Skip to content

சொல் பொருள்

(வி) 1. சமை, 2. காய்ச்சு, 3. கொல், 4. அழுத்து, 5. அழி, 6. அடுத்து இரு, அண்மையாகு, 

சொல் பொருள் விளக்கம்

1. சமை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

cook, boil, kill, press down, destroy, be next, near

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மழை வீழ்ந்து அன்ன மா தாள் கமுகின்
புடை சூழ் தெங்கின் மு புடை திரள் காய்
ஆறு செல் வம்பலர் காய் பசி தீர
சோறு அடு குழிசி இளக விழூஉம் – பெரும் 363-366

மேகங்கள் விழுந்ததைப் போன்ற பெரிய தண்டினையுடைய கமுகுகளின்
பக்கத்தே சூழ்ந்த தெங்கினுடைய மூன்று புடைப்பினையுடைய திரண்ட காய்,
வழிச்செல்கின்ற புதியோருடைய மிக்க பசி தீரும்படி,
(அவர்)சோற்றை ஆக்குகின்ற பானை அசையும்படி விழுகின்ற

இல் அடு கள் இன் தோப்பி பருகி – பெரும் 142

(தமது)இல்லில் சமைத்த கள்ளுக்களில் இனிதாகிய நெல்லால் செய்த கள்ளை உண்டு,

சேரி அம் பெண்டிர் சிறு சொல் நம்பி
சுடுவான் போல நோக்கும்
அடு பால் அன்ன என் பசலை மெய்யே – நற் 175/7-9

நம் சேரியிலுள்ள பெண்டிர் கூறிய இழிந்த சொற்களை நம்பிச்
சுடுவது போலப் பார்க்கிறாள் –
காய்ச்சுதற்குப் பெய்யும் பாலைப் போன்ற என் பசலை பரந்த மேனியை

இரும் கேழ்
ஏறு அடு வய புலி பூசலொடு அனைத்தும்
இலங்கு வெள் அருவியொடு சிலம்பகத்து இரட்ட – மது 297-299

கரிய நிறத்தையுடைய
பன்றியைக் கொல்லும் வலிமையினையுடைய புலியின் ஆரவாரத்தோடு, எல்லா ஆரவாரமும்
விளங்குகின்ற வெள்ளிய அருவி முழக்கத்தோடே மலைச்சாரல்களில் எதிரொலிக்க

தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி – குறி 150

(பாகன்)அங்குசம் அழுத்திய ஆண்யானை போல எழுச்சியுண்டாகக் கைகளை உயர்த்தி,

பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம்
நீர் அடு நெருப்பின் தணிய இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே – – நற் 154/8-10

பெருந்துன்பம் வந்து மோதியதால் குற்றமுள்ள நெஞ்சம்
நீர் பெய்த நெருப்பைப்போல தணியுமாறு, இன்று அவர்
வராமல் இருந்தால் நல்லது!

சிறை அடு கடும் புனல் அன்ன என்
நிறை அடு காமம் நீந்தும் ஆறே – நற் 369/10,11

அணையை உடைத்துச் செல்லும் விரைவான வெள்ளப்பெருக்கைப் போல என்
மனவுறுதியை உடைத்துச் செல்லும் காமவெள்ளத்தை நீந்திக்கடக்கும் வழி

குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே – புறம் 379/18

அரணை அடுத்த ஆழ்ந்த அகழினையும் நீண்ட மதிலினையும் உடைய ஊர்க்கு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *