Skip to content

சொல் பொருள்

(வி) 1. குழம்பு, தடுமாறு, 2. நெருங்கியிரு, 3. வருந்து, 4. கல, 5. கலங்கு, 6. மிகுந்திரு 7. செறிந்திரு,8. போன்றிரு, ஒத்திரு, 9. கைகலந்து போரிடு, 10. தங்கு, 11. அறிவுகெடு, 12. பின்னிக்கிட,  13. கீழ்மேலாகப் புரள், 14. மாறுபடு, 15. குன்று, 16. ஐயங்கொள்,  17. ஒன்றால் ஈர்க்கப்படு,

சொல் பொருள் விளக்கம்

குழம்பு, தடுமாறு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

get confused, baffled, be crowded together, be distressed, be mixed up, be perturbed, be in excess, be dense, resemble, engage in a hand-to hand fight, be stagnant, stay, lose one’s senses, get entwined, roll over, be changed, decline, dwindle, be in doubt, be charmed, fascinated, enchanted

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின் – பெரும் 106

மானின் அடிச்சுவடுகள் பதிந்த குழம்பிப்போவதற்குக் காரணமான வழிகளின் பக்கத்தில்

முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட – பரி 15/39

அரும்புகள் நெருங்கியிருக்கின்ற முல்லை மகளிரின் முறையாக நடக்கின்ற கற்புநெறியைக் காட்ட,

பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிர காலையும்
அரிதே காதலர் பிரிதல் இன்று செல
இளையர் தரூஉம் வாடையொடு
மயங்கு இதழ் மழை கண் பயந்த தூதே – நற் 5/5-9

பெருமழையைப் பொழிந்த தொழிலையுடைய மேகங்கள்
தெற்குப்பக்கமாய் எழுந்து முழங்கும் முன்பனிக்காலத்திலும்
அரிதானதாகும் உன் காதலர் உன்னைவிட்டுப் பிரிதல்; இன்றைக்குச் செல்லும்
அந்த இளைஞரைத் தடுத்துத் திரும்பும்படி செய்யும் வாடையுடன்
வருந்துகின்ற இமைகளில் மழையாய் நீரைச் சிந்தும் உன் கண்கள் சொல்லிய செய்தியும்.

புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் – நற் 63/8

பறவைகள் வந்து உட்கார வளைந்து உதிர்ந்த பூக்கள் கலந்த சேறு நிரம்பிய

மாண்பு இல் கொள்கையொடு மயங்கு துயர் செய்த
அன்பு இல் அறனும் அருளிற்று மன்ற – ஐங் 394/1,2

மாண்பு சிறிதும் இல்லாத நெறிமுறையோடு, மனம் கலங்க இன்னல் செய்த
அன்பே இல்லாத தருமமும் எனக்கு அருள்செய்வதாயிற்று, உண்மையாய் –

மழை கழிந்து அன்ன மா கால் மயங்கு அறல் – அகம் 341/6

மழைபெய்து கழிந்தாலொத்த பெரிய வாய்க்கால்களில் தங்கிய கலங்கிய நீரை
புலியூர்க்கேசிகன் உரை

எல்லையும்
மயங்கு இருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க – நற் 364/1-3

பகற்போதிலும்
இருள் மிக்க நடுயாமத்துக் காரிருளோடன்றி
பேராரவாரத்தையுடைய மேகங்கள் நீர் நிறைந்து வானத்தில் இயங்க,
பின்னத்தூரார் உரை

இருள் மயங்கு யாமத்து இயவு கெட விலங்கி – அகம் 218/10

இருள் செறிந்த நடுயாமத்தே நெறி தடுமாறலான் விலகி
ந.மு.வேங்கடசாமிநாட்டார் உரை

வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன் – பரி 15/50

நம்மைக் கவ்விக்கொள்ளும் கரிய இருள் போன்ற நீலமணி நிற மேனியன்,

பனை தடி புனத்தின் கை தடிபு பல உடன்
யானை பட்ட வாள் மயங்கு கடும் தார் – பதி 36/5,6

பனைமரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டிருக்கும் காட்டினைப் போல துதிக்கைகள் வெட்டப்பட்டு, திரளான
யானைகள் இறந்துகிடக்கும், வாட்படைவீரர் ஒருவரோடொருவர் மோதிக்கொள்ளும் கடுமையான முன்னணிக்
களத்தில்

தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து – புறம் 294/4

எதிர்வோர், உறவினரென்றும் பிறரென்றும் பாராமல் கைகலந்து செய்யும் போர்க்களத்தில்

மழை கழிந்து அன்ன மா கால் மயங்கு அறல் – அகம் 341/6

மழைபெய்து கழிந்தாலொத்த பெரிய வாய்க்கால்களில் தங்கிய நீரை
ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை – ச.வே.சுப்பிரமணியன் உரை – இரா.செயபால் உரை

படை மயங்கு ஆரிடை நெடு நல் ஊரே – புறம் 343/17

படை ஏந்திய மறவர் நின்று காக்கும் அரிய வழிகளையுடைய நெடுய நல்ல ஊரின்கண்

வேறுபட்டு ஆங்கே கலுழ்தி அகப்படின்
மாறுபட்டு ஆங்கே மயங்குதி யாது ஒன்றும் – கலி 91/19,20

நான் உன்னுடன் வேறுபட்டு நிற்கும்போது நெஞ்சு கலங்குகின்றாய்! உன் கைக்குள் அகப்பட்டுக்கிடந்தால்
என்னோடு மாறுபட்டு பரத்தையர் சேரி புகுந்து அறிவு மயங்குகிறாய்!
மா.இராசமாணிக்கனார் உரை

முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க – பரி 6/20

மகளிர் முலையும், மைந்தர் மார்பும் முயங்குவதால் அவற்றிலுள்ள அணிகலன்கள் ஒன்றோடொன்று
பின்னிக்கிடக்க

எந்தையும் யாயும் உணர காட்டி
ஒளித்த செய்தி வெளிப்பட கிளந்த பின்
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே
முடங்கல் இறைய தூங்கணம்_குரீஇ
நீடு இரும் பெண்ணை தொடுத்த
கூடினும் மயங்கிய மையல் ஊரே – குறு 347

நம் தந்தையும் தாயும் உணரும்படி அறிவித்து
மறைத்து வைத்திருந்த செய்தியை வெளிப்படையாகப் பேசிய பின்னர்
மலைகள் பொருந்திய இடத்தைச் சேர்ந்த நம் தலைவன் நம்மிடம் வந்து வேண்ட
நல்லதையே விரும்பும் கொள்கையினால் கருத்துகள் ஒன்றுபட்டன;
வளைந்த சிறகுகளையுடைய தூக்கணங்குருவி
உயரமான கருத்த பனைமரத்தில் கட்டிய
கூட்டைப் பார்க்கிலும் கதைபின்னிக்கொண்டிருந்த இந்த ஊரும் நம்மோடு ஒன்றிப்போயிற்று

பூழி மயங்க பல உழுது வித்தி – புறம் 120/3

புழுதி கீழ்மேலாகப் புரள பல சால்பட உழுது வித்தி

அழிந்தோர்க்கு
ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது
செய்தல் வேண்டுமால் நன்றே – புறம் 213/20-22

அஞ்சினோர்க்கு
அரணாகும் நின் அடிநிழல், மாறுபடாமல்
செய்தல் வேண்டும் நல்வினையை

கடல் பாடு அவிந்து கானல் மயங்கி
துறை நீர் இரும் கழி புல்லென்றன்றே – குறு 177/1,2

கடல் ஒலி அடங்கிக் கடற்கரைச் சோலைகள் ஒளிமங்கித்
துறையில் உள்ள நீர்நிறைந்த கழிகள் பொலிவிழந்து காணப்பட்டது.
ச.வே.சுப்பிரமணியன் உரை

அறியாமையின் வெறி என மயங்கி
அன்னையும் அரும் துயர் உழந்தனள் – ஐங் 242/1,2

அறியாமையினால், தீயசக்தி தாக்கியதாக ஐயங்கொண்டு
அன்னையும் நீக்குதற்கரிய துயரத்தில் ஆழ்ந்தாள்;

தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார்
தார் மயங்கி வந்த தவறு அஞ்சி போர் மயங்கி
நீ உறும் பொய் சூள் அணங்கு ஆகின் மற்று இனி
யார் மேல் விளியுமோ கூறு – கலி 88/18-21

தேர் ஏறி வரும் சிறப்பால் ஈர்க்கப்பட்டு உன்னிடம் வந்த, தெரிந்தெடுத்த மாலை சூடிய அந்த அழகிய பரத்தையரின்
மாலையை மாற்றி உன் கழுத்தில் சூடி வந்த தவற்றுக்கு அஞ்சி நான் உன்னோடு கொண்ட ஊடல் போரில் கலங்கி
நீ கூறும் பொய்ச்சூள் உனக்குத் தெய்வகுற்றம் ஏற்படுத்துமாயின் அதனால் விளையும் கேடு, இனி
யார்மேல் இறங்குமோ கூறு!”

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *