Skip to content

சொல் பொருள்

(பெ) 1. ஊதுகொம்பு, எக்காளம், 2. மூங்கில்,

சொல் பொருள் விளக்கம்

ஊதுகொம்பு, எக்காளம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

trumpet, bugle, bamboo

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

1.1. இது சங்குடன் சேர்ந்து முழங்கப்படும்.

வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல – திரு 120

கொம்பு மிக்கு ஒலிப்பவும், வெள்ளிய சங்கு முழங்கவும்,

வளை நரல வயிர் ஆர்ப்ப – மது 185

சங்கம் முழங்க, கொம்புகள் ஒலிக்க,

இது மயில் அகவும் ஓசையைப் போன்றது

கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை – நெடு 99

செருக்கின மயில் ஆரவாரிக்கும், ஊது கொம்பின் ஓசையோ என்று எண்ணத்தோன்றும் இனிய ஓசை

ஆண் அன்றில் பறவை, தன் பேடையை அழைக்கும் ஓசையைப் போன்றது.

ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில்
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ – குறி 219,220

ஊதுகின்ற கொம்பு(போன்ற) ஓசையையுடைய வளைந்த வாயையுடைய அன்றில் பறவை
உயர்ந்த பெரிய பனையின்கண் உள்ள உள்மடலில் (இருந்து தம் பெடையை)அழைக்க

வெருண்டு பறக்கும் நாரை எழுப்பும் ஓசையைப் போன்றது.

வெண்ணெல் அரிநர் பின்றை ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடம் தாள் நாரை
செறி மடை வயிரின் பிளிற்றி பெண்ணை
அக மடல் சேக்கும் – அகம் 40/13-16

வெண்ணெல்லை அரிவோரின் பின்னே நிறைந்து ஒலிக்கும்
தண்ணுமைப் பறையின் ஓசைக்கு அஞ்சிய நீண்ட கால்களையுடைய நாரை
செறிந்த மூட்டுவாயினை உடைய கொம்புவாத்தியம் போல் பிளிற்றிப் பனைமரத்தின்
அகமடலில் தங்கும் கடல்துறையில் வாழும்

இதனை ஊதிப்பார்க்க, முதலில் காற்றால் ஊதி எழுப்பும் ஒலி, கிளிகள் கீ கீ எனக் கத்துவதைப் போல் இருக்கும்.

வாரல் மென் தினை புலர்வு குரல் மாந்தி
சாரல் வரைய கிளை உடன் குழீஇ
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும் – நற் 304/1-3

நீண்ட மெல்லிய தினையின் புலர்ந்த கதிரினை நிறையத் தின்று
சரிவுள்ள மலையில் இருக்கும் தன் இனத்தோடே சேர்ந்து கூடி,
காற்று புகுந்து செல்வதால் ஒலிக்கும் வயிர் என்ற ஊதுகொம்பைப் போல கிளிகள் ஒலிசெய்யும்

இந்தக் கொம்பில் ஒளிவிடும் மணிகள் பதிக்கப்பெற்றிருக்கும்.

வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப – பதி 67/6

ஒளிர்கின்ற கதிர்களையுடைய மணிகள் பதித்த கொம்புகளுடன், வலம்புரிச் சங்குகளும் முழங்க

போருக்குச் செல்லும் முன் கொம்புகள் ஊதப்படும்.

கொல் படை தெரிய வெல் கொடி நுடங்க
வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப – பதி 67/5,6

வீரர்கள் கொல்லுகின்ற படைக்கலன்களைத் தெரிவுசெய்ய, வெற்றிக்கொடி அசைந்தாட,
ஒளிர்கின்ற கதிர்களையுடைய மணிகள் பதித்த கொம்புகளுடன், வலம்புரிச் சங்குகளும் முழங்க

போரில் வெற்றிபெற்றுத் திரும்பும்போது கொம்புகள் ஊதப்படும்.

வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெரும் தானையொடு
விசயம் வெல் கொடி உயரி வலன் ஏர்பு
வயிரும் வளையும் ஆர்ப்ப – முல் 90-92

(தான்)விரும்பும் நிலங்களைக் கைக்கொண்ட, திரளுகின்ற பெரிய படையோடே,
வெற்றியால், வென்றெடுக்கின்ற கொடியை உயர்த்தி, வலப்பக்கம் உயர்த்தி
கொம்பும் சங்கும் முழங்க

முளி வயிர் பிறந்த வளி வளர் கூர் எரி
சுடர் விடு நெடும் கொடி விடர் முகை முழங்கும்- ஐங் 395/1,2

காய்ந்துபோன மூங்கிலில் உற்பத்தியாகி, காற்றால் வளர்க்கப்பட்ட கூர்மையான கொழுந்துகளையுடைய நெருப்பின்
ஒளிவிடும் நீண்ட கொடியானது மலைப் பிளவுகளின் பொந்துகளில் முழக்கமிடும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *