வட்டம் என்பது ஒரு வகை வடிவம், அப்பம், ஆப்பம், இடியாப்பம்
1. சொல் பொருள்
(பெ) 1. ஒரு வகை வடிவம், கோளம், உருண்டை, 2. மாவட்ட வருவாய்த் துறையின் ஒரு நிருவாகப் பிரிவு, வருவாய் வட்டம் 3. குழு(வாசகர் வட்டம்) , 4. உருள் வடிவம், 5. பாராவளை, சுழல்படை, திருமாலின் ஐந்து படைகளில் ஒன்று, 6. அப்பம், ஆப்பம் 7. சந்தனம் தேய்த்து அரைப்பதற்கான வட்டமான கல், 8. ஆலவட்டம் என்னும் கைவிசிறி, 9. பீச்சாங்குழல், 10. கேடயம்,
வட்டம் என்பது வட்டப் பொருள் தருதல் பொது வழக்கு.
தோசைப் பொருளில் வழங்குதல் கண்டமனூர் வட்டார வழக்காகும்
வட்டம் என்பது வட்டை என்னும் பொருளில் கருவூர் வட்டார வழக்காக உள்ளது
2. சொல் பொருள் விளக்கம்
வட்டம் என்பது வட்டப் பொருள் தருதல் பொது வழக்கு. அது வட்ட வடிவுடைய தோசைப் பொருளில் வழங்குதல் கண்டமனூர் வட்டார வழக்காகும். வடிவு நோக்கிய பெயர் அது. வட்டம் என்பது வட்டை என்னும் பொருளில் கருவூர் வட்டார வழக்காக உள்ளது.
பெரும்பாணாற்றுப்படையில் வட்டம் என்பது ஒரு தின்பண்டம் எனக் காண்கிறோம்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
globe, circle, round, region, taluk, boomerang, a kind of pastry, a round stone to grind sandal wood paste, circular ornamental hand fan, a kind of water-squirt, shield
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
அத்த நெல்லி தீம் சுவை திரள் காய்
வட்ட கழங்கின் தாஅய் துய் தலை
செம் முக மந்தி ஆடும் – அகம் 241/13-15
பாலை வழியிலுள்ள நெல்லி மரத்தின் இனிய சுவையுடைய காய்கள் என்னும்
வட்டமான கழங்குகளைக் கொண்டு பஞ்சைப் போன்ற தலையையும்
சிவந்த முகத்தையும் உடைய மந்திகள் விளையாடும்
வட்ட வரிய செம் பொறி சேவல் – புறம் 28/8
வட்டமாகிய வரியை உடைத்தாகிய செம் பொறியை உடைய காட்டுக்கோழிச் சேவல்
வரி சிலை வய அம்பினவை
புகர் இணர் சூழ் வட்டத்தவை புகர் வாளவை – பரி 15/60,61
வரிந்த வில்லுடன் வெற்றி மிக்க அம்புகளையும் கொண்டிருக்கிறாய்;
புள்ளிகள் நெருக்கமாய்ச் சூழ்ந்திருக்கும் சுழல்வட்டத்தையும், புள்ளிகளுடைய வாளினையும் வைத்திருக்கிறாய்
பாசிலை குருகின் புன் புற வரி பூ
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்
நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப – பெரும் 376-379
பசிய இலையினையும் உடைய குருக்கத்தியின் புற்கென்ற புறத்தினையும் வரிகளையும் உடைய பூக்கள்,
கரிய வட்டிலில் அப்ப வாணிகர் பாகுடன் பிடித்த
நூல் போலச் சூழ்ந்துகிடக்கின்ற அப்பம் பாலிலே கிடந்தவை போல்,
நிழல் கிடந்த வார்ந்த மணலிடத்துக் குழிகளில் நின்ற நீரிடத்தே மிக விழும்படி
கூவியர் என்போர் அப்ப வாணிகர். மணற்பரப்பில் உள்ள குழியில் நீரில் உதிர்ந்து கிடக்கும் குருக்கத்தி மலரைப் போலப் பாலில்
போடப்பட்ட வட்டம் மிதந்துகொண்டிருக்கிறதாம். எனவே இங்கே வட்டம் என்பது வட்டவடிவிலான அப்பத்தைக் குறிக்கிறது.
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப – நெடு 51,52
வடநாட்டவர் கொண்டுவந்த வெண்மை நிற வட்டக்கல்
தென் நாட்டு ஓரத்து(பொதிகை மலை) சந்தனத்துடன் (பயன்படாமல்)கிடப்ப
கை வல் கம்மியன் கவின் பெற புனைந்த
செம் கேழ் வட்டம் சுருக்கி கொடும் தறி
சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க – நெடு 57-59
கை(வேலைப்பாட்டில்) சிறந்த கைவினைக்கலைஞன் அழகுபெறச் செய்த
சிவந்த நிறத்தையுடைய விசிறி (மூடிச்)சுருக்கிடப்பட்டு, வளைந்த முளைக்கோலில்,
சிலந்தியின் வெள்ளிய நூலால் சூழப்பட்டனவாய் தொங்கிக்கொண்டிருக்க;
மீ நீர் நிவந்த விறல்_இழை கேள்வனை
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என
பூ நீர் பெய் வட்டம் எறிய – பரி 21/40-42
நீர் மேல் எழுந்த மிகச் சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணொருத்தி, கரையில் நிற்கும் தன் கணவனை
ஒரு மூங்கிற்கழியைப் புணையாக நீரில் மூழ்கும் தன் கையில் எட்டுமாறு கொடுக்க என்று வேண்ட,
அவன் மணமுள்ள சாயநீர் நிரப்பிய பீச்சாங்குழலை எறிய,
ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை – திரு 111
அழகிய பெரிய கேடகத்தோடு வேற்படையையும் வலமாகச் சுற்றிநிற்ப; ஒரு கை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்