Skip to content

சொல் பொருள்

(இ.சொ) 1. பிரிநிலை இடைச்சொல், 2. வினைமாற்று 3. பிறிதுப்பொருள் குறிப்பு, 4. அசைநிலை

2. (வி.அ) பின்னர்,

சொல் பொருள் விளக்கம்

பிரிநிலை இடைச்சொல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

disjunctive, disjunctive, A term meaning other, another, an expletive, afterwards

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

எல்லை தருநன் பல் கதிர் பரப்பி
குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும்
அருவி மா மலை நிழத்தவும் மற்று அ
கருவி வானம் கடற்கோல் மறப்பவும் – பொரு 233-236

பகற்பொழுதைத் தருகின்ற ஞாயிறு பலவாகிய கதிர்களைப் பரப்புகையினாலே
கஞ்சங்குல்லை தீயவும், மரங்களினுடைய கொம்புகளை நெருப்புத் தின்னவும்
அருவி பாய்தலைப் பெரிய மலைகள் தவிர்ப்பவும், இவை ஒழிந்த
அந்தத் தொகுதியையுடைய முகில்கடலிடத்தே நீர் முகத்தலை மறந்தொழியவும்

தேம்படு சாரல் சிறுதினை பெரும் குரல்
செம் வாய் பைம் கிளி கவர நீ மற்று
எ வாய் சென்றனை அவண் என கூறி – நற் 147/2-4

தேன் பொருந்திய மலைச் சாரலிடத்தேயுள்ள புனத்தின்கண் விளைந்து நிற்கும் சிறுதினையின் பெரிய கதிர்களை
சிவந்த வாயும், பசிய நிறமுமுடைய கிளிகள் கவர்ந்துகொண்டு செல்ல, நீ
எங்கே சென்றிருந்தாய் அவ்விடத்தினின்றும் நீங்கி என்று சொல்லியழைத்து

நின்று
வரையக நாடன் வரூஉம் என்பது
உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று என – நற் 122/6-8

நின்று
மலை சூழ்ந்த நாட்டையுடைய தலைவன் வருவான் என்பது
உண்மையோ, இல்லையோ, வேறு யாதோ என

ஒரு மகள் உடையேன்-மன்னே அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு
பெரு மலை அரும் சுரம் நெருநல் சென்றனள்
இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே – நற் 184/1-5

ஒரே ஒரு மகளை உடையவள் நான்; அவளும்
போர்க்களத்தில் மிக்குச் செல்லும் வலிமையையுடைய கூரிய வேலையுடைய காளையோடு
பெரிய மலைகளினூடே செல்லும் அரிய வழியில் நேற்றுச் சென்றுவிட்டாள்;
இப்பொழுது தாங்கிக்கொள் உன் வருத்தத்தை என்று சொல்கிறீர்! அது
எப்படிச் சாத்தியமாகும்? அறிவுள்ள மக்களே!

செருக்கொடு நின்ற காலை மற்று அவன்
திரு கிளர் கோயில் ஒரு சிறை தங்கி – பொரு 89,90

மகிழ்ச்சியுடனே யான் நின்ற அந்தப் பொழுதிலே, பின்னர் அம் மன்னனுடைய
செல்வம் விளங்குகின்ற அரண்மனையின் அகத்தே ஒரு பக்கத்தே கிடந்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *