சொல் பொருள்
வெண்மை, வெள்ளாடு, வெள்ளைநிறக்காளை, பலராமன்
வெள்ளை – கள்
சொல் பொருள் விளக்கம்
வெள்ளையடித்தல், வெள்ளை கொண்டு வரல், வெள்ளையான ஆள், வெள்ளைச் சீலை என்பனவெல்லாம் வெளிப்படைப் பொருளே. வெள், வெளிப்படை, வெள்ளி என்பனவும் ‘வெள்’ வழி வந்தனவே. ஆனால் ‘கள்’ளுக்கு வெள்ளை என்பது வியப்பானதே. கள், கருமைப் பொருளது. மதியை மயக்குவதால் அதனைக் கள் என்றனர். ‘காரறிவு’க்கு இடமாவது என்பது அது. ஆனால் கள்ளின் நிறம் வெள்ளையாதலால் கட்குடியர் கள்ளை வெள்ளை என்றும், வெள்ளைத் தண்ணீர் என்றும் குறிப்பர். வெள்ளைக் குதிரையில் வருதல் என்பதும் அதுவே. காரறிவு ஆக்குவது கள் என்பது தெரிந்தாலும் குடியர் ஒப்புவது இல்லையே. அதனால் வெள்ளை என்பதே அவர்கள் விருப்பு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
whiteness, goat, white bull, Balarama
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி – பட் 29 வெள்ளை(வெளேர் என்ற) உப்பின் விலையைச் சொல்லி கொடு முக துருவையொடு வெள்ளை சேக்கும் – பெரும் 153 வளைந்த முகத்தையுடைய செம்மறியாட்டுடன் வெள்ளாடும் கிடக்கும் செவிமறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளை கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவனை சாடி – கலி 101/27,28 காதில் மச்சம் உள்ள, நேர்ந்துவிட்ட, மின்னும் நுண்ணிய சிவந்த புள்ளிகளைக் கொண்ட வெள்ளைக்காளையின் சீற்றத்துக்கு அஞ்சாதவனாய்ப் பாய்ந்த இடையனைத் துவட்டி செம் கண் காரி கரும் கண் வெள்ளை பொன் கண் பச்சை பைம் கண் மாஅல் – பரி 3/81,82 சிவந்த கண்ணும் கரிய மேனியும் உடைய வாசுதேவனே! கரிய கண்ணும் வெள்ளை உடம்பும் உடைய பலதேவனே! பொன்னிறக் கண்ணையும் பச்சைமேனியும் உடைய பிரத்தியும்நனே! பசிய கண்ணையுடைய திருமாலே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்.
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்