Skip to content

சொல் பொருள்

(பெ) வலமாகச் சுற்றுதல்களையுடைய சங்கு,

சொல் பொருள் விளக்கம்

வலமாகச் சுற்றுதல்களையுடைய சங்கு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

conch with clockwise whorls

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வலம்புரி புரையும் வால் நரை முடியினர் – திரு 127

வலம்புரிச்சங்கினை ஒத்த வெண்மையான நரைமுடியினை உடையவரும்,

இந்த வலம்புரிச் சங்கினைப் போர்க்காலத்தில் கொம்பு வாத்தியத்துடன் முழக்குவர்.

கறங்கு இசை வயிரொடு வலம்புரி ஆர்ப்ப – பதி 92/10

வயிர் என்பது கொம்பு வாத்தியம்.

இந்த வலம்புரிச் சங்கின் வடிவத்தில் தலையில் அணிகலன் அணிவர்
A head-ornament, shaped like valampuri-c-caṅku
அது தலைக்கோலம் எனப்படும்.

தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 23,24

தெய்வவுத்தி, வலம்புரி ஆகிய தலைக்கோலங்களை அதனதன் இடத்தில் வைத்து,
திலகம் இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில்

திருமாலின் உள்ளங்கையில் இந்தச் சங்கு வடிவில் இரேகை இருக்கும்.
Lines in the palm of the hand resembling valampuri-c-caṅku, considered auspicious

நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை – முல் 1,2

சக்கரத்துடன்
வலம்புரி(ச் சங்கின்) குறிகள் பொறிக்கப்பட்ட, திருமகளை அணைத்த பெரிய கையில்

இந்த வலம்புரிச் சங்கு மிகவும் புனிதமானது என்ற கருத்து பண்டைய காலத்தும் உண்டு.

இலங்கு நீர் பரப்பின் வளை மீக்கூறும்
வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் – பெரும் 34,35

விளங்குகின்ற நீரையுடைய கடலிடத்துப் பிறந்த சங்குகளில் மேலாகக்கூறப்படும்
வலம்புரி(ச் சங்கை) ஒத்த, குற்றம் தீர்ந்த தலைமையினையும்,

மிகவும் விலையுயர்ந்த இந்த வலம்புரிச் சங்கினை அறுத்துச் செய்யப்பட்ட வளையல்களை அரசியர் அணிந்திருப்பர்.

வலம்புரி வளையொடு கடிகை_நூல் யாத்து – நெடு 142

வலம்புரிச் சங்கு வளையல்களோடு காப்புக்கயிறைக் கட்டி

சங்கின் ஒரு பக்கம் கூர்மையான முகப்பையும், மறுபக்கம் திறந்த வாயினையும் கொண்டிருக்கும். அந்தக்
கூர்மையான முகப்பின் நுனியிலிருந்து ஆரம்பித்து, ஒரு கோடு வட்டமாக வளைந்தவாறே அதன் மையப்
பகுதியை நோக்கிச் செல்லும். இந்தக் கோடு எந்தப் பக்கம் வளைந்து செல்கிறது என்பதைப் பொருத்து அந்தச்
சங்கு தன் பெயரைப் பெறும். மிகப் பெரும்பாலான சங்குகளில் இந்தக் கோடு இடப்பக்கமாக (anti-clockwise)
வளைந்து செல்லும். மிகவும் அரிதாக, இந்தக் கோடு சில சங்குகளில் வலப்பக்கமாக (clockwise) வளைந்து
செல்லும். இதுவே வலம்புரிச் சங்கு. புரி என்றால் முறுக்கு என்று பொருள். வலப்பக்கமாக புரியைக் கொண்டது
வலம்புரி. இந்தச் சங்கின் முகப்பில் ஒரு சிறு துளையிட்டு, அதில் வாய்வைத்து ஊதுவார்கள். காற்று மறுபக்கம்
உள்ள திறப்பின் வழியாக வெளிவந்து உரத்த ஒலியை எழுப்பும். வலம்புரிச் சங்கிற்கு இந்தத் திறப்பு வலப்பக்கமாக இருக்கும். எனவே இதில் வலதுகையின் விரல்களை நுழைத்துக்கொண்டு பிடிப்பதற்கு எளிதாக இருக்கும். படத்தில் கிருஷ்ணர் சங்கு ஊதுவதைப் பாருங்கள். அவர் கையில் இருப்பது வலம்புரிச் சங்கு. ஆனால், மேல்நாட்டார் இதனை வேறுவிதமாகக் கூறுகிறார்கள். இந்தச் சங்கில் வளைவு இருக்கும் முகப்பை மேல் நோக்கி நிறுத்தினால், சங்கின் திறந்த வாய் நமக்கு இடப்பக்கமாக இருந்தால் அதுவே நமது வலம்புரிச் சங்கு. ஆனால் இதனை மேல்நாட்டார் இடப்பக்க (left handed) சங்கு என்கிறார்கள். இதனை அவர்கள் sinistral conch என்பார்கள். sinister என்றால் லத்தீன் மொழியில் இடது என்று பொருள். சாதாரணமான சங்கு நமக்கு இடம்புரியாக இருக்கும். இதனுடைய முகப்புப் பகுதியை மேல்நோக்கி வைத்தால், இதன் வாய்த் திறப்பு நமக்கு வலப்பக்கம் இருக்கும். எனவே இதனை அவர்கள் வலப்பக்க (right-handed) சங்கு என்பார்கள். இதனை அவர்கள் dextral conch என்பார்கள். dexter என்றால் லத்தீன் மொழியில் வலது என்று பொருள். இந்தப் பெயர்க் குழப்பத்திற்குக் காரணம், மேல்நாட்டர் மேல்நோக்கி வைத்துப்பார்க்கும் முகப்பினை நாம் கீழ் நோக்கி வைத்து நம் வாயில் வைக்கிறோம்.

The Very Rare Sinistral (“Left-Handed”) Opening Shell (நமது வலம்புரிச் சங்கு)

and the Normal Dextral (“Right-Handed”) Opening Shell (சாதாரண – இடம்புரிச் சங்கு).

This Right or Left “Handed” Direction is Determined when the Spire is Held Upwards.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *