Skip to content

சொல் பொருள்

(வி) 1. அலைந்துதிரி, 2. கோது, தேய்த்துவிடு, 3. உள்ளம் வேறுபடு, 4. எடுத்துச்செல், கொண்டுபோ, 5. தேய்த்துக் கூழாக்கு,  6. கூடிக்குலாவு, துள்ளித்திரி, உகளு,  7. வருந்து, 8. துளும்பு, ததும்பு, 9. முறுகு,  10. சுழலு, 

2. (பெ) தெரு, சாலை, 

சொல் பொருள் விளக்கம்

அலைந்துதிரி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

wander, roam about, preen, stoke, rub on, dissent, carry, grind to paste, jump with joy, grieve, be distressed, brim over, become hardened, whirl, street, road

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும்
அரக்கு விரித்து அன்ன பரேர் அம் புழகுடன்
மால் அங்கு உடையம் மலிவனம் மறுகி
வான் கண் கழீஇய அகல் அறை குவைஇ – குறி 95-98

கரிய பெரிய குருத்தம்பூ, வேங்கைப்பூ (ஆகிய பூக்களுடன்), பிறபூக்களையும்,
சாதிலிங்கத்தைப் பரப்பினாற் போன்ற பருத்த அழகினையுடைய மலையெருக்கம்பூவுடன்,
(எதைப்பறிப்பது என்று)குழப்பம் உள்ளவராயும், அவா மிகுந்தவராயும் (பலகாலும்)திரிந்து (பறித்து),
மழை (பெய்து)தன்னிடத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தின அகன்ற பாறையில் குவித்து,

மிளகு பெய்து அனைய சுவைய புன் காய்
உலறு தலை உகாஅய் சிதர் சிதர்ந்து உண்ட
புலம்பு கொள் நெடும் சினை ஏறி நினைந்து தன்
பொறி கிளர் எருத்தம் வெறிபட மறுகி
புன் புறா உயவும் வெம் துகள் இயவின் – நற் 66/1-5

மிளகினைப் பெய்து சமைத்தது போன்ற சுவையை உடைய புல்லிய காய்களை,
உலர்ந்த உச்சிக்கிளைகளைக் கொண்ட உகாய் மரத்தில், வண்டுகளை விலக்கிவிட்டு உண்டு,
தனித்திருந்த நீண்ட கிளையில் ஏறி, தன் பெடையை நினைத்து, தன்
புள்ளிகள் விளங்கும் பிடரிமயிர் மணங்கமழத் தேய்த்துவிடும்
புல்லிய புறா வருந்தும் வெம்மையான புழுதியையுடைய காட்டுவழியில்

நறு_நுதால் என்-கொல் ஐம்_கூந்தல் உளர
சிறு முல்லை நாறியதற்கு குறு மறுகி
ஒல்லாது உடன்று எமர் செய்தார் – கலி 105/53-55

நறிய நெற்றியையுடையவளே! என்ன ஆயிற்று இப்போது? நாம் நம் கூந்தலை அவிழ்த்து ஆற்றிவிட,
அது முல்லைமணம் கமழக் கண்டதற்கு, உள்ளம் வேறுபட்டு,
பொறுக்காமல் சண்டைபோட்டு என் சுற்றத்தார் கொண்டாரே,

சிறு புல் உணவு நெறி பட மறுகி
நுண் பல் எறும்பி கொண்டு அளை செறித்த – அகம் 377/2,3

சிறிய புல்லரிசியை ஒழுங்குபட எடுத்துச்சென்று
சிறிய பலவாய எறும்புகள் கொண்டுவந்து தம் வளையில் தொகுத்துவைத்த

தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர்
மீன் நெய்யொடு நறவு மறுகவும்
தீம் கரும்போடு அவல் வகுத்தோர்
மான் குறையொடு மது மறுகவும் – பொரு 214-217

தேனாகிய நெய்யோடு, கிழங்கை(யும்) விற்றவர்கள்
மீனின் நெய்யோடு நறவையும் மாறாகக் கொண்டுபோகவும்,
இனிய கரும்போடு அவலைக் கூறுபடுத்தி விற்றோர்,
மானின் தசையோடு கள்ளையும் மாறாகக் கொண்டுபோகவும்,

