண் போதலை விரும்புவது போல

6. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அறியா தேஎத்து அரும் சுரம் மடுத்த

சிறியோற்கு ஒத்த என் பெரு மட தகுவி – அகம் 369/20,21

அறியப்படாத தேயத்தின்கண் அரிய சுர நெறியில் கொண்டுபோன இளையானுக்குப் பொருந்திய பெரிய மடப்பமும் தகுதியும் உடைய என் மகள்

வையை மடுத்தால் கடல் என தெய்ய – பரி 20/42

வையை கடலில் சென்று புகுந்தாற்போல

சிறு முத்தனை பேணி சிறு சோறு மடுத்து நீ

நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ – கலி 59/20,21

ஒரு பாவைப்பிள்ளையைச் செய்து, அதனைப் பேணி, அதற்கு மணமுடிக்க விளையாட்டாகச் சோறு சமைத்துப் படைத்து, நீ நறிய நெற்றியையுடைய தோழியருடன் மகிழ்ந்திருக்கும் நோன்பின் பயன் உனக்கு வந்து பொருந்துமோ?

ஒண் சுடர் விளக்கம் முந்துற மடையொடு

நன் மா மயிலின் மென்மெல இயலி

கடும் சூல் மகளிர் பேணி கைதொழுது

பெரும் தோள் சாலினி மடுப்ப ஒருசார் – மது 607-610

ஒளிரும் சுடரையுடைய (நெய்)விளக்கு முற்பட, உண்டிகளோடு, நல்ல பெரிதான மயில் போல மெள்ள மெள்ள நடந்து, முதிர்ந்த சூல்கொண்ட மகளிரைக் காத்து, கைகுவித்துத் தொழுது, பெரிய தோளினையுடைய இறைவாக்குப்பெண் பலியுணவுகொடுக்க – ஒருபக்கத்தே,

பாடு ஆன்று அவிந்த பனி கடல் புரைய

பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப

பானாள் கொண்ட கங்குல் இடையது – மது 629-631

ஒலி நிறைந்து அடங்கிய குளிர்ந்த கடல் போல, படுக்கையில் துயில்கொள்வோர் கண் இனிதாகத் துயில்கொள்ள நடுநிசியைக் கழித்த இரவின் இடையாமத்தே

மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும்

மகிழ்ந்து இனிது உறைமதி பெரும – மது 780,781

மணம் நாறுகின்ற கள்தெளிவைத் தர அதனைப் பருகி, நாள்தோறும் மகிழ்ச்சி எய்தி இனிதாக இருப்பாயாக, பெருமானே,

திங்களுள் தோன்றி இருந்த குறு முயால்

எம் கேள் இதன் அகத்து உள்_வழி காட்டீமோ

காட்டீயாய் ஆயின் கத நாய் கொளுவுவேன்

வேட்டுவர் உள்_வழி செப்புவேன் ஆட்டி

மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த

என் அல்லல் தீராய் எனின் – கலி 144/18-23

திங்களுக்குள் தோன்றியிருக்கும் சின்ன முயலே! என் காதலன் இந்த உலகத்தில் இருக்கும் இடத்தைக் காட்டுவாயா?

காட்டாவிட்டால் வேட்டை நாயை உன்மீது ஏவிவிடுவேன், வேடர்கள் இருக்குமிடம் சென்று அவரிடம் அறிவித்துவிடுவேன், படமெடுக்கச் செய்து பாம்பினை, திங்களுடன் உன்னையும் விழுங்க அனுப்புவேன் – மதி மாறிப்போயிருக்கும் என் அல்லலைத் தீர்த்துவைக்காவிட்டால்,

மடு இடை போய்ப் பரு முதலையின் வாய்ப்படு மத கரி
கூப்பிட வளை ஊதி … திருப்புகழ் 1204 அடி இல் விடாப் பிணம்  (பொதுப்பாடல்கள்)

மடு இருந்த இடத்துக்குப் போய் பெரிய முதலையின் வாயில் அகப்பட்டிருந்த மதயானையாகிய கஜேந்திரன் கூப்பிட, சங்கை ஊதுபவனும்,

பெருநீ ரறச்சிறு மீன் துவண்
  டாங்கு நினைப்பிரிந்த
வெருநீர்மை யேனை விடுதிகண்
  டாய்வியன் கங்கைபொங்கி
வரும்நீர் மடுவுள் மலைச்சிறு 
  தோணி வடிவின்வெள்ளைக்
குருநீர் மதிபொதி யுஞ்சடை 
  வானக் கொழுமணியே.  26 எட்டாம் திருமுறை திருவாசகம் நீத்தல் விண்ணப்பம்

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *