சொல் பொருள்
1. (வி) 1. விழு, கீழ்நோக்கி இறங்கு, 2. குனி, தாழ், கீழ்நோக்கிச் சாய், 3. விரும்பு, 4. தரைக்கடியில் வளர், 5. தோற்றுப்போ 6. இறக்கச்செய், 7. விழச்செய்,
2. (பெ) 1. விழுது, 2. தாலிக்கயிறு
சொல் பொருள் விளக்கம்
விழு, கீழ்நோக்கி இறங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fall, fall down, bow down, lean downwards, be desirous, grow underground, be defeated, cause to die, cause to fall, aerial root, Cord on which the marriage-badge is strung
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒரு கை கீழ் வீழ் தொடியொடு மீமிசை கொட்ப – திரு 113,114 ஒரு கை கீழ்நோக்கி நழுவி வீழும் தொடி என்ற அணிகலனோடு மேலே சுழல; சேணோன் அகழ்ந்த மடி வாய் பயம்பின் வீழ் முக கேழல் அட்ட பூசல் – மது 294,295 குறவன் தோண்டின, மூடின வாயையுடைய பொய்க்குழியில்(விழுந்த) கீழ்நோக்கிய பார்வையையுடைய ஆண்பன்றியைக் கொன்ற ஆரவாரமும், விசும்பு ஆடு பறவை வீழ் பதி படர – குறி 46 வானத்தில் அலையும் பறவைகள் தாம் விரும்பும் இருப்பிடங்களுக்குச் செல்லும்படியாக, மூன்றே கொழும் கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும்மே – புறம் 109/6 மூன்றாவது, கொழுவிய கொடியையுடைய வள்ளி கிழங்குகளைக் கீழே வளர்க்கும் புகழ் பட பண்ணிய பேர் ஊன் சோறும் கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும் இன் சோறு தருநர் பல் வயின் நுகர – மது 533-535 புகழ்ந்து கூறுமாறு சமைத்த பெரிய இறைச்சிகள் கலந்த சோற்றையும், கீழே போகுமாறு வளர்ந்த கிழங்குடன், பிற பதார்த்தங்களையும், இனிய (கற்கண்டுச்)சோறு தரப்பெற்றோர் பலவிடங்களிலும் உண்ண – வீழ்ந்த – கீழே வளர்ந்த; நச்.உரை, உ.வே.சா விளக்கம் விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடி கவலை – மலை 128 சீரிதாகக் கீழே வளர்ந்தன கொழுவிய கொடியையுடைய கவலைகள் வாய் வாள் எவ்வி வீழ்ந்த செருவில் – அகம் 115/7,8 தப்பாத வாட்படையையுடைய எவ்வி என்பான் வீழ்ந்த போர்க்களத்தே நறவும் தொடு-மின் விடையும் வீழ்-மின் – புறம் 262/1 மதுவை உண்பதற்கேற்றபடி பிழியுங்கள், ஆட்டுக்கடாயையும் வெட்டுங்கள் தன் நலம் காட்டி தகையினால் கால் தட்டி வீழ்க்கும் தொடர் தொடராக வலந்து படர் செய்யும் மென் தோள் தட கையின் வாங்கி தன் கண்டார் நலம் கவளம் கொள்ளும் நகை முக வேழத்தை இன்று கண்டாய் போல் எவன் எம்மை பொய்ப்பது நீ – கலி 97/17-21 தன்னுடைய அழகைக் காட்டி, அதன் தன்மையால் காலைத்தட்டிவிட்டு விழவைக்கும் நட்புறவாகிய சங்கிலியால் கட்டுண்டு, பிறர்க்கு வருத்தத்தைச் செய்யும் மென்மையான தோளாகிய பெரிய துதிக்கையினால் வாங்கிக்கொண்டு, தன்னைக் கண்டவரின் நற்பண்புகளையே கவளமாக உண்ணும் சிரிப்பை முகத்திலே கொண்ட யானையை இன்றைக்குத்தான் பார்த்தது போல ஏன் என்னிடம் பொய்சொல்கிறாய் நீ! வீழ் இல் தாழை குழவி தீம் நீர் – பெரும் 357 விழுதில்லாத தாழையாகிய தென்னையின் இளநீரின் இனிய நீரையும், ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து பின் அமை நெடு வீழ் தாழ – நெடு 136,137 (முன்பு)முத்துமாலைகள் சுமந்த பருத்த முலையினையுடைய மார்பினில் (இப்போது)முறுக்குப்பட்ட நெடிய வீழாகிய மங்கல நாண் (மட்டும்)வீழ்ந்துகிடக்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்