1. சொல் பொருள்
ஒரு பண்டைய அரச குலத்தவர்
2. சொல் பொருள் விளக்கம்
வேளிர் என்போர் சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருசார் குடிமக்கள். வேளிர் குடிமக்களின் அரசன்
வேள். அரசன் பெயரோடு வேள் என்னும் சொல்லும் சேர்ந்துவரும். இவர்கள் பெரும்பாலும் வள்ளல்களாக
இருந்தனர்.
சங்ககாலத்தில் வேளிர்கள் மூவேந்தருக்குக் கட்டுப்படாமல் தன்னாட்சி நடத்திவந்தனர். அவ்வப்போது சில
வேந்தர்கள் இவர்களின் உதவியை நாடியிருக்கிறார்கள்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
A class of ancient chiefs in the Tamil country
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பதினொரு வேளிர் சேர, பாண்டியனுடன் சேர்ந்து சோழனை எதிர்த்தது. காய் சின மொய்ம்பின் பெரும் பெயர் கரிகால் ஆர்கலி நறவின் வெண்ணிவாயில் சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் இமிழ் இசை முரசம் பொரு_களத்து ஒழிய பதினொரு வேளிரொடு வேந்தர் சாய மொய் வலி அறுத்த ஞான்றை – அகம் 246/8-13 மிக்க சினமும் வலியுமுடைய பெரிய புகழினைக் கொண்ட கரிகால் வளவன் ஆரவாரமிக்க கள் வளமுடைய வெண்ணிவாயில் என்னுமிடத்தே சிறப்பு வாய்ந்த பகையரசர் மாறுபட்டெழுந்த போரின்கண் மிக்க ஓசையையுடைய வீர முரசம் போர்க்களத்தே ஒழிந்து கிடக்க வேளிர் பதினொருவருடன் இருபெரு வேந்தரும் (சேரனும் பாண்டியனும்)நிலைகெட அவர்தம் மிக்க வலியைக் கெடுத்த நாளில் வேளிர் சேர, சோழருடன் சேர்ந்து பாண்டியனை எதிர்த்தது. இரு பெரு வேந்தரொடு வேளிர் சாய பொருது அவரை செரு வென்றும் – மது 55,56 (சேர சோழர் என்ற)இரண்டு பெரிய (முடியுடைய)வேந்தருடன் குறுநிலமன்னர் பலரும் வீழ பொருது அவரைப் போரில் வென்றும், வேளிர் சோழ, பாண்டியருடன் சேர்ந்து சேரனை எதிர்த்தது. களிறு பரந்து இயல கடு மா தாங்க ஒளிறு கொடி நுடங்க தேர் திரிந்து கொட்ப எஃகு துரந்து எழுதரும் கை கவர் கடும் தார் வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர் வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி – பதி 49/4-9 யானைப்படை பரந்து செல்ல, விரைந்து செல்லும் குதிரைகள் தாங்கித்தாங்கி நடக்க, ஒளிவிடும் கொடிகள் அசைந்து ஆட, தேர்கள் விலகி விலகி வளைந்து செல்ல, வேல்களை எறிந்துகொண்டு மேற்செல்லும், பகைவரின் பக்கவாட்டுப் படைகளை அழிக்கின்ற விரைவான முன்னணிப்படையும், வெல்கின்ற போரினையுடைய வேந்தரும், குறுநில மன்னரும், வஞ்சினம் கூறி, மிகுந்த வலிமையால் மனம் செருக்கி, ஒன்றுகூடி வருகின்ற மோகூர் மன்னனின் வெற்றிதரும் சேனையின் கூட்டம் கலைந்து சிதையும்படி நெருங்கித் தாக்கி, வேளிர்கள் பதினால்வர் சென்று காமூரைத் தாக்கியது. அடு போர் வீயா விழு புகழ் விண் தோய் வியன் குடை ஈர்_எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த கழுவுள் காமூர் போல கலங்கின்று – அகம் 135/10-14 அடும் போரினையும் நீங்காத சிறப்பினையும் வானை அளாவிய பெரிய குடையினையுமுடைய பதினான்கு வேளிர் ஒன்றுகூடித் தாக்கியதுமாகிய கழுவுள் என்பானுடைய காமூரைப் போலக் கலங்கியது இந்த வேளிர்கள் நீண்ட காலம் தமிழகத்தில் அரசாண்டு வந்தனர் என்பது அவரைத் தொன்று முதிர் வேளிர் என்று குறிப்பதால் உணரலாம். தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன என் – நற் 280/8 தொன்று முதிர் வேளிர் குன்றூர் குணாது – குறு 164/3 தொன் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த – அகம் 258/2 பொன் அணி யானை தொன் முதிர் வேளிர் – புறம் 24/21
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்