Skip to content

சொல் பொருள்

(வி) 1. மயங்கு, கல, 2. மயங்கு, மனம் கலங்கு, 3. மயக்கு, மருளவை,

(பெ) 1. திருமால், 2. பெருமை, 3. கருமை, 4. மயக்கம், மருட்சி, மனத்திரிபு,

எல்லை, சந்தை, பெரிய வலை

சொல் பொருள் விளக்கம்

திருமால், பெரிய கட்டடம், கருநிறம் மயக்கம் என்னும் பொருள்கள் மால் என்பதற்கு உள்ளமை பொதுவழக்கு. மால் என்பதற்கு எல்லை என்னும் பொருள் நெல்லை மாவட்டத்தில் உண்டு. மால் என்பதற்குச் சந்தை என்னும் பொருள் விருதுநகர் வட்டார வழக்கு. பெரிய வலையைக் குறிப்பது பரதவர் வழக்கு.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

get mixed up, get baffled, be distressed, bewilder, mystify, Lord Vishnu, greatness, blackness, confusion,

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மான்ற மாலை வழங்குநர் செகீஇய
புலி பார்த்து உறையும் புல் அதர் சிறு நெறி – நற் 29/4,5

இருள் மயங்கிய மாலைப்பொழுதில் வழிச்செல்வோரைத் தாக்கிக்கொல்ல
ஆண்புலி வழியை நோக்கிக்கொண்டிருக்கும் புல்லிய வழித்தடமான சிறிய பாதையில்

கரும் கால் ஓமை காண்பு இன் பெரும் சினை
கடி உடை நனம் தலை ஈன்று இளைப்பட்ட
கொடு வாய் பேடைக்கு அல்கு_இரை தரீஇய
மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை – அகம் 3/2-5

கருத்த அடிப்பகுதியை உடைய ஓமை மரத்தின் காண்பதற்கு இனிய பெரிய கிளையில்
மிக்க பாதுகாப்பை உடைய அகன்ற இடத்தில் குஞ்சுபொரித்துக் காத்துக்கிடக்கும்
வளைந்த அலகினை உடைய (தன்)பேடைக்கு இருப்பு உணவைக் கொண்டுவர,
மனம் கலங்கி இரையை விரும்பி எழுந்த சிவந்த காதுகளை உடைய எருவைப் பருந்து,

மான்று மயங்கி; தன் பெட்டையைப் பிரிதலால் ஆண் கழுகு மயங்கி – புலவர் மாணிக்கம் உரை

ஓங்கு செலல்
கடும் பகட்டு யானை நெடுமான்_அஞ்சி
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க
தேர் வீசு இருக்கை போல
மாரி இரீஇ மான்றன்றால் மழையே – நற் 381/6-10

மிடுக்கான நடையையும்
மிகுந்த பெருமிதத்தையும் கொண்ட யானைப் படையையுடைய நெடுமான் அஞ்சி
இரக்கமுள்ள நெஞ்சத்தோடு, தனது புகழ் நெடுந்தொலைவுக்கு விளங்க
தேர்களை வாரிவழங்கும் அவனது அரசிருக்கை காண்போரை மயங்க வைப்பது போல
மேகங்கள் மழையைப் பெய்து நிலைகொண்டு என்னை மயக்குகின்றன.

நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல – முல் 1-3

சக்கரத்துடன்
வலம்புரி(ச் சங்கின்) குறிகள் பொறிக்கப்பட்ட, திருமகளை அணைத்த பெரிய கையில்
(மாவலி வார்த்த)நீர் (தன் கையில்)சென்றதாக உயர்ந்த திருமாலைப் போல,

மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – திரு 12

பெரிய மூங்கில் உயர்ந்து வளர்ந்துள்ள வானளாவிய மலையிடத்தே,

நூலோர் புகழ்ந்த மாட்சிய மால் கடல்
வளை கண்டு அன்ன வால் உளை புரவி – பெரும் 487,488

(குதிரை இலக்கண)நூல்கற்றோர் புகழ்ந்த மாண்புடையனவாய், கரிய கடலில்
சங்கைக் கண்டாற் போன்ற வெண்மையான தலையிறகுகளை உடைய குதிரைகள்

மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும்
அரக்கு விரித்து அன்ன பரேர் அம் புழகுடன்
மால் அங்கு உடையம் மலிவனம் மறுகி – குறி 95-97

கரிய பெரிய குருத்தம்பூ, வேங்கைப்பூ (ஆகிய பூக்களுடன்), பிறபூக்களையும்,
சாதிலிங்கத்தைப் பரப்பினாற் போன்ற பருத்த அழகினையுடைய மலையெருக்கம்பூவுடன்,
(எதைப்பறிப்பது என்று)குழப்பம் உள்ளவராயும், அவா மிகுந்தவராயும் (பலகாலும்)திரிந்து (பறித்து)

மால் கொள
———————— —————————————-
கொடு வாய் பேடை குடம்பை சேரிய
உயிர் செல கடைஇ புணர் துணை
பயிர்தல் ஆனா பைதல் அம் குருகே – நற் 338/6- 12

எனது காம மயக்கம் பெருகிட,
———————– ————————————–
வளைந்த வாயையுடைய தன்னுடைய பேடையைக் கூட்டுக்கு வரும்படி
உயிரே போகும்படியாக கூவிக்கொண்டு, தான் சேரும் துணையை
மீண்டும் மீண்டும் விடாது அழைக்கிறது, துயரத்தைக் கொண்ட அழகிய குருகு –

சங்க இலக்கியத்தில் மால் என்ற சொல் 54 முறை வருகிறது. அவற்றுள் மால் வரை என்ற தொடர் 26 முறை
வருகிறது என்பது உற்றுநோக்கற்குரியது.

மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – திரு 12

ஆல்கெழுகடவுள் புதல்வ மால் வரை – திரு 256

மால் வரை ஒழுகிய வாழை வாழை – சிறு 21

ஆர்வ நன் மொழி ஆயும் மால் வரை – சிறு 99

கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன – சிறு 205

மால் வரை சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும் – பெரும் 330

மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன் – பட் 138

மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே – நற் 2/10

மாயோன் அன்ன மால் வரை கவாஅன் – நற் 32/1

மால் வரை மறைய துறை புலம்பின்றே – நற் 67/2

பூவொடு துயல்வரும் மால் வரை நாடனை – நற் 225/5

மை படு மால் வரை பாடினள் கொடிச்சி – நற் 373/3

மால் வரை இழிதரும் தூ வெள் அருவி – குறு 95/1

நோ_தக்கன்றே தோழி மால் வரை – குறு 263/6

மணி நிற மால் வரை மறை-தொறு இவள் – ஐங் 208/4

மால் வரை நாட வரைந்தனை கொண்மோ – ஐங் 289/4

தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை – பரி 1/9

குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து – பரி 5/9

எதிரெதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து – கலி 44/2

மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ – கலி 45/9

மால் வரை சீறூர் மருள் பல் மாக்கள் – அகம் 171/8

நீ வந்து அளிக்குவை எனினே மால் வரை – அகம் 192/9

மணம் கமழ் மால் வரை வரைந்தனர் எமரே – புறம் 151/12

மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து – புறம் 200/4

பொன் படு மால் வரை கிழவ வென் வேல் – புறம் 201/18

மன்ற பலவின் மால் வரை பொருந்தி என் – புறம் 374/5

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *