Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. ஒப்பாகு, 2. தோன்று,

2. (பெ) 1. விலங்கு, 3. குதிரை,

சொல் பொருள் விளக்கம்

ஒப்பாகு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

equal, resemble, appear, animal, deer, antelope, horse

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பாசடை நிவந்த கணை கால் நெய்தல்
இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும்
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் – குறு 9/4-6

பசிய இலைகளுக்கு மேல் உயர்ந்த திரண்ட காம்பையுடைய நெய்தல்பூ
கூட்டமான மீன்களையுடைய கரிய கழியில், நீரோட்டம் மிகுந்தோறும்
குளத்தில் மூழ்கும் மகளிரின் கண்களை ஒக்கும் – உ.வே.சா உரை

6. கண்ணின் – இன் என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபு உவம உருபோடு வந்தது (தொல்.உவம.11.பேர்);
மான என்பது வினை, உவமத்தின் கண் வந்தது (தொல்.உவம.12.பேர்) – உ.வே.சா உரை விளக்கம்

புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து
பனி ஊர் அழல்கொடி கடுப்ப தோன்றும்
இமய செம் வரை மானும்-கொல்லோ
அகம் 265/1-3

புகை போலப் பொலிவுற்று அகன்ற வானில் உயர்ந்து
பனி தவழும் தீச்சுடரை ஒப்பத் தோன்றும்
இமயமாய செவ்விய மலையினை ஒக்குமோ

வேங்கையும் புலி ஈன்றன அருவியும்
தேம் படு நெடு வரை மணியின் மானும்
நற் 389/1,2

வேங்கை மரங்களும் புலிபோல் தோன்றும் பூக்களை விளைவித்தன; அருவிகளும்
தேன் மணம் மிகுந்த நெடிய மலையில் நீலமணி போலத் தோன்றுகின்றன – புலியூர்க் கேசிகன் உரை
மணியின் – இன் உருபு ஒப்புப் பொருளது – வைதேகி ஹெர்பெர்ட் உரை

ஆளி நன் மான் அணங்கு உடை குருளை – பொரு 139

சிங்கம் (ஆகிய)நல்ல விலங்கின், வருத்துதலை உடைய குருளையானது

மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் – சிறு 31

மடப்பத்தையுடைய மான்(போலும்) பார்வையையும்; ஒளியுள்ள நெற்றியையும் (உடைய)விறலியரின்

பெயினே விடு மான் உளையின் வெறுப்ப தோன்றி
இரும் கதிர் நெல்லின் யாணரஃதே – நற் 311/1,2

மழை பெய்தால், விடுபட்ட குதிரையின் பிடரிமயிரைப் போன்று செறிவாகச் சாய்ந்து அடித்து,
பெரிய கதிர்களையுடைய நெல்லின் புது அறுவடையைக் கொடுக்கும்;

மான் என்ற சொல்லுக்கு அடைமொழி கொடுத்து, அது இன்ன விலங்கு என்று குறிப்பிடப்படுவதும் உண்டு.

1. சிஙகம் – வயமான், அரிமான்

பொறி வரி புகர்_முகம் தாக்கிய வயமான் – பெரும் 448

‘ஆழமாய்ப்பதிந்த இரேகைகளும், புள்ளிகளும் உள்ள முகத்தினையுடைய யானையைப் பாய்ந்த அரிமா

அரி மான் வழங்கும் சாரல் பிற மான்
தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்து ஆங்கு – பதி 12/5,6

சிங்கங்கள் நடமாடும் மலைச்சாரலில், பிற விலங்குகளின்
திரளாகக் கூடும் இனங்களைக் கொண்ட கூட்டம் நெஞ்சதிர நிற்பதைப் போல

2. குதிரை – கடுமான், கலிமான்

கடு மான் புல்லிய காடு இறந்தோரே – நற் 14/11

கடிதாகச் செல்லும் குதிரையையுடைய புல்லி என்பானது வேங்கடமலையைக் கடந்து சென்றவர்

விரி உளை கலிமான் தேரொடு வந்த – கலி 75/16

அடர்ந்த பிடரி மயிரும், மன ஊக்கமும் கொண்ட குதிரை பூட்டிய தேரோடு அவன் கூட்டி வந்த

3. முள்ளம்பன்றி – முளவு மான், எய்ம்மான்

வன் கை கானவன் வெம் சிலை வணக்கி
உளம் மிசை தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு – நற் 285/3,4

ஆற்றல் மிக்க கைகளையும் கொண்ட கானவன், தன் கடுமையான வில்லை வளைத்து,
மார்பில் செலுத்தி வீழ்த்திய ஆண் முள்ளம்பன்றியோடு

எயினர் தந்த எய்ம்மான் எறி தசை – புறம் 177/13

மறவர் எய்து கொடுவரப்பட்ட முள்ளம்பன்றியினது கடியப்பட்ட தசையினது

4. யானை – நெடும் கை வன் மான், அடுமான்

நெடும் கை வன் மான் கடும் பகை உழந்த – குறு 141/4

நீண்ட கையையுடைய யானையின் கடிய பகையினால் வருந்திய

அனையை அல்லை அடுமான் தோன்றல் – புறம் 213/8

அத்தன்மையாகிய பகைவனல்லை, பகையைக் கொல்லும் யானையினையுடைய தலைவ

5. வரையாடு – வருடை மான்

செ வரை சேக்கை வருடை மான் மறி – குறு 187/1

செம்மையான மலையில் வாழும் வரையாட்டின் குட்டி

6. புலி – வரி கிளர் வயமான்

வரி கிளர் வயமான் உரிவை தைஇய
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன் – அகம் 0/14,15

கோடுகள் அழகுடன் விளங்கும் வலிய புலியின் தோலை உடுத்த;
யாழ் (இசையின் இனிமை)வாய்ந்த நீலமணி(போன்ற) மிடற்றை உடைய அந்தணன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “மான்”

  1. சொலல்வல்லனுக்கு,
    என்னுடைய இணையதளத்திலிருந்து எடுத்து இங்கே குறிப்பிட்டு, என் பெயரையும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.
    ப.பாண்டியராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *