Skip to content

வலியுறுத்து

சொல் பொருள்

(வி) 1. பலப்படுத்து,  2. கருமியாக இரு, 3. வற்புறுத்திக்கூறு,  4. உறுதியளி,

சொல் பொருள் விளக்கம்

பலப்படுத்து,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

strengthen, be stingy, emphasise, affirm

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பெரும் கடல் நீந்திய மரம் வலியுறுக்கும்
பண்ணிய விலைஞர் போல புண் ஒரீஇ – பதி 76/4,5

பெரிய கடலில் சென்றுவந்த மரக்கலத்தினைப் பழுதுநீக்கி மீண்டும் வலிமைப்படுத்தும்
பொருள்கள் விற்கும் கடல்வாணிகர் போலப் போரில் ஏற்பட்ட புண்களை ஆற்றி,

வளன் வலியுறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லாகியரோ – புறம் 190/4,5

தம்முடைய செல்வத்தை நுகராது இறுகப்பிடிக்கும் உள்ளமிகுதி இல்லாருடன்
பொருந்திய நட்பு இல்லையாகுக

வினை வலியுறூஉம் நெஞ்சமொடு – அகம் 197/17

பொருளீட்டும் வினையை வற்புறுத்தும் நெஞ்சத்தால்

ஒல்கு இயல் அரிவை நின்னொடு செல்கம்
சில் நாள் ஆன்றனை ஆகு என பல் நாள்
உலைவு இல் உள்ளமொடு வினை வலியுறீஇ
எல்லாம் பெரும்பிறிதாக ———–
———– ————— —————- —-
ஒழிய சென்றோர் மன்ற – அகம் 325/13-21

தளரும் இயலினையுடைய அரிவையே! பின் உன்னுடன் செல்வேன்
சில நாள் பொறுத்திரு என்று, பலகாலம்
தளர்தல் இல்லாத ஊக்கத்துடன் தன் கூட்டிச்சென்று மணம் முடிக்கும் செயலை வற்புறுத்துரைத்து
அவை எல்லாம் அழிந்துபோக ————
————————— ———————-
நாம் இங்கே இருக்க, சென்றுவிட்டார்

மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப – அகம் 373/7

திண்மையையுடைய நம் உள்ளம் மீண்டும் செல்லுதலை வற்புறுத்த

கோடு வாய் கூடா பிறையை பிறிது ஒன்று
நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டு ஆங்கே
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய
காணான் திரிதரும்-கொல்லோ மணி மிடற்று
மாண் மலர் கொன்றையவன்
தெள்ளியேம் என்று உரைத்து தேராது ஒரு நிலையே
வள்ளியை ஆக என நெஞ்சை வலியுறீஇ
உள்ளி வருகுவர்-கொல்லோ வளைந்து யான்
எள்ளி இருக்குவேன்-மன்-கொலோ – கலி 142/24-32

சிற்றில் விளையாடி, தலைவர் வருவாரா என்று காண மணலில் வட்டங்கள் இட்டேன், அதில் முனைகள் கூடாமல்
பிறை தோன்றிற்று, எனவே, தலைவர் வாரார் என அறிந்து, அந்தப் பிறைநிலவை
என் ஆடையால் மூடி மறைத்துவிட்டேன், ஆனால் தலையில் சூடுவதற்காகக்
காணாமல் அலைவான் அல்லவா, மணி நிறத்தைக் கழுத்தினில் கொண்ட
மாண்பு மிக்க மலரான கொன்றையைச் சூடிய சிவபெருமான் என்று எண்ணி,
நாம் தெளிந்த அறிவுடையோம் என்று சொல்லிக்கொண்டு, ஆராய்ந்து பாராமல், அதை நிலைநாட்டும் வகையில்
அப் பிறையைச் சிவனுக்கே அளித்து, வள்ளல் என்ற பெயரைப் பெறுவாயாக என்று நெஞ்சிற்கு உறுதியளித்துவிட்டு,
காதலர் நம்மை நினைத்து வருவாரோ?, வருந்தி நான்
இவரை இகழ்ந்திருப்பேனோ? என்று எண்ணியபடி இருக்க,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.