சொல் பொருள்

(வி) 1. விலக்கு, தடு, 2. பதிலீடு செய், 3. வேறுபடுத்து,

2. (பெ) 1. நோயின் தீயவிளைவுகளை மாற்றும் மருந்து, 2. கொல்லுதல், ஒழித்தல், 3. மறுமொழி,  4. மறுதலை, மாறுபாடான நிகர், 

சொல் பொருள் விளக்கம்

விலக்கு, தடு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

prevent, obstruct, change, alter, remedy, killing, exterminating, reply, equal rivals

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின்
கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு – திரு 81,82

கூற்றுவனை ஒத்த பிறரால் தடுத்தற்கரிய வலிமையினையும் உடைய,
காற்று எழுந்ததைப் போன்ற (ஓட்டத்தையுடைய)களிற்றில் ஏறி

மாற்று அரு மரபின் உயர் பலி கொடும்-மார் – மது 459

பதிலீடு செய்வதற்கு முடியாத முறைமையை உடைய உயர்ந்த பலிகளைக் கொடுப்பதற்கு

வச்சிய மானே மறலினை மாற்று – பரி 20/84

“வசிகரிக்கும் மானே! இவ்வாறு எதிர்த்து உரையாடுவதை மாற்றிக்கொள்,

மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய
வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும்
மாற்று ஆகின்றே தோழி ஆற்றலையே
அறிதற்கு அமையா நாடனொடு
செய்து கொண்டது ஓர் சிறு நன் நட்பே – குறு 377

மலர் போன்ற அழகிய மையுண்ட கண்களின் சிறப்புமிக்க நலம் தொலைய,
வளையல்கள் அழகிய மென்மையான தோள்களில் நெகிழ்ந்துபோனபோதும்
என் நோய்க்கு மாற்றான மருந்துஆகின்றது தோழி! உனக்குப் பொறுக்கமுடியவில்லையா?
நம்மால் அறிந்துகொள்வதற்கு முடியாத தலைவனோடு
நாம் செய்துகொண்ட ஒரு சிறிய நல்ல நட்பு

போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும்
மாற்று ஏமாற்றல் இலையே நினக்கு – பரி 4/52,53

உன்னைப் போற்றாதவரின் உயிரிடத்திலும், போற்றுவாருடைய உயிரிடத்திலும்
முறையே கொல்லுதலும் காப்பாற்றுதலும் செய்வதில்லை, உனக்கு

கடியர் தமக்கு யார் சொல்ல தக்கார் மாற்று – கலி 88/5

“கடுமையாயிருப்போர்க்கு யாரால் சொல்ல முடியும் மறுமொழி?”

மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே – புறம் 42/24

நினக்கு மறுதலையாகிய இரு வேந்தருடைய நிலத்தைக் கொள்ள நோக்கினாய்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.