Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. விரைவுபடுத்து, 2. கடுமையாக்கு, 3. துள்ளு,

2. (பெ) 1. உந்துசக்தி,  2. வேகம், 

சொல் பொருள் விளக்கம்

விரைவுபடுத்து,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

cause to move swiftly, be forceful, leap, hop, power, force, speed

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

விசும்பு விசைத்து எழுந்த கூதளம் கோதையின்
பசும் கால் வெண் குருகு வாப்பறை வளைஇ – அகம் 273/1,2

வானில் வேகங்கொண்டு எறிந்த கூதாளியின் மாலை போல்
பசிய காலையுடைய வெள்ளாங்குருகு தாவும் சிறகினை வளைத்து

கரும் கை கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த
கூட திண் இசை வெரீஇ மாடத்து
இறை உறை புறவின் செம் கால் சேவல்
இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர் – பெரும் 437-440

வலிய கையினையுடைய கொல்லன் சம்மட்டியை உரத்துக் கொட்டின
கூடத்து எழுந்த திண்ணிய ஓசையை அஞ்சி, மாடத்தின்
இறப்பில் உறையும் புறாவின் சிவந்த காலையுடைய சேவல்
இனிய துயில் (நீங்கி)விரைந்தோடும் பொன் துஞ்சுகின்ற; அகன்ற அரண்மனையிடத்தே
– விசைத்து எறி = ஓங்கிஎறி ; விசைத்து அடி = ஓங்கிஅடி

நறு நெய் கடலை விசைப்ப சோறு அட்டு
பெருந்தோள் தாலம் பூசல்மேவர – புறம் 120/14,15

நறிய நெய்யிலே கடலை துள்ள, சோற்றை ஆக்கி
பெரிய தோளையுடைய மனையாள் உண்கலன்களைக் கழுவ

உடு உறும் பகழி வாங்கி கடு விசை
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின் – குறி 170,171

இறகு சேர்ந்த அம்பினை வலிந்திழுத்து, கடும் சக்தியுடன்
தலைமை யானையின் அழகிய முகத்தில் ஆழச்செலுத்துதலினால்,

புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர்
உயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ
அகல் மலை இறும்பில் துவன்றிய யானை
பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடும் கல்
—————- ———————— —————
வரும் விசை தவிராது மரம் மறையா கழிமின் – மலை 203-210

காய்ந்து, பிஞ்சுத்தன்மை நீங்கிய(பிஞ்சுத்தன்மை நீங்கிக் காய்ந்த) தினைப்புனத்தைச் சுற்றிவந்த குறவர்கள்,
உயரமான இடத்திலுள்ள பரணில் ஏறி, கைகளைத் தட்டி,
பரந்துபட்டுக்கிடக்கும் மலைகளின் புதர்க்காடுகளில் கூட்டமாகத்திரியும் யானைகள்
பகலில் (வந்து)நிற்கும் நிலையைக் குலைக்கின்ற கவண்கள் விடும் மூர்க்கத்தனமான கற்கள்,
———————- ———————– ——————
வருகின்ற வேகம் குறையமாட்டா, (எனவே)மரங்களில் ஒளிந்துநின்று (ப் பின்)கடந்துசெல்லுங்கள்-

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *