Skip to content

சொல் பொருள்

(வி) 1. மாட்சிமைப்பட்ட குணங்களைக்கொண்டிரு, மேன்மையடை, சிறப்புறு, 2. நன்கு அமையப்பெறு, 3. நிறை, 4. உயர்,

2. (பெ) 1. மாட்சிமை, பெருமை, சிறப்பு, சீர்த்தி, 2. தடவை, மடங்கு, அளவு, 3. அழகு,

சொல் பொருள் விளக்கம்

மாட்சிமைப்பட்ட குணங்களைக்கொண்டிரு, மேன்மையடை, சிறப்புறு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

possess excellent character, become great, glorious, excellent

be formed well, be formulated well, be established well

be full, abundant

be lofty, great

Greatness; glory; splendour; excellence; dignity

turn, times

beauty

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

காவல் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறு இன்று ஆகி ஆறு இனிது படுமே – புறம் 185/2,3

காப்புடைய சகடந்தான் அதனைச் செலுத்துவோன் மாட்சிமைப்படின்
ஊறுபாடு இல்லையாய் வழியை இனிதாகச் செல்லும்

மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர் – புறம் 191/3

மாட்சிமைப்பட்ட குணங்களையுடைய மனைவியுடனே புதல்வரும் அறிவு நிரம்பினர்

கடவுள் எழுதிய பாவையின்
மடவது மாண்ட மாஅயோளே – அகம் 62/15,16

தெய்வமாக அமைந்த கொல்லிப்பாவையினைப் போன்ற
மடப்பத்தால் சிறப்புற்ற கரியளாய தலைவி

கடும் இனத்த கொல் களிறும் கதழ் பரிய கலிமாவும்
நெடும் கொடிய நிமிர் தேரும் நெஞ்சு உடைய புகல்மறவரும் என
நான்கு உடன் மாண்டது ஆயினும் மாண்ட
அற நெறி முதற்றே அரசின் கொற்றம் – புறம் 55/11,12

கடிய சினத்தை உடையவாகிய கொல்களிறும், விரைந்த செலவையுடையவாகிய மனம் செருக்கிய குதிரையும்
நெடிய கொடியை உடையவாகிய உயர்ந்த தேரும் நெஞ்சு வலியையுடைய போரை விரும்பும் மறவருமென
நான்கு படையும் கூட மாட்சிமைப்பட்டதாயினும், மாட்சிமைப்பட்ட
அறநெறியை முதலாக உடைத்து வேந்தரது வெற்றி

ஓவாது அடுத்தடுத்து அத்தத்தா என்பான் மாண
வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும் மற்று இவன்
வாய் உள்ளின் போகான் அரோ – கலி 81/19-21

ஓயாமல் அடுத்தடுத்து ‘அப்பா, அப்பா’ என்று சொல்லும் மகனை, மாட்சிமைப்பட
நம் மூங்கில்போன்ற மென்மையான தோள்களில் தூக்கி அமர்த்திக்கொண்டாலும், இவன்
வாயிலிருந்து போகமாட்டான் நம் தலைவன்?

மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ – கலி 117/1

மாட்சிமைப்பட உருக்கிய பசும்பொன்னின் நடுவே நீலமணிகளை அழுந்தப் பதித்து

அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு – சிறு 194

குற்றுதல் நன்கமைந்த அரிசி(யாலாக்கின) உருண்டையாக்கிய வெண்மையான சோற்றை

வினை மாண் பாவை அன்னோள் – நற் 185/11

செயல்திறன் நன்குகொண்ட கொல்லிப்பாவையைப் போன்றவள்

மட மா மந்தி மாணா வன் பறழ் – நற் 233/2

இளமையுடைய பெரிய பெண்குரங்கு, வளர்ச்சி முற்றாத தன் வலிய குட்டியோடு

காணுநர் கைபுடைத்து இரங்க
மாணா மாட்சிய மாண்டன பலவே – பதி 19/26,27

காண்போர் கைகொட்டிப் பிசைந்து வருந்த
தாழ்வுற்ற தன்மையுடையவாயின, பலவகையாலும் மாட்சிமையுற்றிருந்த இந் நாடுகள்

மன்னர் மதிக்கும் மாண் வினை புரவி – நற் 81/3

மன்னர்கள் மதிக்கும் மாட்சிமையான போர்வினையில் மேம்பட்ட குதிரைகளின்

நாண் உடை அரிவை மாண் நலம் பெறவே – அகம் 34/18

நாணம் மிக்க நம் தலைவியின் மாண்புள்ள அழகினை நுகர்வதற்கு

அம்ம வாழி தோழி பல் மாண்
நுண் மணல் அடைகரை நம்மோடு ஆடிய
தண்ணம் துறைவன் – ஐங் 115/1-3

கேட்பாயாக, தோழியே! பல தடவை
நுண்மணல் செறிந்த கரையில் நம்மோடு விளையாடிய
குளிர்ந்த அழகிய துறையைச் சேர்ந்தவன்

விழு நீர் வியல்_அகம் தூணி ஆக
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும் – நற் 16/7,8

விழுமிய கடல்சூழ்ந்த இந்த அகன்ற உலகத்தையே அளக்கும் கருவியாகக் கொண்டு
அந்த அளவில் ஏழு மடங்கு பெறுமான விழுமிய நிதியைப் பெற்றாலும்

வேனில் முருக்கின் விளை துணர் அன்ன
மாணா விரல வல் வாய் பேஎய் – நற் 73/1,2

வேனில்காலத்து முருக்க மரத்தில் நன்கு விளைந்து முற்றிய காய்களின் கொத்தினைப் போன்ற
அழகற்ற விரல்களைக் கொண்ட, வலிய வாயைக் கொண்ட பேய்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *