சொல் பொருள்
(பெ) 1. அறவோர்,
சொல் பொருள் விளக்கம்
(1) அந்தணர் – வேதாந்தத்தை எக்காலமும் பார்ப்பார். (மதுரைக் காஞ்சி. 474. நச்.)
(2) அந்தத்தை அணவுவார் அந்தணர் என்றது, வேதாந்தத்தையே பொருள் என்று மேற்கொண்டு பார்ப்பார் என்றவாறு. (கலி. கடவுள். நச்.)
(3) அந்தணர் என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின் அஃது அவ் அருளுடையார் மேல் அன்றிச் செல்லாது என்பது கருத்து. (திருக். 30. பரி.)
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். – திருக்குறள் 30.
(4) அந்தணர் என்னுஞ் சொல் அழகிய குளிர்ந்த அருளை உடையவர் என்னும் பொருளது. அருளாவது ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரைப்பட்ட எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டு அன்பு செய்தல். (திருக்குறள். மரபுரை. 30.)
(5) அம் – அழகு. தண் – குளிர்ச்சி. குளிர்ச்சியில் அழகிய குளிர்ச்சியாவது அருள். எனவே ‘அந்தணர்’ என்பதற்கு ‘அருள் ஒழுக்கமுடையார்’ என்பது இனிய செம்பொருள். (கலி. கடவுள். உரைவிளக்கம். இளவழ.)
(6) அந்தணர் என்ற சொல்லைத் திருவள்ளுவர் இல்லறத்தாரினும் துறவறத்தாரினும் எவ்வளவோ மேம்பட்ட மதிப்புடைய மேலோரைக் குறிக்கவே வழங்குகிறார் என்பது தெளிவு. ஏனெனில் அவர் கடவுளையே அந்தணன் என்று சுட்டத் தயங்கவில்லை. (குறள் : 8) இல்லறத்தாராகவோ, துறவறத் தாராகவோ வாழும் நிலையுடைய எவரையும், எச்சாதியினரையும் எந்தப் பொது நிலை சிறப்பு நிலை மனிதரையும்கூட அது குறிக்க முடியாது என்று கூறத் தேவையில்லை. கிட்டத் தட்டக் கடவுள் நிலையையே சென்று எட்டிக் கடவுள் பண்பையே அடைந்து விட்ட உச்ச உயர்நிலை வாய்ந்த இனத்தலைவர்களையே அது குறிப்பது ஆகும். நோன்பு நிலையும் தவநிலையும் துறவு நிலையும் தாண்டிக் கடவுளின் அன்பருள் திருவுருவேயாகி எவ்வுயிர்க்கும் தாயாகி நின்ற தண்ணளிப் பண்புடையாரே அந்தணர் (குறள் : 30) என்று திருவள்ளுவர் இச்சொல்லுக்குத்
தாமே விளக்கம் தருகிறார். அவர் இத்தகைய உயர் பொருள் குறித்து வழங்கிய சொல்லை வேறு பொருளில் வழங்கும் உரிமை
எவருக்கும் கிடையாது. (திருக்குறள் மணிவிளக்கவுரை. 80.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
virtuous person
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விரி நூல் அந்தணர் விழவு தொடங்க புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப – பரி 11/78,79 விரிந்த மெய்ந்நூல்களையுணர்ந்த அறவோர் திருவிழாவைத் தொடங்கா நிற்ப முப்புரியாகிய பூணுலையுடைய பார்ப்பனர் அவ்விழவின்கண் பொன்கலங்களை ஏந்தாநிற்ப – விரி நூல் அந்தணர் என்றது அறவோரை. – புரிநூல் அந்தணர் என்ரது பார்ப்பனரை – பொ.வே.சோ.உரை, விளக்கம் அந்தணர் என்பது பார்ப்பனரையே குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம் – திரு 96 அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் – சிறு 204 ஓதல் அந்தணர் வேதம் பாட – மது 656 நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை – பரி 3/14 ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து – கலி 1/1 முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல் – கலி 126/4 மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே – புறம் 1/6 கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு – புறம் 361/4 அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த – புறம் 397/20 யானே பரிசிலன், மன்னும் அந்தணன் – புறம் 200/13 அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே – புறம் 201/7 இவை, பார்ப்பனராகிய புலவர் கபிலரின் கூற்றுகள். ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ – பரி 5/22 பிரம்மதேவன் செலுத்தும் முறையை அறிந்தவனாக, குதிரையைச் செலுத்த, இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன் உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக – கலி 38/1,2 இமையமலையாகிய வில்லை வளைத்த, கங்கை தங்கும் சடைமுடியோனாகிய சிவன் உமையவளோடு அமர்ந்து உயர்ந்த மலையில் இருக்கும்போது, அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும் – கலி 99/2 அறத்தொழிலாக இன்புறுத்தும் அந்தணராகிய வியாழன், வெள்ளி ஆகிய இருவரும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்