நரந்தம் அரைப்ப நறும் சாந்து மறுக – மது 553

கத்தூரியை அரைக்க, நறிய சந்தனத்தைத் தேய்த்துக் கூழாக்க

ஏறு முரண் சிறப்ப ஏறு எதிர் இரங்க
மாதர் மான் பிணை மறியொடு மறுக – ஐங் 493/1,2

இடிகள் மாறுபட்டு முழங்க, எருதுகள் அவற்றுக்கு எதிர்முழக்கமிட,
காதலையுடைய பெண்மான் தன் குட்டியோடு கூடிக்குலாவ

பெரும் கவின் பெற்ற சிறு தலை நௌவி
மட கண் பிணையொடு மறுகுவன உகள – மது 275,276

பெரும் அழகைப் பெற்ற சிறிய தலையையுடைய நௌவிமான்
மடப்பத்தையுடைய கண்ணையுடைய பிணையோடே கூடிக்குலாவுவனவாய் துள்ள

நாள் வலை முகந்த கோள் வல் பரதவர்
நுணங்கு மணல் ஆங்கண் உணங்க பெய்ம்மார்
பறி கொள் கொள்ளையர் மறுக உக்க
மீன் ஆர் குருகின் கானலம் பெருந்துறை – அகம் 300/1-4

நாள் காலையில் வலையினால் மீன்களை முகந்துகொண்ட மீன் பிடித்தலில் வல்ல பரதவர்கள்
நுண்ணிய மணலிடத்தே புலரும்படி பெய்வாராய்
பறியால் கொண்ட மிக்க மீனினையுடையவர் வருந்தும்படி சொரிந்த
மீன்களைத் தின்னும் பறவைகளையுடைய சோலையையுடைய அழகிய பெரிய கடல் துறையில்

தொடங்கு வினை தவிரா அசைவு இல் நோன் தாள்
கிடந்து உயிர் மறுகுவது ஆயினும் இடம் படின்
வீழ் களிறு மிசையா புலியினும் சிறந்த – அகம் 29/1-3

தொடங்கிய வினையைக் கைவிடாத – தளர்ச்சியற்ற – வலிமையான முயற்சியை உடைய –
(படுத்துக்)கிடந்து உயிர் வருந்தினாலும், (தான் தாக்கி) இடப்பக்கம் சாய்ந்து
விழுந்த களிறை உண்ணாத புலியைக் காட்டிலும் சிறந்த,

மரல் பழுத்து அன்ன மறுகு நீர் மொக்குள் – பொரு 45

மரல் பழுத்தாற் போன்ற துளும்பும் நீரையுடைய கொப்புளங்களையும்,

நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆரிடை
கழலோன் காப்ப கடுகுபு போகி
அறு சுனை மருங்கின் மறுகுபு வெந்த
வெம் வெம் கலுழி தவ்வென குடிக்கிய
யாங்கு வல்லுநள்-கொல் தானே – குறு 356/1-5

நிழல் அடங்கி அற்றுப்போன நீர் அற்ற கடக்கமுடியாத பாலை வெளியில்
காலில் கழல் அணிந்த தலைவன் காத்துவர, விரைந்து சென்று
நீர் அற்றுப்போன சுனையின் பக்கத்தில் முறுகிப்போய்ச் சூடான
மிகுந்த வெப்பமுடைய கலங்கிய நீரைத் தவ்வென்று குடிப்பதற்கு
எவ்வாறு முடியும் அவளால்?

அவல மறுசுழி மறுகலின்
தவலே நன்றுமன் தகுதியும் அதுவே – புறம் 238/18,19

துன்பமாகிய மறுசுழியின்கண் சுழலுவதைக்காட்டிலும்
இறந்துபடுதலே நன்று, நமக்குத் தக்க செய்கையும் அதுவே

மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின்
பரதர் மலிந்த பல் வேறு தெருவின் – பெரும் 322,323

மாடங்கள் உயர்ந்து நின்ற மணல் மிக்க சாலைகளையும்,
பரதவர் மிக்கு வாழ்கின்ற பலவாய் வேறுபட்ட தெருக்களையும்,

கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி – நற் 311/6

கொழுத்த மீனைச் சுடுகின்ற புகை தெருவெங்கும் பரக்க

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *