Skip to content

சொல் பொருள்

1. (வி) வகிர்,

2. (பெ) 1. ரகம், விதம், 2. வகுக்கப்பட்டது, 3. முறை, வழி,  4. மனையின் பகுப்பு,  5. பிரிவு, கூறுபாடு, 6. இயல்பு, தன்மை,  7. உடல் உறுப்பு, 8. வகுத்துக்கூறல், 9. அழகு,

சொல் பொருள் விளக்கம்

(வி) வகிர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

cut, variety. that which is designed, manner, method, apartments of a house, division, section, nature, quality, limb, categorising, beauty

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வாளை ஈர்ம் தடி வல்லிதின் வகைஇ – நற் 120/5

வாளை மீனின் ஈரமான நீண்ட துண்டை சிரமப்பட்டு நறுக்கி

பிடகை பெய்த கமழ் நறும் பூவினர்
பல வகை விரித்த எதிர் பூ கோதையர் – மது 397,398

கூடைகளில் இட்டுவைத்த கமழ்கின்ற நறிய பூவினையுடையவரும்,
பல ரகங்களாக விரித்துவைத்த ஒன்றற்கொன்று மாறுபட்ட பூமாலையுடையவரும்,

சிறு கோல் இணர பெரும் தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகைபெற வாரி – நற் 140/2,3

சிறிய கிளைகளிலே பூங்கொத்துக்களையுடைய பெரிய குளிர்ச்சி பொருந்திய சந்தனமரத்தின் கட்டையோடு
பலவித பொருள்களையும் சேர்த்து அமைக்கப்பெற்ற சாந்தம்பூசிய கூந்தலை அழகுபெற வாரி

முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை – நற் 314/1,2

வயது முதிர்ந்தோர் தம் இளமையை எவ்வளவு வருந்தியும் மீண்டும் பெறமாட்டார்கள்;
வாழ்நாளின் வகுக்கப்பட்ட அளவு இன்னது என்று அறிபவரும் இங்கு இல்லை;

நகை அமர் காதலரை நாள்_அணி கூட்டும்
வகை சாலும் வையை வரவு – பரி 6/12,13

மகிழ்ச்சி பொருந்திய தம் காதலரை நீர் விளையாட்டுக்குரிய நாளணிகளை அணியச்செய்விக்கும்
முறையில் மிகுந்துநிற்கிறது வையையில் நீர் வரவு;

வகை மாண் நல் இல் – புறம் 398/2

மனையின் பகுப்புகளில் மாண்புற்ற நல்ல பெரிய மனை

சாந்து உளர் வணர் குரல் வாரி வகை வகுத்து – அகம் 117/10

மயிர்ச்சாந்து பூசிய வளைந்த கொத்தாகிய கூந்தலை வாரி பிரிவுகளாக வகைப்படுத்தி

ஆய்நலம் தொலைந்த மேனியும் மா மலர்
தகை வனப்பு இழந்த கண்ணும் வகை இல
வண்ணம் வாடிய வரியும் – அகம் 69/1-3

ஆராயும் அழகு தொலைந்த மேனியினையும், கரிய மலரின்
சிறந்த அழகினை இழந்த கண்ணினையும், முன்னை இயல்பு இலவாய்
அழகு வாடின திதலையும்

வகை எழில் வனப்பு எஞ்ச வரை போக வலித்து நீ
பகை அறு பய வினை முயறிமன் – கலி 17/13,14

இவளது உறுப்பழகும் தோற்றப்பொலிவும் கெடும்படி மலையிடைப் போக நீ துணிந்து
பகை நீங்குவதற்குக் காரணமான பயனைத் தரும் பிரிவினை நீ மிகவும் முயல்வாய்

தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக – கலி 39/48

அழகு மிகும் தொகுத்துக் கூறல் வகுத்துக் கூறல் ஆகியவற்றை அறியும் சான்றோர் தனக்குச் சுற்றமாக விளங்க,

வல்லை நீ துறப்பாயேல் வகை வாடும் இவள் என – கலி 3/10

விரைவில் இவளை நீ பிரிந்துசென்றால், இவளின் அழகிய உறுப்புகள் களையிழந்துபோகும் என்று
– வகை – அழகு – இராசமாணிக்கனார் உரை விளக்கம்.
நீ விரைவாகப் பிரிந்தால் இவள் தன் அழகை இழப்பாள் என்று
– ச.வே.சு.உரை

அவை புகழ் அரங்கின் மேல் ஆடுவாள் அணி நுதல்
வகை பெற செரீஇய வயந்தகம் போல் தோன்றும் – கலி 79/4,5

பலரும் பாராட்ட அரங்கில் நடனமிடும் பெண்ணின் தலையின் முன்புறத்தில்
அழகாகச் செருகி வைத்த வைந்தகம் என்ற அணிகலத்தைப் போலத் தோன்றுகிறது
– ச.வே.சு.உரைஃ

வகை என்பதற்கு அழகு என்ற பொருள் எந்த ஓர் அகராதியிலும் இல்லை. ஆனால் இராசமாணிக்கனார் அவர்களும்,
ச.வே.சு அவர்களும் மேலே குறிப்பிட்ட இந்த இரு இடங்களில்வரும் வகை என்ற சொல்லுக்கு அழகு என்றே
பொருள்கொள்கின்றனர்.

இன்றைய பேச்சுவழக்கிலும் இந்தப் பொருள் அமைந்துவருவதைக் காணலாம். ஒரு தச்சர் சிறந்த வேலைப்பாடு உள்ள பல கட்டில்கள் செய்கிறார். அவற்றுள் மிகவும் அமைப்பாக வந்துள்ள கட்டிலைக் காட்டி, “இது ஒண்ணுதான் வகையா அமஞ்சிருக்கு” என்பார். இந்த இடத்தில் வகை என்பதற்கு அழகு, சிறப்பு ஆகிய பொருள்களைக் காணலாம். செப்புச் செம்புகள் வார்க்கும்போது அவற்றில் நூற்றில் ஒன்றுதான் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும். அதனை வகையாக அமைந்த செம்பு என்பார்கள்.

புடை அமை பொலிந்த வகை அமை செப்பில் – மது 421

என்றவிடத்தில் இந்தப்பொருளே பொருந்திவருவதைக் காணலாம்.
இதுபோல் வரும் பல இடங்களில் இப்பொருள் ஒத்துவருவதைக் காணலாம்.

நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை – திரு 86
வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து – சிறு 224
கவவொடு பிடித்த வகை அமை மோதகம் – மது 626
வார் அணி கொம்மை வகை அமை மேகலை – பரி 22/30
வகை அமை தண் தாரான் கோடு உயர் பொருப்பின் மேல் – கலி 57/16
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய – அகம் 64/3
வகை அமை பொலிந்த வனப்பு அமை தெரியல் – அகம் 76/8
வயங்கு மணி பொருத வகை அமை வனப்பின் – அகம் 167/1

இங்கெல்லாம் வகை என்பதற்கு அழகு, சிறப்பு என்ற பொருள் மிகவும் பொருந்திவருவதைக் காணலாம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *