சொல் பொருள்
(வி) 1. அழை, 2. இற, 3. அழி, 4. பாடு, 5. தணி, குறை, 6. நில், தடைப்படு, 7. கழி,
2. (பெ) 1. ஓசை, ஒலி, 2. சொல், பேச்சு, குரல், 3. இசை, இசைப்பாட்டு, 4. கூப்பிடுதல், 5. அழைப்பொல , 6. பேரோசை, முழக்கம்
சொல் பொருள் விளக்கம்
அழை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
call, die, perish, be ruined, sing, subside, lessen, abate, cease, be interrupted, pass, pass away, sound, word, speech, voice, music, song, calling, sound of calling, roar
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலி உற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து – மலை 404,405 புலி வந்ததால், (தன்னைக்)கைவிட்டு ஓடிப்போன தான் (இன்னும்)விரும்புகின்ற துணையை எண்ணி, ஆண்மான் நின்று கூப்பிடும் (அக்)காட்டை வழக்கமானபாதையில் சென்றுகடந்து திதியனொடு பொருத அன்னி போல விளிகுவை-கொல்லோ நீயே – அகம் 126/16,17 திதியன் என்பானொடு போரிட்டு மடிந்த அன்னி என்பானைப் போல நீ இறந்துபடுவை போலும். புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப விளிந்தன்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – நற் 178/9,10 பறவைகள் எழுப்பும் ஒலியை மணியின் ஓசையாக எண்ணி உற்றுக்கேட்டு வலி அழிந்து சோர்ந்துபோகிறது அவரை முற்றிலும் நம்பியிருந்த என் நெஞ்சம். காடு கவின் அழிய உரைஇ கோடை நின்று தின விளிந்த அம் பணை நெடு வேய் கண்விட தெறிக்கும் மண்ணா முத்தம் – அகம் 173/12-14 காடுகள் அழகு கெடவும், கோடை பரவி நிலைபெர்று நீரினை உறிஞ்சுதலால் வற்றிய அழகிய பெரிய நெடிய மூங்கிலின் கணுக்கள் பிளக்கத் தெறித்துவிழும் கழுவப்பெறாத முத்துக்கள் இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ – மலை 7,8 இளியென்னும் பண்ணின் ஓசையைத் தானொலிக்கும் குறுகிய பாரமான நெடுவங்கியத்துடன், பாடுவதைச் சுருதி குன்றாமல் கைக்கொள்ளும் இனிய வேய்ங்குழலும் நெருக்கமாகச் சேர்க்கப்பட்டு, விளியா நோய் உழந்து ஆனா என் தோழி நின் மலை – கலி 53/21 சற்றும் குறையாத பிரிவுத்துன்பத்தால் வருந்தி நிற்கும் என் தோழி, விளியாது உரவு கடல் பொருத விரவு மணல் அடைகரை – குறு 316/3,4 இடைவிடாமல் வலிய கடல் மோதுகின்ற மணல் விரவிக்கிடக்கும் அடைத்தகரையில் அளி இன்று பிணி இன்று விளியாது நரலும் கானல் அம் சேர்ப்பனை கண்டாய் போல – கலி 128/5,6 நம்மீது இரக்கமில்லாமல், நம்மைப்போல் துயரமும் இல்லாமல், ஓயாமல் குரலெழுப்புகின்ற அழகிய கடற்கரைச் சோலையின் தலைவனைக் கண்டவளைப் போல நீ உறும் பொய் சூள் அணங்கு ஆகின் மற்று இனி யார் மேல் விளியுமோ கூறு – கலி 88/20,21 நீ கூறும் பொய்ச்சூள் உனக்குத் தெய்வகுற்றம் ஏற்படுத்துமாயின் அதனால் விளையும் கேடு, இனி யார்மேல் இறங்குமோ கூறு!” வளை வாய் கிள்ளை மறை விளி பயிற்றும் மறை காப்பாளர் உறை பதி – பெரும் 300,301 வளைந்த வாயினையுடைய கிளிக்கு வேதத்தின் ஓசையைக் கற்பிக்கும் வேதத்தைக் காக்கின்றோர் இருக்கின்ற ஊரிடத்தே தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி சிறு தலை தொழுதி ஏமார்த்து அல்கும் – நற் 142/6,7 கைத் தண்டினை இன்னொரு காலாக ஊன்றிப் பிடித்து, ஒடுங்கிய நிலையில் உதடுகளை மடித்து எழுப்பும் சீழ்க்கையொலியினால் சிறிய தலையினையுடைய ஆட்டுக் கூட்டத்தை வேறுபக்கம் போகாதவாறு மயங்கச் செய்து தங்கியிருக்கவைக்கும் வள் உயிர் தெள் விளி இடையிடை பயிற்றி கிள்ளை ஓப்பியும் – குறி 100,101 பெருத்த ஓசையுடன் தெளிந்த சொற்களை நடுநடுவே சொல்லி கிளியை ஓட்டியும் கொடும் கோல் உமணர் பகடு தெழி தெள் விளி நெடும் பெரும் குன்றத்து இமிழ் கொள இயம்பும் – அகம் 17/13,14 கடிய தார்க்குச்சிகளையுடைய, உப்புவணிகர் தம் காளைகளை அதட்டும் தெளிந்த குரல்கள் உயர்ந்த பெரிய மலையில் மோதி எதிரொலிக்கும் பல் வயின் கோவலர் ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற – குறி 221,222 பற்பல இடங்களிலுள்ள இடையர்கள் ஆம்பல் எனும் பண்ணினையுடைய இனிய குழலில் தெளிந்த இசையைப் பலமுறை எழுப்ப கிளி கடி மகளிர் விளி படு பூசல் – மலை 329 கிளியை விரட்டுகின்ற பெண்கள் கூப்பிடுதலால் பிறந்த ஆரவாரமும்; வரி புற புறவின் புலம்பு கொள் தெள் விளி – நற் 305/7 வரிகளை முதுகில் கொண்ட புறாவின் தனிமைத்துயருடன் கூடிய தெளிந்த அழைப்பொலியைக் கேட்டு தளி தரு தண் கார் தலைஇ விளி இசைத்தன்றால் வியல் இடத்தானே – நற் 316/9,10 மழைத்துளியைப் பெய்யும் குளிர்ந்த கார்காலத்தைச் செய்து இடிமுழக்கத்தை எழுப்பியது அகன்ற வானப்பரப்பில். – விளி இடிக்குரல் – ஔவை.சு.து.உரை விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்