Skip to content

சொல் பொருள்

(வி) 1. ஒலி, கத்து, பாடு, இசை

சொல் பொருள் விளக்கம்

ஒலி, கத்து, பாடு, இசை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

sound, cry, sing

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஆண்புறா தன் துணையைச் சேர்ந்துகொள்ள அழைக்கும் ஒலி.

வண்ண புறவின் செம் கால் சேவல்
வீழ் துணை பயிரும் கையறு முரல் குரல் – நற் 71/8,9

அழகிய புறாவின் சிவந்த கால்களையுடைய ஆண்புறா
தான் விரும்பும் தன் துணையைச் சேர்ந்துகொள்ள அழைக்கச் செயலற்றுப்போய் ஒலிக்கும் ஓசையை

போர்க்களத்தில் ஊதும் சங்கின் ஒலி.

இடி எதிர் கழறும் கால் உறழ்பு எழுந்தவர்
கொடி அறுபு இறுபு செவி செவிடு படுபு
முடிகள் அதிர படிநிலை தளர
நனி முரல் வளை முடி அழிபு இழிபு – பரி 2/37-40

இடிக்கு எதிராய் முழங்கும் முழக்கத்தோடு, காற்றைப் போன்ற வலிமையுடன் போருக்கு எழுந்தவரின்
கொடிகள் அற்று விழவும், செவிகள் செவிடாகிப் போகவும்,
மணிமுடிகள் அதிரவும், அவர்கள் நின்ற நிலை தளர்ந்துபோகுமாறு
மிகுந்து ஒலிக்கின்ற சங்கினால், தலைகள் வலிமை அழிந்து கீழே விழுந்து

மலரைச் சுற்றிப்பறக்கும் தும்பி எழுப்பும் ஒலி. அது குழலோசையை ஒத்திருக்கும். விரைந்து செல்லும் அம்பின்
ஓசையையும் ஒத்திருக்கும்.

விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப
முரல் குரல் தும்பி அவிழ் மலர் ஊத – பரி 21/33,34

விரலால் மூடியும் திறந்தும் குழலின் காற்றுவிடும் துளையினின்றும் எழும் இசையைப் போல
இசைபாடும் குரலையுடைய தும்பி கட்டவிழ்கின்ற மலரின் மீது பாடிக்கொண்டு பறக்க

விரி இணர், தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப
பரியினது உயிர்க்கும் அம்பினர் – அகம் 291/10,11

விரிந்த பூங்கொத்துக்களில் பூந்துகளை உண்ணும் வண்டுகள் ஒலிக்கும் இசையைப் போல
விரைந்து செல்வதாய் ஒலிக்கும் அம்பினையுடையவரும்

யாழ் நரம்பினை மீட்டும் ஒலி.

ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/18,19

ஏழு நரம்பால் கூட்டி எழுப்பிய இனிய ஓசைகள், இசைப்பவர்க்கன்றி
அவை யாழினுள்ளே பிறந்தாலும் யாழுக்கு அவை தாம் என்ன செய்யும்

குழல் அகவ யாழ் முரல
முழவு அதிர முரசு இயம்ப – பட் 156,157

நரம்பின் முரலும் நயம் வரு முரற்சி
விறலியர் வறும் கை குறும் தொடி செறிப்ப – மது 217,218

(யாழ்)நரம்பைப் போல் பாடும் நயப்பாடு தோன்றும் பாட்டினையுடைய
விறலியரின் வெறுமையான கைகளில் குறிய வளைகளைச் செறித்துச்சேர்க்க

கூகையும் குராலும் எழுப்பும் ஒலி.

குடுமி கூகை குராலொடு முரல – மது 170

கொண்டையையுடைய கூகைச்சேவல் தன் பெடையோடே ஒலிஎழுப்ப

முழவுகளும், பெரும் முரசுகளும் எழுப்பும் ஒலி.

உழவர் களி தூங்க முழவு பணை முரல – பரி 7/16

உழவர்கள் மகிழ்ச்சியால் கூத்தாட, முழவுகளும், பெரும் முரசுகளும் முழங்க,

கின்னரம் என்னும் பரவைகள் எழுப்பும் ஒலி.

கின்னரம் முரலும் அணங்கு உடை சாரல் – பெரும் 494

கின்னரம் என்னும் பறவைகள் பாடும் தெய்வங்கள் உறையும் சாரலிடத்தே

கார்கால மேகங்கள் இலேசான இடியுடன் தொலைவில் எழுப்பும் ஒலி

கால மாரி மாலை மா மலை
இன் இசை உருமின முரலும் – குறு 200/5,6

கார்ப்பருவத்து மழை மாலையில் பெரிய மலையில்
இனிய ஓசையுடைய இடியுடன் முழங்கும்

பாலைப் பண்ணை யாழில் மீட்டும் ஒலி

வல்லோன் தைவரும் வள் உயிர் பாலை
நரம்பு ஆர்த்து அன்ன வண்டு_இனம் முரலும் – அகம் 355/4,5

யாழ் வல்லோன் தடவும் நரம்பு இனிய இசைகொண்ட பாலைப்பண்ணை
யாழ் நரம்புகள் ஒலித்தாலொத்த இசையுடன் வண்டின் கூட்டங்கள் ஒலிக்கும்

ஒருதிறம் பாடினி முரலும் பாலை அம் குரலின் – பரி 17/17

ஒருபக்கம் பாடினி பாடுகின்ற பாலைப் பண்ணாகிய வாய்ப் பாட்டின் கூறுபாடுகள்

விடியற்காலையில் அந்தணர் வேதம் ஓதும் ஒலி

போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கை
தாது உண் தும்பி போது முரன்று ஆங்கு
ஓதல் அந்தணர் வேதம் பாட – மது 654-656

பூக்கள் தளையவிழ்ந்த (மணம்)கமழுகின்ற நறிய பொய்கைகளில்,
தாதை உண்ணும் தும்பிகள் (அப்)பூக்களில் பாடினாற் போன்று,
ஓதுதல் (தொழிலையுடைய)அந்தணர் வேதத்தைப் பாட,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *