Skip to content
மூரல்

மூரல் என்பதன் பொருள் புன்னகை, இளநகை, புன்முறுவல்,பொலுபொலுவென்று வெந்த சோறு

1. சொல் பொருள்

(பெ) 1. புன்னகை, இளநகை,புன்முறுவல், இளமுறுவல், 2. பொலுபொலுவென்று வெந்த சோறு

2. சொல் பொருள் விளக்கம்

வீட்டுக்கதவு தட்டப்படுகிறது. திறந்து பார்த்தால் மிகவும் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர். உடனே உங்கள் முகம் மலர்கிறது.
வாயெல்லாம் பல்லாய், “வாங்க வாங்க” என்று உற்சாகத்துடன் வரவேற்கிறீர்கள். இது மலர்ந்த சிரிப்பு.

தெருவில் போகும்போது முற்றிலும் புதிய ஒருவர் உங்களைப் பார்த்துச் சிரிக்கிறார். யாரென்று தெரியாத நிலையில் பதிலுக்கு
ஒரு சிறு முறுவல்மட்டும் காட்டிவிட்டுச் செல்கிறீர்கள்.

இப்படியில்லாமல் நெடுநாள்களுக்கு முன்னர் ஓரளவே பரிச்சயம் ஆகியிருப்பவரை எதிர்பாராமல் காணும்போது உங்கள் முகம்
ஓரளவு மலர்ந்து, வாயில் பற்கள் மிகச் சிறிய அளவே தெரிய புன்னகைக்கிறீர்களே அதுதான் மூரல். இதை விருந்தின் மூரல் என்கிறது சிலம்பு.

மூரல்
மூரல்

சரியாக வேகாத அரிசிச்சோறு விதை விதையாய் இருக்கும். இது முற்றிலும் புதியவருக்குக் காட்டும் முறுவல் போன்றது.
நன்றாக வெந்து குழைந்துபோன சோறு நெருங்கிய உறவினரிடம் காட்டும் மலர்ந்த சிரிப்புப் போன்றது. மிகச் சரியான பதத்தில் வெந்து, சோறு பருக்கைபருக்கையாக ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் இருந்தால் அதுவே மூரல். இளநகை போன்று இளம்பதச் சோறு எனலாம்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

smile

properly cooked rice

மூரல்
மூரல் Photo by Loren Joseph on Unsplash

3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

உள்ளி காண்பென் போல்வல் முள் எயிற்று
அமிழ்தம் ஊறும் செம் வாய் கமழ் அகில்
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல்
பேர் அமர் மழை கண் கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே – குறு 286

நினைத்துப் பார்க்கத்தான் முடியும் போலிருக்கிறது, முள் போன்ற கூர்மையான பற்களையுடைய
அமிழ்தம் சுரக்கின்ற சிவந்த வாயையும், கமழ்கின்ற அகிலும்
சந்தனமும் மணக்கும் கருமணல் போன்ற கூந்தலையும்,
பெரிய அமர்த்த குளிர்ச்சியான கண்களையும் உடைய தலைவியின்
இளநகையோடு கூடிய செருக்கிய பார்வையை

பெரிய தன்
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி
யாரீரோ எம் விலங்கியீஇர் என
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற
சில் நிரை வால் வளை பொலிந்த
பன் மாண் பேதை ஒழிந்தது என் நெஞ்சே – அகம் 390/12-17

தனது பெரிய
அரி படர்ந்த மையுண்ட கண்ணினால் மாறுபட்டனள் போல நோக்கி
எம்மைத் தடுப்பீர் நீவிர் யாவிரோ என்று கூறி
இளநகையுடையவளாய்ச் சிறிது பெயர்ந்து நின்ற
சிலவாய நிரைந்த வெள்ளிய வளைகளாற் பொலிவுற்ற
பல மாண்புடைய பேதையின் பொருட்டு என் நெஞ்சம் தன் வலியினை இழந்துவிட்டது.

மூரல் என்ற சொல் முறுவலுக்கு அடையாக வந்துள்ளதைக் கவனிக்கவேண்டும். வாய் திறந்து சிரிப்பது சிரிப்பு.
மனம் மகிழ்ந்து முகம் மட்டும் மலர்வது முறுவல். அந்த முறுவலில் ஓரளவு வாய் திறந்து இலேசாகப் பல்
தெரிய முறுவல் காட்டுவது மூரல் முறுவல். எனவே மூரல் என்பதை இளநகை எனலாம்.

மேலே காட்டப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளின் சூழ்நிலையை உற்றுக் கவனித்தால் மூரல் முறுவல் என்பதன்
முழுப்பொருளை உணரலாம். இதனை மேலும் விளக்க இன்னொரு எடுத்துக்காட்டைக் காண்போம்.

வீட்டுக்கதவு தட்டப்படுகிறது. திறந்து பார்த்தால் மிகவும் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர். உடனே
உங்கள் முகம் மலர்கிறது. வாயெல்லாம் பல்லாய், “வாங்க வாங்க” என்று உற்சாகத்துடன் வரவேற்கிறீர்கள். இது
மலர்ந்த சிரிப்பு.

தெருவில் போகும்போது முற்றிலும் புதிய ஒருவர் உங்களைப் பார்த்துச் சிரிக்கிறார். யாரென்று தெரியாத
நிலையில் பதிலுக்கு ஒரு சிறு முறுவல்மட்டும் காட்டிவிட்டுச் செல்கிறீர்கள்.

இப்படியில்லாமல் நெடுநாள்களுக்கு முன்னர் ஓரளவே பரிச்சயம் ஆகியிருப்பவரை எதிர்பாராமல்
காணும்போது உங்கள் முகம் ஓரளவு மலர்ந்து, வாயில் பற்கள் மிகச் சிறிய அளவே தெரிய புன்னகைக்கிறீர்களே
அதுதான் மூரல்.

இதை விருந்தின் மூரல் என்கிறது சிலம்பு.

திருந்து எயிறு அரும்பிய விருந்தின் மூரலும் – வஞ்சி 28/24

என்கிறது சிலப்பதிகாரம். இதற்கு, திருந்திய பற்கள் சிறிது தோன்றிய புதிய நகையினையும் என்று உரை
கூறுவார் வே.நாட்டார்.

இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன
பசும் தினை மூரல் பாலொடும் பெறுகுவிர் – பெரும் 167,168

பெரிய சுற்றமாகிய நண்டின் (கருவிலுள்ள)சிறிய பார்ப்பை ஒத்த
பசிய தினையரிசியிலான சிலுத்த சோற்றைப் பாலோடும் பெறுவீர்

நெடும் குரல் பூளை பூவின் அன்ன
குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி
புகர் இணர் வேங்கை வீ கண்டு அன்ன
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வுற்று
இன் சுவை மூரல் பெறுகுவிர் – பெரும் 192-196

நெடிய கொத்தினையுடைய சிறு பூளையின் பூவை ஒத்த
குறிய தாளினையுடைய வரகின் சிறிய பருக்கைகளாகிய சோற்றை,
புள்ளிபுள்ளியாகத் தெரியும் கொத்தினையுடைய வேங்கைப் பூவைக் கண்டாற் போன்ற
அவரை விதையை வேகவைத்துக் கடைந்து வரகரிசிச் சோற்றில் ஊற்றிப் பிசைந்து உண்டிருக்கிறார்கள். நன்றாக மலர வெந்த
வரகரிசிச்சோறு ‘பொலபொல’-வென்று இருக்கும். அதுவே அவிழ் சொன்றி. பருப்பை வேகவைத்துக் கடைந்தாலும் அது குருணைப் பதத்தில்தான் இருக்கும். ‘குக்கரில்’ வைத்த துவரம்பருப்பு போல் குழைய இருக்காது. இந்தக் குருணைப்பதப் பருப்புக் கடைசலை, குருணைபோன்ற வரகரிசிச் சோற்றில் பிசையக் கிடைப்பதே இன்சுவை மூரல்.

மூரல்
மூரல்

உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு – அகம் 60/4

உப்பைவிற்றுக்கொண்ட நெல்லினின்றும் ஆக்கிய பதமான வெண்சோற்றில்

இளநகை என்பதனைக் குறிக்கும் மூரல், எப்படி உணவுக்கானது?

நன்றாக வெந்து குழைந்துபோன சோறு நெருங்கிய உறவினரிடம் காட்டும் மலர்ந்த சிரிப்புப் போன்றது. சரியாக
வேகாத அரிசிச்சோறு விதை விதையாய் இருக்கும். இது முற்றிலும் புதியவருக்குக் காட்டும் முறுவல் போன்றது.
மிகச் சரியான பதத்தில் வெந்து, சோறு பருக்கைபருக்கையாக ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் இருந்தால்
அதுவே மூரல். இளநகை போன்று இளம்பதச் சோறு எனலாம்.

உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு – அகம் 60/4

என்று அகநானூறு கூறுவதைக் கவனியுங்கள். மூரல் முறுவல் என்பது போல, இங்கு மூரல் முறுவல்
என்று வந்திருப்பதைக் கவனிக்கவேண்டும்.

பெரும்பாணாற்றுப்படை (பெரும் 192 – 196) இதனை மேலும் விளக்கமாய் உரைக்கிறது.
அவரை விதையை வேகவைத்துக் கடைந்து வரகரிசிச் சோற்றில் ஊற்றிப் பிசைந்து உண்டிருக்கிறார்கள்.
நன்றாக மலர வெந்த வரகரிசிச்சோறு ‘பொலபொல’-வென்று இருக்கும். அதுவே அவிழ் சொன்றி. பருப்பை
வேகவைத்துக் கடைந்தாலும் அது குருணைப் பதத்தில்தான் இருக்கும். ‘குக்கரில்’ வைத்த துவரம்பருப்பு போல்
குழைய இருக்காது. இந்தக் குருணைப்பதப் பருப்புக் கடைசலை, குருணை போன்ற வரகரிசிச் சோற்றில் பிசையக்
கிடைப்பதே இன்சுவை மூரல்.

விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப – சிலப்.மது 12/53

விருந்தின் மூரல் அரும்பியதூஉம் – மணி 18/73

புன்முறுவல்
மூரல் Photo by freestocks on Unsplash

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *