Skip to content
வாட்டு

வாட்டு என்பது நெருப்பில் வாட்டிப் பொரித்தது

1. சொல் பொருள்

  1. (வி) 1. வாடிப்போகச்செய், 2. வருத்து, 3. தொலை, அழி,

2. (பெ) நெருப்பில் வாட்டிப் பொரித்தது

2. சொல் பொருள் விளக்கம்

ஒரு பொருளை நேரே நெருப்பில் சுட்டால் அதனை வாட்டுதல் என்போம். எனினும் சட்டியிலிட்டு அதனை வதக்கினால் அதுவும் வாட்டுதலே. எனவே வாடவைத்தல் என்ற பொருளில், வாட்டு என்பதற்கு வதக்கு (roast) என்று பொருள்கொள்கிறோம். இன்றைக்கு அதனைப் பொரியல் என்று சொல்கிறோம்.

கோழியைக் கொன்று அதன் இறகுகளை நீக்கிய பின்னர்,மேல் தோலில் ஒட்டிக்கொண்டிருக்கும் குறுஞ்சிறகுகளையும் நீக்க, அதனைத் தீயில் வாட்டுவர். அதன்மீது தேவையான பொருள்களை அரைத்துப்பூசி, மீண்டும் தீயில் வாட்டி உண்பர். அல்லது துண்டங்களாக நறுக்கி, அடுப்பிலிட்டு வதக்கி உண்பர். இவை எல்லாமே கோழியின் வாட்டுதான்.

வாட்டு
வாட்டு

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

cause to wither, vex, afflict, torment, cause to perish, roasted meat or vegetables

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

என்
ஒலி பல் கூந்தல் நலம் பெற புனைந்த
முகை அவிழ் கோதை வாட்டிய
பகைவன்-மன் யான் மறந்து அமைகலனே – நற் 260/7-10

என்னுடைய
தழைத்த பலவான கூந்தல் அழகுபெற அலங்கரித்த
மொட்டுக்கள் மலர்ந்த பூமாலையை வாடும்படி செய்த
பகைவனல்லவா நீ? நான் மறக்கமாட்டேன்!

நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள்
பல் இதழ் மலர் உண்கண் பனி மல்க காணும்_கால்
சுரந்த வான் பொழிந்து அற்றா சூழ நின்று யாவர்க்கும்
இரந்தது நசை வாட்டாய் என்பது கெடாதோ தான் – கலி 100/11-14

அன்புகொண்டு, பிரியமாட்டேன் என்று நீ உறுதியாகக் கூறிய சொல்லை ஆசையுடன் நம்பியிருந்தவளின்
பல இதழ்களையுடைய மலர் போன்ற மைதீட்டிய கண்களில் நீர் நிறைய அவளைக் காணும்போது;
பெருகி நிறைந்த மேகம் மழையைப் பொழிந்தது போல் உன்னைச் சூழவந்து நின்ற யாவர்க்கும்
அவர் வேண்டிக் கேட்கும் விருப்பத்தை வாடிப்போகச் செய்யமாட்டாய் என்ற பெயர் கெட்டுவிடாதோ

வாட்டு
வாட்டு

விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர்
மை படு திண் தோள் மலிர வாட்டி
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய
திருந்து வாள்வயவர் அரும் தலை துமித்த – அகம் 89/10-13

கொழுப்பினையுடைய ஊனைத் தின்ற விசைகொண்ட சிலையினராய மறவர்கள்
கருமை பொருந்திய வலிய தோள்கள் பூரிக்க, வருத்தி
பாரம் மிக்க கழுதைகளின் நீண்ட நிரைகளைப் பின்பற்றிவரும்
செப்பமுடைய வாளினைக்கொண்ட வீரர்களாய வணிகர்களின் அரிய தலையைத் துணித்த

செறு பகை வாட்டிய செம்மலொடு – அகம் 332/7

செற்றங்கொண்ட தன் பகையைத் தொலைத்த செருக்குடன்

வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி
மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் – பெரும் 255,256

என்கிறது பெரும்பாணாற்றுப்படை மனைவாழ் அளகு என்பது கோழி.

உழவர் தந்த வெண்மையான நெற்சோற்றை
மனையில் வாழும் பெட்டைக்கோழி(யைக்கொன்று) வாட்டிய பொரியலோடு பெறுவீர்

வாட்டு
வாட்டு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *