Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. சூடு, அணி, 2. மாறுபடு, முரண்படு, 3. போரிடு, சண்டையிடு, 4. மாறுபடு, 5. எதிர்கொள்,  6. மேற்கொள், 7. தலையில் தூக்கிவை, (போற்று),

2. (பெ) பர்வதம், 

சொல் பொருள் விளக்கம்

சூடு, அணி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

wear, put on, be in conflict with, be in dispute with, fight, war, be opposed, unfriendly, encounter, undertake, take upon oneself, raise one to head – idiom – praise, fete, mountain, hill

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை
மலை-மார் இடூஉம் ஏம பூசல் – மலை 305,306

முதல்நாளில்(=முதன்முதலில்) பூத்த பொன் போன்ற கொத்தினையுடைய வேங்கை மலர்களைச்
சூடுவதற்குப் (பெண்கள்)போடும் (தீங்கற்ற)மகிழ்ச்சி ஆரவாரமும்;

சிலை தார் அகலம் மலைக்குநர் உளர் எனின் – புறம் 61/14

இந்திர வில் போலும் மாலையையுடைய மார்போடும் மாறுபடுவோர் உளர் எனின்

கடல் கண்டு அன்ன ஒண் படை தானையொடு
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ – புறம் 197/3,4

கடலைக் கண்டாற்போலும் ஒள்ளிய படைக்கலத்தையுடைய சேனையுடனே
மலையோடு மாறுபட்டுப் பொரும் களிற்றினையுடையர் எனவும்

மலைத்த தெவ்வர் மறம் தப கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும – பதி 65/3,4

எதிர்த்துப் போரிட்ட பகைவரின் வீரம் அழியும்படி வென்ற,
காஞ்சித்திணைக்கு அமைந்த வீரர்களுக்குத் தலைவனே!

மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்
மலைத்தல் போகிய சிலை தார் மார்ப – புறம் 10/9,10

பெண்களை எதிர்கொள்ளுதல் அன்றி, பகைவரை
எதிர்கொள்ளல் என்பது இல்லாமல் போன இந்திர வில் போலும் மாலையையுடைய மார்பினனே

பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது
கழுது கண் பனிப்ப வீசும் அதன்_தலை
புலி பல் தாலி புதல்வன் புல்லி
அன்னா என்னும் அன்னையும் அன்னோ
என் மலைந்தனன்-கொல் தானே தன் மலை
ஆரம் நாறும் மார்பினன்
மாரி யானையின் வந்து நின்றனனே – குறு 161

பொழுதோ இருண்டுவிட்டது; மழையும் ஓயாமல்
பேய்களும் கண்களை மூடிக்கொள்ள ஓங்கியடிக்கின்றது. அதற்குமேலும்
புலிப்பல் தாலியுடைய மகனைத் தழுவிக்கொண்டு
‘அடி பெண்ணே’ என்று கூப்பிடுகிறாள் அன்னையும்;
அவன் எதனைச் செய்ய மேற்கொண்டானோ? தனது மலையின்
சந்தனம் மணக்கும் மார்பினன்
மழையில் நனைந்துநிற்கும் யானையைப் போல வந்து நின்றுகொண்டிருந்தான்

அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா
மெல்லியான் பருவம் போல் மயங்கு இருள் தலை வர – கலி 129/5,6

நல்லன அல்லாதவற்றை மேற்கொண்டு அற நெறிகளை நிலைநிறுத்தாத
ஆற்றல் குறைந்த மன்னனின் அரசாட்சியைப் போல மயக்கும் இருள் கவிய,

பொன் மலை சுடர் சேர புலம்பிய இடன் நோக்கி
தன் மலைந்து உலகு ஏத்த தகை மதி ஏர்தர – கலி 126/1,2

பொன் வளம் மிக்க மேற்கு மலையில் ஞாயிறு மறைய, அதற்காக வருந்திய உலகை நோக்கி,
தன்னைத் தலையில் தூக்கிவைத்து உலகம் கொண்டாடும்படியாக, அதற்கேற்ற தகுதியையுடைய திங்கள் எழ

மணி மலை பணை தோள் மா நில_மடந்தை – சிறு 1

மணிகளையுடைய மலையே மூங்கில்(போன்ற) தோள்களாகவுள்ள பெரிய நிலமகளின்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *