Skip to content

சொல் பொருள்

(பெ) மழநாட்டைச் சேர்ந்தவர்,

சொல் பொருள் விளக்கம்

மழநாட்டைச் சேர்ந்தவர்,

திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவிரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி முதல்
பண்டைய எருமைநாடு வரை (தற்போதய மைசூர்) தற்கால நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர்,
அரியலூர், திருவண்ணாமலை மாவட்டத்தின் மேற்கு பகுதி, திருச்சி மாவட்டத்தின் சில பகுதிகள் மற்றும்
கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது மழநாடு.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

those belonging to mazha naadu.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இவர்கள் மணிகட்டிய வேலை ஏந்திப் போர் புரியும் பாங்கினர்.

தனி மணி இரட்டும் தாள் உடை கடிகை
 நுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர் – அகம் 35/3,4

வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சியும், வள்ளல் ஓரியும் மழவர் பெருமகன் எனக் குறிப்பிடப்படுகின்றனர்

ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன் – புறம் 88/3
மழவர் பெருமகன் மா வள் ஓரி – நற் 52/9

பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தின் தலைவனான பல்யானைச் செல்கெழு குட்டுவன், மழவர்களைக் காக்கும்
கவசமாக விளங்கினான்.

குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை – பதி 21/24

பதிற்றுப்பத்தில் ஆறாம்பத்துத் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மழவர்களைக் காக்கும்
கவசமாக விளங்கினான்.

வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை – பதி 55/8

மழவர் வில்லும் அம்பும் ஏந்தியவராய் வீளை (வாய் ஊதல்) அடித்துக்கொண்டு நாள்தோறும் ஆனிரைகள்
மேய்த்து வருவர்

வீளை அம்பின் விழு தொடை மழவர்
நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து – அகம் 131/6,7

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் விடியும் பொழுதில் தன்னைத் தாக்கிய
மழவர்களை விரட்டினான்

இரவு தலைப்பெயரும் ஏம வைகறை
மை படு பெரும் தோள் மழவர் ஓட்டி – மது 686,687

பொதினி எனப்பட்ட பழனிமலை அரசன் தன்னைத் தாக்கிய இந்த மழவர்களை விரட்டினான்

வண்டு பட ததைந்த கண்ணி ஒண் கழல்
உருவ குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நல் போர் நெடுவேள் ஆவி
அறு கோட்டு யானை பொதினி ஆங்கண் – அகம் 1/1-4

சிற்றூரைச் சேர்ந்த ஆயர்கள் கையைத் தலை மீது வைத்து வருந்தும்படி கொழுத்த ஆவினைக் கவர்ந்து
அதன் இறைச்சியைப் பாலைத்திணை மழவர் உண்டனர். கன்றினையுடைய பசுவினைக் கொன்று உண்டனர்.
கடவுளுக்கும் காணிக்கையாகப் பலியிட்டனர்.

வய வாள் எறிந்து வில்லின் நீக்கி
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்
அம்பு சேண் படுத்து வன்_புலத்து உய்த்து என
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய்
புலவு புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை – அகம் 309/1-6

வேங்கட நாட்டை ஆண்ட தமிழ்மன்னன் புல்லி, மழவர்களை வணங்கச் செய்து அவர்களது நாட்டைத் தன்
ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான்.

மழபுலம் வணக்கிய மா வண் புல்லி – அகம் 61/12

இவர்கள், இன்றைய ஜிலேபி போன்ற, இனிய குழல்போன்ற தின்பண்டங்களை உணவாகக்கொண்ட
கழலணிந்த காலினையுடையவர்கள்.

தீம் புழல் வல்சி கழல் கால் மழவர் – மது 395

பாலைத்திணை மழவர்கள் கொடியவர்கள். அவர்கள் களவினையே வாழ்க்கையாகக் கொண்டிருந்தனர்.

கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த – அகம் 91/11

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *