சொல் பொருள்

(வி) 1. கலங்கு, மயங்கு, மனம்தடுமாறு, 2. வியப்படை, 3. மிரளு, வெருவு, 4. ஒப்பாகு,

2. (பெ) 1. மனக்கலக்கம், குழப்பம், மனத்தடுமாற்றம்,  2. மயக்கம், 3. பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை,

3. (இ.சொ) ஓர் உவம உருபு,

சொல் பொருள் விளக்கம்

கலங்கு, மயங்கு, மனம்தடுமாறு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be bewildered, perplexed, wonder, be amazed, be frightened, scared, be similar, bewilderment, perplexity, confusion, misapprehension, Congenital idiocy, a particle of comparison

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஆறு செல் வருத்தம் அகல நீக்கி
அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும்
மனம் கவல்பு இன்றி மாழாந்து எழுந்து
மாலை அன்னதோர் புன்மையும் காலை
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும்
கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப – பொரு 93-98

வழிபோன வருத்தத்தை என்னிடத்துச் சிறிதும் நில்லாமல் போக்கி,
கள்ளின் செருக்காலுண்டான மெய்நடுக்கமல்லது வேறு
மனக்கவர்ச்சி (சிறிதும்)இல்லாமல், துயின்று (பின்னர் உணர்ந்து)எழுந்து,
(முந்திய)மாலையில் (என்னிடத்தில் நின்ற) அப்படி ஒரு(மிகவும் அதிகமான) சிறுமையும், காலையில்
கண்டோர் மருளுதற்குக் காரணமான வண்டுகள் மொய்க்கின்ற (புதிய)நிலையும்,
கனவோ என்று கலங்கின என்னுடைய நெஞ்சு துணியும்படி

உரவு சினம் செருக்கி துன்னுதொறும் வெகுளும்
முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி
திளையா கண்ண வளைகுபு நெரிதர
நடுங்குவனம் எழுந்து நல் அடி தளர்ந்து யாம்
இடும்பை கூர் மனத்தேம் மருண்டு புலம் படர – குறி 130-134

மிகுகின்ற சினத்தால் செருக்கி, (தம் மேல் ஏதேனும்)நெருங்குந்தோறும் வெகுண்டுவரும்,
(மூங்கில்)முளை(போலும்) கூர்மையுள்ள பற்களையுடைய, பெரிய நகங்களையுடைய, நாய்
இமையாத கண்களையுடையவாய் (எம்மை)வளைத்துக்கொண்டு மேலேமேலே வருகையினால்,
அஞ்சிநடுங்கியவராய் (இருப்பை விட்டு)எழுந்து, (எம்)நல்ல கால்கள் தள்ளாட, யாங்கள்
வருத்தம் மிக்க மனத்தையுடையவராய் மிரண்டு (வேறு)இடத்திற்குச் செல்ல

பொரி அரை கோங்கின் பொன் மருள் பசு வீ – ஐங் 367/1

பொரிந்துபோன அடிப்பகுதியை உடைய கோங்கின் பொன்னை ஒத்த புதிய பூக்களை

முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் – நற் 353/4

வளைந்து முதிர்ந்த பலாவின் குடம் போன்ற பெரிய பழத்தை,

நகுதரும் தன் நாணு கைவிட்டு இகுதரும்
கண்ணீர் துடையா கவிழ்ந்து நிலன் நோக்கி
அன்ன இடும்பை பல செய்து தன்னை
வினவுவார்க்கு ஏதில சொல்லி கனவு போல்
தெருளும் மருளும் மயங்கி வருபவள் – கலி 144/3-7

நகைக்கிறாள், தன் நாணத்தைக் கைவிட்டு, ஒழுகுகின்ற
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, தலையைக் கவிழ்ந்து தரையைப் பார்த்துக்கொண்டு,
இவை போல துன்பத்தைக் காட்டும் செயல்கள் பலவற்றைச் செய்து, ஏனென்று தன்னைக்
கேட்பாருக்குத் தொடர்பில்லாத பதில்களைச் சொல்லி, கனவு காண்பவள் போல் காணப்பட்டு,
சிலநேரம் தெளிந்த அறிவோடும், சிலநேரம் குழம்பிய அறிவோடும் மாறிமாறித் தோன்றுபவளிடம்

மான் ஏறு மட பிணை தழீஇ மருள் கூர்ந்து
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும்
—————— ———————————
மாலை வந்தன்று மாரி மா மழை – குறு 319/1-5

ஆண்மான்கள் தம் மடப்பம் பொருந்திய பெண்மான்களைத் தழுவி, மயக்கம் மிக்கு
காட்டில் சேர்ந்த புதர்களில் மறைந்து ஒதுங்கவும்
—————————- ———————-
கார்காலத்துப் பெரிய மழை இம் மாலைப்பொழுதின்கண் வந்தது
மருள் – மயக்கம், திசை இருண்டு மழை பொழிதலின் மருள்கூர்ந்து ஒடுங்கின என்க – பெருமழைப்புலவர் உரை

சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் – புறம் 28/1-4

மக்கள் பிறப்பில் சிறப்பு இல்லாத குருடும், வடிவில்லாத தசைத்திரளும்
கூன் உடையவரும், குறுகிய உருவம் படைத்தோரும், ஊமையரும், செவிடரும்
விலங்கு வடிவாகப்பிறப்பவரும், அறிவின்றியே மயங்கி இருக்கும் பிறவிகளும் உளப்பட உலகத்தில்
உயிர்வாழ்பவர்க்கு
எட்டுவகைப்பட்ட பெரிய எச்சம் என்று சொல்லப்பட்ட இவையெல்லாம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.